04 ஆகஸ்ட் 2012

21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் !

சிரவணனின் கதையை நாம் பலரும் அறிந்திருப்போம்.தாய், தந்தை பாசத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவன் சிரவணன்.வயதான பார்வையற்ற தனது தாய் தந்தையரை தொட்டிலில் வைத்து தோளில் சுமந்தான் சிரவணன்.

ஆனால் இப்போது அதற்கு நேர் மாறாகத்தான் அனேக இடங்களில் நடக்கிறது.வயதான பெற்றோர்களை பலர் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுகின்றனர்.பல பெற்றோர்கள் பிள்ளைகளை வசதியாக வாழ வைத்துவிட்டு தங்கள் வாழ்கையை நரகமாக கழித்துக் கொண்டிருக்கின்றனர்.


ஆனால் இன்றும் தனது தாயை தோளில் சுமக்கும் ஒரு மகன் இருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா.இவர் பெயர் பல்வீந்தர்சிங் . இவரது தாய்க்கு பார்வை போய்விட்டது.கடந்த இரண்டரை வருடங்களாக இவர் தனது தாயை தோளில்  சுமந்து பல்வேறு புனிதத் தலங்களுக்கு அழைத்து சென்று வருகிறார்.21 ஆம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு மனிதன் வாழ்வது அதிசயமாகத்தானே உள்ளது.

பெற்றோர்களை சுமக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு சுமை ஏற்படுத்தாமலாவது   நாம் வாழலாமே.

03 ஆகஸ்ட் 2012

ஏன் மழை பெய்யவில்லை?

இந்த கதையில வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.

பரதாபுரி என்னும் ஒரு அழகான ஊர் இருந்தது.மழை வளமும்  செல்வச் செழிப்பும் நிறைந்திருந்த அந்த ஊரில் திடீரென கடும் பஞ்சம் ஏற்பட்டது.மக்களிடம் பணம் இருந்தது ...ஆனால் சாப்பிட உணவு கிடைக்கவில்லை,குடிக்க நீர் கிடைக்கவில்லை.


எனவே ஊர் தலைவர்  தலைமையில் ஊரின் எல்லையில் அமைந்திருந்த அவ்வூரின் காவல் தெய்வத்திடம் சென்று ஊர் மக்கள்  முறையிட்டனர்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது .மக்களே இந்த ஊரில் நல்லவர்களாக இருந்த அனைவரும் கெட்டுப் போய்விட்டீர்கள் .அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தவறான வழியில் சம்பாதித்து வருகிறீர்கள்.உங்களுக்கு ஒரே ஒரு நாள் அவகாசம் தருகிறேன்...இன்னும் 24  மணி நேரத்திற்குள் அனைவரும் தவறான வழியில் சேர்த்த பணத்தை இந்த கோவிலில் கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் . அவ்வாறு செய்யவில்லையெனில் மேலும் பஞ்சத்தை அதிகமாக்கி அனைவரையும் கொன்றுவிடுவேன் என எச்சரித்தது.

உடனடியாக மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளை நோக்கி ஓடினர்.தவறான வழியில் சேர்த்த பணத்தையெல்லாம் கோவிலில் கொண்டு வந்து சேர்த்தனர்.

24  மணி நேரம் கடந்தது...எனினும் மழை வருவதற்குரிய எந்த அறிகுறியும் தென்படவில்லை .எனவே மக்கள் மீண்டும் கடவுளிடம் முறையிட்டனர்.

அப்போது மீண்டும்  அசரீரி ஒலித்தது.என் மீது தவறு இல்லை ...இந்த ஊரிலுள்ள அனைவரும் தவறான வழியில் சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து சேர்க்கவில்லை என்றது அசரீரி.

உடனே மக்கள் கூட்டத்தில் சுற்றுமுற்றும் பார்த்தனர்...அங்கே ஒரு ஓரத்தில் நான்கைந்து பேர் வெறும் கையுடன் நின்றுகொண்டிருந்தனர்.உடனே ஊர் தலைவர் அவர்களிடம் சென்று நீங்களெல்லாம் தவறான வழியில் ஒரு காசுகூட சம்பாதிக்கவில்லையா வெறும் கையுடன் நிற்கிறீர்கள் என்று அதட்டினார் .

