10 மே 2012

தொட்டுவிடும் தூரத்தில் சூரிய மின்சாரம் !

விழிக்குமா தமிழக அரசு

நன்றி: ஜூனியர் விகடன்

குளிர்ச்சியான சூரியச் செய்தி இது! 

குஜராத்தில் நர்மதா நதியின் கிளைக் கால்வாய்த் தண்ணீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்கவும், அதே நேரம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரிக்கவும் புதுமையான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நரேந்திர மோடி.


வழக்கமாக சூரிய மின்சாரம் பெறுவதற்கான போட்டோ​வோல்டிக் தகடுகளைப் பொருத்துவதற்கு நிறையவே இடம் தேவைப்படும். இந்த நிலப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காகத்தான், கால்வாயின் மீது தகடுகளை அமைத்​திருக்​கிறது குஜராத் அரசு. முதல் கட்டமாக 750 கி.மீ தூரத்துக்கு நீண்டு இருக்கும் சானந்த் - கடி நர்மதா கிளைக் கால்வாயின் மீது 'சோலார் பேனல்’ எனும் போட்டோவோல்டிக் தகடுகளை வைத்து, அதில் இருந்து வருடத்துக்கு சுமார் 16 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிப்பது​தான் திட்டம். நிலத்தில் வைக்கப்படும் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைவிட, 15 சதவிகிதம் கூடுதல் மின்சாரம் கால்வாயின் மீது வைக்கப்படும் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்தத் திட்டத்துக்காக அந்த நதியில் இருந்து பிரியும் மொத்தக் கால்வாய்களையும் பயன்படுத்த யோசித்து வருகிறது குஜராத். அவற்றின் நீளம் 85,000 கி.மீ.

இதில் 10 சதவிகிதத் தூரத்தை மட்டும் பயன்படுத்தினாலே, 2,200 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இதன் மூலம் 11,000 ஏக்கர் நிலப்பகுதி காப்பாற்றப்படும். மேலும் நீர் ஆவியாவது தடுக்கப்படுவதன் காரணமாக, வருடத்துக்கு சுமார் 2,000 கோடி லிட்டர் நீர் சேமிக்கப்படும். 

இந்தத் திட்டங்களை இன்னும் செறிவூட்டுவதற்காக, அந்த மாநிலத்தின் நிபுணர்களையும், பொறியியல் மாணவர்களையும் ஆய்வுகள் மேற்கொள்ளக் கேட்டுள்ளார் மோடி.

25 வருடங்களாக சூரிய சக்தி மின்சாரம் பற்றி ஆய்வு செய்து வருபவர் கோவையைச் சேர்ந்த உதய​குமார். அவரிடம் இதுபற்றிக் கேட்டோம்.

''2001-க்குப் பிறகுதான் நாம் சூரிய சக்தி மின்சாரம் பற்றி யோசிக்க ஆரம்பித்து இருக்கிறோம். பல நாடுகளில் முன்னரே பயன்படுத்தத் தொடங்கி விட்​டார்கள். ஜெர்மனியின் 'கிரீன் பார்ட்டி’ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹான்ஸ் ஜோசப் ஃபெல் என்பவர்தான், சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தி என்ற மசோதாவை 1992-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அரசோ, தனிநபரோ இந்தச் சூரிய சக்தி மின்சாரத்​தில் செலுத்தும் முதலீடு என்பது நீண்ட காலப் பயன்பாட்டுக்கான முதலீடாக இருக்கும். ஒரு முறை நீங்கள் சோலார் பேனல் அமைத்து விட்டால், அது 25 ஆண்டுகளுக்குக் குறையாமல் மின்​சாரத்தை உற்பத்தி செய்து தரும். மேலும், மூலப்பொருள் தீர்ந்து​போகும் என்ற அச்சமே இல்லை. தமிழகத்தில் 'இர்ரேடியேஷன்’ எனப்​படும் சூரியக் கதிர்களை வைத்து வருடத்துக்கு 15 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும். சூரியக் கதிர்கள் அவ்வளவாக இல்லாத ஜெர்​மனி​யில்​​கூட ஒன்பது லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடிகிறது.

