23 டிசம்பர் 2012

டெல்லியும் தூத்துக்குடியும் இருப்பது ஒரே நாட்டில்தானே!


டெல்லியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் தாதன் குளத்தில் பள்ளிக்கூட மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். டெல்லி சம்பவம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்து விட்டது. ஆனால் தூத்துக்குடி சம்பவம் தமிழ்நாட்டில் கூட நிறைய பேருக்கு தெரியவில்லை. இதற்கு காரணம் ஊடகங்கள் என்று பலரால் குற்றசாட்டுக்கள் வாசிக்கப்படுகின்றன.


அநியாயங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஜனநாயகத்தின் ஏழாவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகத் துறையே. இந்தியாவில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா என்றால் கேள்விக்குறியே ! ஊடக சுதந்திரம் என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறு படுகிறது.


இந்திய தலைநகர் புதுடெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆட்சிக்கட்டிலில் இருப்பது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், புதுடெல்லியில் ஊடகங்கள் மிரட்டப்படவில்லை என்பது கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரச்சம்பவத்திற்கு அடுத்து நடந்து வரும் நிகழ்வுகள் நிருபித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, பாசிசத்தின் மொத்த உருவமாக திகழ்கிற ஜெயலலிதாவின் ஆட்சிக் காலமாக இருந்தாலும் சரி ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் மிரட்டப்பட்டும், பல்வேறு வழக்குகளையும் சந்தித்து வந்துள்ளது. தூத்துக்குடி பள்ளி மாணவிக்கு நேர்ந்த அவமானகரமான செயல் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்தது, தமிழகத்தில் ஊடகங்கள் எந்த அளவிற்கு மிரட்டப்பட்டுள்ளது என்பதற்கு சாட்சியே.


ஜெயலலிதாவின் ஆட்சிகாலங்களில் ஊடக சுதந்திரம் அறவே இருந்ததில்லை. ஜெயலலிதாவின் 1991 - 96 ஆட்சிக்காலத்தில் தராசு பத்திரிக்கையும், அதன் நிறுவனரும் எதிர் கொண்ட சிரமங்கள் எத்தனை எத்தனை ! அதுமட்டும் அல்லாது துக்ளக், தினமலர், விகடன் குழுமம் என்று அனைத்து பத்திரிக்கைகளும் அரசியல்வாதி குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. சமீபத்தில் நக்கீரன் அலுவலகத்தில் அதிமுக குண்டர்கள் நடத்திய தாக்குதலை நாம் அறிவோம். இன்னும் சொல்லப்போனால் குடும்பத் தகராறில் மதுரை தினகரன் அலுவலகம் தீ கொளுத்தப்பட்டும், மூன்று அப்பாவி ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்ட அவலமும் நடந்தது.


தமிழகத்தில் இணையதள செயற்பாட்டாளர்களுக்கு கூட பெரும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதையே தோழர்கள் ராஜன், சரவணன், செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.


நிலைமை இவ்வாறு இருக்க, அரசியலில் ஊழல் செய்து பருத்துவிட்ட அரசியல்வாதிகள் தங்கள் தரப்பு செய்திகளை (உண்மைக்கு புறம்பான) மக்களிடத்தில் கொண்டு செல்ல தமிழகத்தின் ஊடகத் துறையை வலுவாக ஆக்டோபஸ் கரங்கள் போல் கைப்பற்றி கொண்டார்கள். திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், தேமுதிக என ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று தொலைக்காட்சி சேனல்களை வைத்து இருக்கிறார்கள். இவர்கள் தான் இன்று தமிழகத்தின் ஊடக தர்மத்தை நிலைநாட்டுகிறார்கள். அதாவது கிளியை பிடித்து பூனையிடம் கொடுத்தது போன்று !!


ஆக தமிழகத்தில் சமூக அவலங்கள் நடைபெறுகிற போது மேற்குறிப்பிட்ட ஊடகங்கள், அச்செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. காரணம் இவர்கள் ஊடகத்துறையை கைப்பற்றி கொண்டது, சமூக நலன் கருதி அல்ல. தாங்கள் செய்கின்ற தவறுகளை மறைக்கவே ஊடகங்களை கைப்பற்றிக் கொண்டார்கள். எனவே தோழர்கள் நாம், டெல்லி மாணவிக்கு நடந்த அவலத்தை கண்டு கொண்ட ஊடகங்கள், தமிழ்நாட்டு பள்ளி சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை ஏன் கண்டுகொள்ள வில்லை என்று வருந்த வேண்டியது இல்லை.


மேற்குறிப்பிட்ட ஊடகங்களை, அதன் நிலைப்பாடுகளை, அதன் உண்மை முகங்களை, நாம் தான் மக்களிடம் கொண்டு சென்று தோலுரிக்க வேண்டும்.- சா.வால்டேர் வில்லியம்ஸ்.

8 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அடக்க அடக்க தான் நாம் நமது உரிமையை நிலை நாட்ட பாடுபடுவோம் ...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நண்பர் அதிரடி ஹாஜா அவர்கள் பதில் என் கருத்து...

அதையே இங்கு பதிவிடுகிறேன்...டெல்லி இந்தாவில் இருக்குங்க தமிழ்நாடு என்ன இந்தியாவிலா இருக்கு...

அங்க இருக்கிறது தான் மானம் இங்க...


இந்த மானங்க கெட்ட மீடியாக்களும் ஒருதலைப்பட்சமாவே பேசிவருகிறது. இன்னும் இருக்கிறது நகரம் கிராமம் என்ற பாகுபாடு..

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொறுவருயை பிரச்சனையையும் ஒரே பிரச்சனையாக கையாளும் வரை இந்தியா வல்லரசை நோக்கி நகராது...


இதுபோன்ற நபர்களை மரண தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும்

குலசேகரன் சொன்னது…

இருக்குது சார் இருக்குது. ஒரே நாட்டில்தான்.

தில்லிப்போலீசு தில்லியரசின் கீழ் வருவதில்லை. அது நேரடியாக சுசில்குமார் ஷிண்டேயின் மத்திய உள்துறையமைச்சின் கீழ் வருவது.

அப்போலீசு தவறு செய்தால் மத்திய அரசைத்தான் தட்டிக்கேட்ப்பார்கள். அதாவது பாராளுமன்றம் மூலமாக.

தூத்துக்குடி போலீசு ஜெயலலிதா அரசின் கீழ் வருவது. பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினால் அதிமுக எம்பிக்கள் எப்படி மத்திய அரசு எங்கள் மாநில சட்டம் ஒழுங்கு பிர்ச்சினையில் தலையிடலாமென்று கேட்பார்கள்!

என்ன சொல்வீர்கள்?

sixth sence சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அகல் சொன்னது…

குலசேகரன் அவர்கள் கூறியது தான் இந்த நிகழ்வுகளில் இருக்கும் எதார்த்தம்.

தமிழ் காமெடி உலகம் சொன்னது…

மிகவும் வேதனைக்குரிய விஷயம்......

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

ரியாஸ் அஹமது சொன்னது…

நண்பரே உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறேன் நன்றி . நேரம் இருந்தால் இங்கே வந்து பாருங்கள் http://blogintamil.blogspot.com/2013/01/2517.html