அதற்கு அவர்கள் மன்னிக்கவேண்டும் தலைவரே நாங்கள் தவறான வழியில் சம்பாதித்த பணத்தையெல்லாம் வெளி  நாட்டில் பதுக்கிவிட்டோம்.அவை எல்லாவற்றையும் கப்பலில் ஏற்றி கொண்டு வர சொல்லியிருக்கிறோம் ...விரைவில் வந்துவிடும் ...அது வரை சற்று பொறுக்கவேண்டும் என வேண்டினர்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த  மக்கள் அனைவரும் தலையில் கை வைத்துக்கொண்டு கப்பலின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

01 ஆகஸ்ட் 2012

எரித்தாலும் ஆபத்து... புதைத்தாலும் ஆபத்து என்னதான் செய்வது மின்குப்பையை?

நன்றி: புதிய தலைமுறை 

அதிஷா

எப்போதும் இல்லாத அளவுக்கு மின்னணுக் கழிவுகள் தமிழகம் எங்கும் மலைபோல் குவிகின்றன. விளைவு, இந்திய அளவில் மின் கழிவு உற்பத்தியில் தமிழகத்திற்கு இரண்டாமிடம்!

ம் வருங்காலம் நம் கண்முன்னே நஞ்சுவைத்துக் கொல்லப்படுகிறது. நம்முடைய நிலத்தடி நீரும், மண்வளமும் விஷமாகின்றன. காரணம், மலைபோல் குவிந்துவரும் மின்-கழிவுகள் (E - WASTE). சென்ற ஆண்டு மட்டுமே 28,789 மெட்ரிக் டன் அளவுக்கு சென்னையில் மின்கழிவுகள் குவிந்துள்ளன. இந்த ஆண்டு இதன் அளவு இரட்டிப்பாகலாம் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள். இது அடுத்த இருபது ஆண்டுகளில் இரண்டு லட்சம் டன் என்னும் அளவுக்கு உயரும் என பயமுறுத்துகின்றனர். சென்னை நகரத்தில் மட்டுமே ஒவ்வொரு நாளும் 4,500 டன் மின்கழிவுகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது! இந்திய அளவில் மின்கழிவு உற்பத்தியில் சென்னைக்கு நான்காமிடம்.

சின்ன ரிமோட் கண்ட்ரோல் பழுதடைந்துவிட்டதா? அதை சரி செய்வதெல்லாம் ஃபேஷன் கிடையாது. தூக்கி குப்பையில் போடு. புதிது வாங்கிக்கொள்வோம். கம்ப்யூட்டர் மானிட்டர் தொடங்கி மிக்ஸி, எம்பி3 பிளேயர், கேமரா, லேப்டாப், செல்போன், டி.வி., டிவிடி பிளேயர், டிவிடி, விசிடிகள் என இன்னும் ஏகப்பட்ட மின் மற்றும் மின்னணு சமாச்சாரங்கள் அப்டேட் ஆக ஆக பழையவை குப்பைக்குச் செல்கின்றன அல்லது காய்லாங்கடையில் எடைக்கு போடப்படுகின்றன. இந்த மின்னணுக் கழிவுகளால் என்ன பிரச்சினை? அவற்றினால்  சுற்றுச்சூழல் எப்படிப் பாதிக்கப்படுகிறது? இவற்றால் நமக்கு என்ன பாதிப்புகள் உண்டாகும்? அணுக்கழிவுகளை விட இந்த மின்கழிவுகள் ஆபத்தானவை என்பதை அறிந்துகொள்ளாமலே நிறுவனங்கள்  சந்தைப்படுத்தும் புதுப்புதுப் பொருட்களை நாமும்  வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இன்றைய கவலைக்குரிய நிலை.

மின்கழிவின் பூர்வாங்கம்!