சூரிய சக்தி மின்சாரத்துக்குத் தேவையான சந்தை இருக்கவே செய்கிறது. ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி மின்சாரத் திட்டத்தின் ஓர் அங்கமான 'என்.டி.பி.சி. வித்யுத் வியாபர் நிகாம் லிமிடெட்’ எனும் அமைப்பு, ஐந்து மெகா வாட், 10 மெகா வாட் அளவுக்கு மட்டுமே சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தால்கூட, அதைக் கொள்முதல் செய்துகொள்ளும். மேலும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை போன்ற சில அமைப்புகள், நீங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு 1,000 கிலோ வாட் மின்சாரத்துக்கும் ஒரு சான்றிதழ் தருவார்கள். இதுபோன்று 10 சான்றிதழ்களைப் பெற்றால், அதனை 'டிரேடிங்’ நடக்கும் நாளில் அப்போதைய சந்தை விலைக்கு, வளர்ந்த நாடுகளிடம் விற்று காசாக்கிக் கொள்ளலாம்.

இன்று புதிதாக வீடு கட்டும்போது கூடுதலாக 50,000 ரூபாய் மட்டும் செலவழித்தால், சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்கான வசதியைச் செய்துகொள்ள முடியும்.  தனி நபர்கள் பெருமளவில் சூரிய சக்தி மின்சாரத்தில் இறங்கினால்தான் அரசின் சுமையும் குறையும்'' என்றார்.

நாட்டின் பல்வேறு தொழிற்சாலைகள், கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் பணியில் இருக்கிறார், 'சொலாரிஸ் எனர்ஜி சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த சிக்கந்தர் அமீன். ''சூரிய சக்தி மூலம் பெறக்கூடிய மின்சாரத்தை நாம் இரண்டு வகையாகப் பயன்படுத்தலாம். ஒன்று ஆன் கிரிட், இன்னொன்று ஆஃப் கிரிட்.


சூரிய ஒளியில் இருந்து டைரக்ட் கரன்ட் எனும் டி.சி. எடுக்கப்படுகிறது. அந்த மின்சாரம் பேட்டரிக்குக் கொண்டு​செல்லப்படும். பகல் முழுவதும் மின்சாரத்தைச் சேமித்துக்கொள்ளும் பேட்டரியில் இருந்து, மின்சாரம் இன்வெர்ட்டருக்குப் போகும். பேட்டரியில் இருக்கும் டி.சி. மின்சாரம், இன்வெர்ட்டர் மூலம் ஏ.சி. எனப்படும் ஆல்டர்நேடிவ் கரன்ட் ஆக மாற்றப்படும். அந்த மின்சாரம் இன்வெர்ட்டரில் இருந்து லோடு என்று சொல்லப்படுகிற டி.வி., மின் விசிறி, மின் விளக்குகள் ஆகியவற்றுக்குச் செல்லும். இந்த முறை ஆஃப் கிரிட் என்று சொல்லப்படும். அதாவது, நீங்களே மின்சாரத்தை உற்பத்தி செய்து நீங்களே பயன்படுத்துகிறீர்கள். இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அதே சூரிய ஒளியானது அதில் இருந்து பெறப்படுகிற டி.சி., இன்வெர்ட்டருக்குச் செல்லும். அதில் இருந்து கிரிட்டுக்குச் செல்லும். இதில் பேட்டரி கிடையாது. இந்த முறை ஆன் கிரிட் என்று சொல்லப்படும். அதாவது, இதில் நீங்கள் தயாரிக்கிற மின்சாரத்தை கிரிட்டுக்கு வழங்குகிறீர்கள். இதன் மூலம் மின்சாரத்தை மின் வாரியத்துக்கு விற்க முடியும். பெரும்பாலான மேலை நாடுகளில், இந்த ஆன் கிரிட் முறை புழக்கத்தில் உள்ளது. நீங்கள் உற்பத்தி செய்து தருகிற மின்சாரத்தை அரசு விலை கொடுத்து வாங்கும். தமிழகத்தில் இதற்கான கொள்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். அதையும் உடனடியாகச் செய்தாக வேண்டும்.