மின்கழிவு என்பது ஏதோ செவ்வாய்க் கிரகத்திலிருந்து நம் பூமியைப் பாழாக்க பாய்ந்து வந்த விண்கல் கிடையாது. நாம் பயன்படுத்தி குப்பையில் போடும் காப்பர் ஒயர்களில் தொடங்கி பழைய மிக்ஸி, டி.வி., கணினி, மொபைல் போன், டிவிடி பிளேயர், ட்யூப் லைட், தொலைபேசி இன்னும் மின்சாரத்தால் இயங்கிக் கொண்டிருக்கிற எல்லாமே பயன்படுத்துவதற்கான தகுதியை இழக்கும்போது மின்கழிவாகி விடுகிறது. தமிழகத்தில் குவியும் இருபத்தியெட்டாயிரம் டன் மின்கழிவில் 60 சதவிகிதம் பழைய கணினிகள் மட்டுமே என்பது அதிர்ச்சித் தகவல்.

"வேகமாக வளரும் பொருளாதாரம், அது சார்ந்த புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகள், அதிகரித்துவரும் நுகர்வுக் கலாச்சாரம் இவைதான் கடந்த பத்தாண்டுகளில் மின்கழிவுகள் மலைபோல் குவியக் காரணம்" என்கிறார் ‘டாக்ஸிக் லிங்க்ஸ்’ அமைப்பின் அருண்செந்தில்ராம்.

இவையெல்லாம் மக்காத குப்பைகளாக ஒருபுறம் குவிந்து கொண்டிருக்க, இவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் அரசு விழிபிதுங்கிப் போய் அலைகிறது. பழைய கணினிகளால் உண்டாகும் மின்கழிவின் அளவு மட்டுமே அடுத்த பத்தாண்டுகளில் 500 மடங்கு அதிகரிக்கும் என்கிறது ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் அறிக்கை.

காயலான் கடை வில்லன்கள்

உங்கள் வீட்டில் ஒரு பழைய மானிட்டரும் கீபோர்டும் மவுசும் பல நாட்களாய் கிடக்கின்றன. கொண்டுபோய் காயலான் கடையில் எடைக்குப் போட்டுவிடுகிறீர்கள். அதற்குப் பிறகு அவை என்னாகும் என்று தெரியுமா? நம்முடைய பழைய எலெக்ட்ரானிக் பொருட்கள் காயலான் கடையில் உடைத்து நொறுக்கப்படுகின்றன. அதிலிருக்கிற நல்ல விலை கிடைக்கிற இரும்பு, பிளாஸ்டிக், அலுமினியம் மாதிரியான பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதனால் பெரிய பாதிப்பில்லை. இதற்குப் பிறகு இவர்கள் கையாளுகிற முறைகள்தான் சுற்றுச்சூழலின் வில்லன்கள்.

பிவிசி ஒயர்களை எரித்து காப்பரை பிரித்தெடுப்பது, வெறும் கைகளால் கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளை கையாள்வது, அவற்றில் இருக்கிற விலை உயர்ந்த உலோகங்களை அமிலத்தைப் பயன்படுத்திப் பிரிப்பது போன்ற ஆபத்தான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. பயன்படுத்தக்கூடிய விலை கிடைக்கக்கூடிய பொருட்களைப்பிரித்தெடுத்தவுடன் மீதமுள்ளவை குப்பையில் கொட்டப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக இந்த சர்க்யூட் போர்டுகளைப் போட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கின்றனர். இதுதான் தமிழகம் முழுக்கவே தற்போதைய காயலான் கடைகளில் பயன்படுத்தப்படும் மறுசுழற்சி முறை! இவைதான் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்கக் கூடியதாக உள்ளன. இதனால் இந்த மின்கழிவுகளைக் கையாள்பவர்களுக்கு மட்டுமின்றி, இந்தச் சமூகத்துக்கே மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது.

பாதிப்பு என்ன?

நம் உடல்நலத்தையும் இவை விட்டு வைப்பதில்லை. ட்யூப் லைட்டுகளில் இருக்கிற பாதரசம் நம் கல்லீரலைப் பாதிக்கும் வலிமை கொண்டவை. பிரிண்டர் இங்குகளிலும் டோனர்களிலும் பயன்படுத்தப்படும் கேட்மியம் நம்முடைய கிட்னியை நேரடியாகப் பாதிக்கும் சக்தி கொண்டவை. மின்கழிவுகளில் பரவலாகக் காணப்படும் நஞ்சான பெரிலியம் நம்முடைய நுரையீரலை பாதிக்கச்செய்து புற்றுநோயை உண்டாக்குமாம்.

இந்த நச்சுப்பொருட்கள் நம்முடைய டிஎன்ஏவை கூட பாதிப்படையச் செய்யும் வலிமை கொண்டவை என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

சீனாவின் ஜேஜியங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வறிக்கை, தவறான முறைகளில் கையாளப்படும் மின்கழிவுகளால் காற்றுமாசடைகிறது, அதனை சுவாசிக்கும் மக்களுக்கு டிஎன்ஏ பாதிப்பும், கேன்சரும் உண்டாகிறதென்றும் கூறுகிறது.

மறுசுழற்சி பண்ணுங்க!

இப்பிரச்சினைக்கு தற்போது முன்வைக்கப்படும் மிக முக்கியமான தீர்வு, ரீசைக்கிளிங் எனப்படும் மறுசுழற்சி முறை. நாம் பயன்படுத்தும் கணினியில் இருக்கிற மைக்ரோ பிராசசர் தொடங்கி, மொபைல் போன் வரைக்கும் எல்லா பொருட்களும் மறுசுழற்சிக்கு ஏற்றவைதான். இதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும். அதோடு, நம் கனிம வளங்களும் காக்கப்படும்.

நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களில் 90 சதவிகிதம் முழுமையாக மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகிக்கக் கூடியவைதான். ஆனால் இந்தியாவில் கொட்டப்படும் நான்கு லட்சம் டன் மின்கழிவில் வெறும் நான்கு சதவிகிதம்தான் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களிடம் செல்கிறது. மீதமுள்ள அனைத்தும் தவறானவர்களின் கைகளில் சிக்கி நிலத்தையும், நீரையும்,நம்மையும் மாசடையச் செய்கின்றன அல்லது மக்காத குப்பையாக மண்ணில் கொட்டப்படுகின்றன.

"சென்னையில் மட்டுமே 18 மறுசுழற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், அவை போதிய மின்கழிவுகள் கிடைக்காமல் ஏனோதானோ என்றுதான் இயங்குகின்றன. மறுசுழற்சிக்கு ஓரளவு செலவாகும். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கும். அதனால், நாம் பழைய மின்கழிவுகளைப் பெற அதிகப் பணம் தர இயலாது.  ஆனால் அங்கீகாரம் பெறாத ஆட்கள், அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதால் அதிக விலை கொடுத்து இதைப் பெறுகின்றனர். பெரிய ஐ.டி. நிறுவனங்களும் அதிகமாக விலை கொடுப்பவருக்கே தங்களுடைய பொருட்களைக் கொடுப்பதால், எங்களால் திறம்பட எதையும் செய்ய முடிவதில்லை. இது கட்டுபடுத்தப்படவேண்டும்" என வருத்தத்தோடு கூறுகிறார் குளோபல் ரீசைக்கிளிங் நிறுவனத்தின் மலர்மன்னன்.

என்னதான் தீர்வு?

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களிடம் நம்முடைய மின்கழிவுகள் சேரவேண்டும். இந்த மின்கழிவுகள் மிகச் சரியாக சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத வகையில் மறுசுழற்சி செய்யப்படவேண்டும். அதோடு, அந்த விவரங்கள் அனைத்தும் ஆண்டுதோறும் அரசால் ஆடிட் செய்யப்படவேண்டியதும் அவசியம்.

"எங்களிடம் கிடைக்கிற இந்த மின்கழிவுகளை ஆறு கட்டங்களாக மறுசுழற்சி செய்கிறோம். முதலில் வகைப்படுத்துதல், அவற்றில் பயன்தரும் பொருட்களைப் பிரித்தெடுத்தல், நச்சுத்தன்மை உள்ளவற்றை இனங்காணுதல், பாகங்களைப் பிரிப்பது, அவற்றை விதிமுறைகளின்படி மறுசுழற்சி செய்வது என இவை நடக்கிறது" என்கிறார் மலர்மன்னன்.