'சோலார் பவர்’ என்றதும் மக்கள் தயங்குவதற்குக் காரணம், அதனுடைய விலைதான். ஏனென்றால் ஒரு வீட்டுக்கு சுமார் 650 வாட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிற லோடு இருக்கிறது என்றால் (அதாவது ஒரு டி.வி., இரண்டு ஃபேன், நான்கு ட்யூப் லைட்), அதற்கான இன்வெர்ட்டர், பேட்டரி ஆகியவற்றோடு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு கிட்டத்தட்ட 80,000 ரூபாய். இந்த சோலார் பேனல் 20 வருட காலத்துக்கு உழைக்கக்கூடியது. பேட்டரியும் இன்வெர்ட்டரும் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் வரை உழைக்கும். இதற்கு நீங்கள் செலவழிக்கிற தொகையை இரண்டு வருடங்களில் மீட்டுவிடலாம்.இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி மானியங்கள், கடன்கள் ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்'' என்கிறார் சிக்கந்தர் அமீன்.


பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசியபோது, ''தமிழகக் கால்வாய்களின் மீது சோலார் பேனல் வைத்து நம்மாலும் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க முடியும். இதைப் பரந்துபட்ட மின்சார உற்பத்தி என்று சொல்லலாம். அதாவது, ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மின்சா​ரத்தை அங்கேயே பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் மேற்கு மண்டலம் மற்றும் தென் மண்டலம் ஆகியவை சோலார் இன்சோ​லேஷன் மண்டலங்களாக இருக்கின்றன. இந்த மண்டலங்களில் ஒரு வருடத்தில் சுமார் 300 நாட்கள் சூரிய வெளிச்சம் அபரிமிதமாகக் கிடைக்கிறது என்பதுதான் இதன் பொருள். இங்கே ஒரு சதுர கிலோ மீட்டரில் ஆண்டுக்கு சுமார் 35 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கலாம்.


இந்திய அரசால் சில வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி மின்சாரத் திட்டத்தில் 2020-ல் 20,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 4,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து விட்டோம். ஆனால், 1960-களில் ஆரம்பிக்கப்பட்ட அணு மின் நிலையங்கள் இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் 4,000 மெகா வாட் மின்சார உற்பத்தியை நெருங்கிக் கொண்டு இருக்கின்றன.  

இன்னும் சில மாதங்களில், புதுப்பிக்கத்தக்க கொள்முதல் பொறுப்பு என்ற ஒரு சட்டம் வர இருக்கிறது. அதன் மூலம் ஒவ்வொரு மாநிலமும் தனது மின்சார உற்பத்தியில் 10 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க மரபுசாரா எரிசக்தி கொண்டு மின்சார உற்பத்தி செய்ய வேண்டும். இவை தவிர, தொழில் முனைவோர்களை சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க ஊக்கப்படுத்துதல், அரசு தனியார் கூட்டாண்மை மூலம் இந்தத் திட்டங்களை விரிவாக்கச் செய்தல் என்று சூரிய சக்தி மின்சாரம் தொடர்பாகக் கொள்கைகளை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும்'' என்கிறார் சுந்தர்ராஜன்.

தமிழகத்தை சூரிய மின்சார மாநிலமாக மாற்றுவதில் மோடியைத் தாண்டியும் அதிரடியாகச் செயல்பட ஜெயலலிதாவால் முடியும். செய்வார் என்றே நம்புவோம்.


09 மே 2012

இந்திய வரலாற்றில் முதன்முறையாக 25,000 பேர் ...

இந்திய வரலாற்றில் முதல்முறையாக 25 ,000  பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒரே நேரத்தில் திரும்ப ஒப்படைத்துள்ளனர் .

கடந்த 4-05-2012 முதல்  நெல்லை  மாவட்டம்  இடிந்தகரையில் 302  பெண்கள் உட்பட 375  பேர்  கூடங்குளம் அணு உலையை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்  .உண்ணாவிரதம் ஐந்தாவது நாளை கடந்ததால் பலரது நிலைமை மோசமாகியுள்ளது .ஆனால் அரசு இதை சிறிதும் பொருட் படுத்தவில்லை .