மின்கழிவுகள் தவறான கைகளில் சிக்குவதை கட்டுப்படுத்தவும், உற்பத்தியாளர்கள், நுகர்வோர், மறுசுழற்சியாளர்கள் என ஒவ்வொருவருக்குமானபொறுப்புகளையும் 2011ல் சட்டங்களாக இந்தியா அறிவித்தது. இவை கடந்த மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.

உற்பத்தியாளர்களுக்கு கிடுக்கிப்பிடி!

மின்னணுக் கழிவுகளை கையாளுதல் சட்டம் 2011 எக்ஸ்டென்டண்ட் புரொடியூசர் ரெஸ்பான்சிபிலிட்டி என்னும் வழிமுறையை அறிவுறுத்துகிறது. அதாவது உற்பத்தியாளரே மின்கழிவுக்கான பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கென மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தில் பல்வேறு மறுசுழற்சியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்கியுள்ளது. அவர்களிடம் மட்டுமே உற்பத்தியாளர்கள் தங்களுடைய மின்கழிவுகளை அளித்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது. ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் தங்களுடைய பொருட்களுக்கான குப்பைகளைப்பெற கலெக்‌ஷன் சென்டர்களை உருவாக்கவும் அது வலியுறுத்துகிறது. இதையடுத்து டெல், சாம்சங், எச்.பி. மாதிரியான பெரிய நிறுவனங்கள் இதனை செயல்படுத்த தொடங்கியுள்ளது நல்ல தொடக்கமாக உள்ளது. டெல் நிறுவனம் தங்களுடைய லேப் டாப்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் ஐயான் பேட்டரிகளை பெற்றுக்கொண்டு புதிய பேட்டரிகள் வாங்கும்போது 500 ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது.

நோக்கியா நிறுவனம் நாடு முழுக்க 1,500 இடங்களில் தங்களுடைய பழைய செல்போன்களை பெறும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. எச்.பி. நிறுவனம் உபயோகித்த கேட்ரிஜ்களை வாங்கி மறுசுழற்சி செய்து, புதிய கேட்ரிஜ்களை விற்கிறது.

"பெரிய நிறுவனங்கள் இவற்றையெல்லாம் செய்தாலும், திரும்பப் பெறப்படும் மின்கழிவுகள் முறையான வழிகளில் மறுசுழற்சிக்கு செல்கிறதா என்பதையும் அரசு கண்காணிக்க முன்வரவேண்டும்" என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன்.

தேவை விழிப்புணர்வு

"சென்னையில் மட்டுமே பல ஆயிரம் டன் அளவுக்கு மின்கழிவுகளைக் குவிக்கிறோம். மின்கழிவுகளில் உள்ள நச்சுப் பொருட்கள், அதனால் நமக்கும் சுற்றுச்சூழலுக்கும் உண்டாகும் பாதிப்புகள் குறித்து நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை குழந்தைகளிடம் இதுகுறித்துப் பேசவேண்டும். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இதைப்பற்றி போதிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்" என்கிறார்,‘டாக்ஸிக் லின்க்’ அமைப்பின் அருண் செந்தில்ராம்.

கர்நாடகா ஏற்கெனவே விழித்துக் கொண்டுவிட்டது. மங்களூருவில் வீட்டுக்கு வீடு மின்கழிவுகளைப் பெறும் வசதியை அரசே ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் தொடர்ந்து இதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. பெறப்பட்ட குப்பைகள் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு மறுசுழற்சிக்குச் செல்கின்றன. அரசு இதுபோன்றமுன்மாதிரி திட்டங்களை நாடுமுழுக்க செயல்படுத்த முன்வரவேண்டும்.

ஈகோ ஏடிஎம்!

சென்ற மாதம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கண்காட்சியில் ஈகோ ஏடிஎம் (ECO ATM–) என்னும் இயந்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த இயந்திரம் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களைப் பெற்றுக்கொண்டு பணம் தரும் ஏடிஎம் மெஷின் போல இயங்கும். தேவையற்ற செல்போன்கள், ஐபாட், ஐபேட், எம்பி3 பிளேயர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களை இதில் போடவேண்டும். அதற்கான டிரேயில் முதலில் பொருளை வைக்க வேண்டும். சில வினாடிகளில் அதைக் கருவி உள்ளிழுத்துக் கொள்கிறது. அதைப் பல கோணங்களில் ஸ்கேன் செய்து தரத்தை மதிப்பிடுகிறது. அதற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற தகவல் திரையில் மின்னுகிறது. தொகை நமக்கு ஓ.கே. என்றால் அதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனே பணம் வெளியே வரும். தொகை கட்டுப்படி ஆகாவிட்டால் கேன்சல் என அழுத்தவேண்டும். பொருள் வெளியே வந்துவிடும். பில் போவெல்என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்துள்ளார். கணிசமான பழைய பொருட்கள் சேர்ந்த பிறகு, அவை அகற்றப்படும். சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் அந்தப் பொருட்களில் இருந்து பிளாஸ்டிக், உலோகங்கள் என தனித் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும். ரொம்ப நல்ல ஐடியா இல்லையா?

105 நாடுகளின் குப்பைத்தொட்டி!

ம்மூர் குப்பைகளையே சமாளிக்கத் திணறும் அதேவேளையில் வளர்ந்த நாடுகளின் மெகா சைஸ் குப்பைத்தொட்டியாகவும் இந்தியா இருக்கிறது என்பது அதிர்ச்சிகரமான உண்மை. கிட்டத்தட்ட 105 நாடுகளின் குப்பைத்தொட்டியாக இந்தியா விளங்குகிறது. குஜராத் அருகே உள்ள புரோபோ கோலா என்ற துறைமுகத்தில் தான் அதிகளவில் உலக நாடுகளின் விஷத்தன்மை கொண்ட கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன . 380,000 டன் எலெக்ட்ரானிக் கழிவுப் பொருட்கள் 2007ல் இந்தியாவில் கொட்டப்பட்டுள்ளன.  இது 2012ல் 8,00,000 டன்னாக அதிகரிக்கும் என, ‘கிரீன்பீஸ் இந்தியா’ என்ற அமைப்பு தெரிவிக்கிறது. ஏன் வெளிநாடுகள் இந்தியாவுக்கு குப்பையை அனுப்ப வேண்டும்? ஒரு டன் குப்பையை சுத்திகரித்து மறுசுழற்சி செய்ய 12 ஆயிரம் ரூபாய் செலவாகும். கப்பலில் ஏற்றி இங்கே அனுப்பிவிட ஆகும் செலவு வெறும் 2,800 ரூபாய்தான்!

நாம் செய்ய வேண்டியதென்ன?
  • எப்பேர்ப்பட்ட அதிநவீனத் தொழில்நுட்பமே வந்தாலும் எந்தப் புதிய பொருளையும் வாங்குவதற்கு முன் அது நிச்சயமாக நமக்கு உபயோகம்தானா என்பதை நிறையவே யோசிக்க வேண்டும்.
  • முடிந்தவரை உங்களிடமுள்ள பொருட்களை செகண்ட் ஹேண்ட்டாக விற்க முயற்சி செய்யலாம்(விலை குறைவாகக் கிடைத்தாலும் அந்தப் பொருளின் ஆயுளை அது அதிகரிக்கும்).
  • உங்களிடம் லேப் டாப்போ, செல்போனோ, பழைய டி.வி.யோ இருக்கிறதென்றால் அதை யாருக்கும் விற்க மனமில்லையென்றால் அதை வாங்க வசதியில்லாத ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கலாம்.
  • பழுதடைந்த பொருட்களை சரிசெய்ய முனையலாம்.
  • எக்ஸ்சேஞ்ச் மாதிரியான திட்டங்களில் உற்பத்தியாளரிடமே கொடுத்து புதிய பொருட்களை வாங்கலாம்.
  • மின்சாதனங்களை தவறியும் காய்லாங்கடைகளில் போடுவதை தவிர்க்கவும்.