இதன் காரணமாக  கூடங்குளத்தைச் சுற்றியுள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25 ஆயிரம் பேர், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை தமிழக அரசிடம் திரும்ப கொடுத்துவிடுமாறு, அணுஉலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

இந்திய வரலாற்றில் முதல்முறையாக 25 ,000  பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒரே நேரத்தில்  திரும்ப  ஒப்படைத்துள்ளனர் .


இந்தியாவில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்தது இல்லை. இவ்வளவு தொகையான மக்கள் ஒரு கோரிக்கைகாக இப்படி ஒரு செய்கையை செய்ததுமில்லை.இது இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் பின்னைடைவை தேடித் தந்துள்ளது. 

அணுஉலையை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், இவ்வளவு பேர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் அரசு அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாததாலும், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்று இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி, கூடுதாலை, வைராதிகிணறு, தோமையார்புரம், கூட்டுப்பணை ஆகிய 7 கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் பொதுமக்கள் கூறியுள்ளனர். 

புதன்கிழமை அன்று மீதிமுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையை உதயகுமாரிடம் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தையும் இராதாபுரம் தாசில்தாரிடம் இன்று ஒப்படைக்கவிருப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசும் தமிழக அரசும் பொது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காததால் , இனி வாக்களிக்கும் உரிமை தங்களுக்கு வேண்டாம் எனவும், யாருக்கும் இனி வாக்களிக்க மாட்டோம் எனவும் கூறி அணு உலைக்கு எதிரான மக்கள் இப்படி செய்துள்ளனர். மேலும் இந்தியா போன்ற பெயரளவில் குடியரசாக விளங்கும் நாட்டில் வாக்காளர் அட்டையை அரசுக்கே திரும்ப ஒப்படைத்து அரசின்  மீதான அவ நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

நேற்றைய உண்ணாவிரத்ததின் முக்கிய நிகழ்வுகளின் காணொளி கீழே ...


08 மே 2012

இவர்களைக் கொன்று மின்சாரம் தரவேண்டுமா?

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி இன்று 5  வது நாளாக 302  பெண்கள் உட்பட 375  பேர் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர் .

இவர்களில் பலரது உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.இந்நிலையில் இவர்களின் கோரிக்கையைக் கேட்பதை விட்டுவிட்டு கூடங்குளம் மின்சாரத்திற்கு ஆளாளுக்கு போட்டி போடுகிறார்கள் .

இங்குள்ள மக்களைக் கொன்று எங்களுக்கு மின்சாரம் வேண்டுமென்று கேட்பவர்களுக்கும்  ராஜபக்சேவிற்கும் எந்த வித்தியாசமும்   இல்லை.

நேற்றைய உண்ணாவிரத காட்சிகள் கீழே.













04 மே 2012

கூடங்குளம் : மிகப்பெரும் போராட்டம் மீண்டும் !

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல்  கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கூடங்குளம் போராட்டத்தில் நானும் ஒருத்தியாக இருப்பேன் என்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் தேர்தல் முடிவடைந்ததும் அணு உலையைத் திறக்க ஆதரவு தெரிவித்தார் .அதனைத் தொடர்ந்து போராட்டக் காரர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .அதன் காரணமாக போராட்டத்தில் சிறு தொய்வு ஏற்பட்டது.


இந்நிலையில் இன்று (04-05-2012) முதல் சுமார் 300  பெண்கள் அணு உலைக்கெதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கியுள்ளனர் .


இன்று காலை 11  மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார் .

உண்ணாவிரதம் நடைபெறும் இடிந்தகரைக்கு செல்லும் முக்கிய பாதைகளில் காவல் துறையினர் முற்றுகையிட்டு போராட்டத்திற்கு செல்பவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

காவல் துறையினர் எதிர்பையும் மீறி சுமார் 9000  பேர் இன்று உண்ணாவிரதப் பந்தலில் திரண்டிருந்தார்கள் .


இதனிடையே கடந்த 1  ம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் 25  பேரில் பலர்   உடல் நிலை பாதிப்படைந்துள்ளது .மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார்கள் .