30 ஏப்ரல் 2012

இப்படி செய்வதற்கு பதில் பிச்சையெடுத்து பிழைக்கலாம் ஏர் டெல்.

செல் போன்  நிறுவனங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.இதற்கு எந்த நிறுவனமும் விதிவிலக்கல்ல .கொஞ்சமும் பாரபட்சமில்லாமல் மேலதிக சேவைகளை வழங்குகிறோம் என்று சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றன இந்நிறுவனங்கள்.இதனால் அதிகம் பாதிக்கப் படுவது பாமர மக்கள்தான் .


 குறிப்பிட்ட மொபைல் நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும் ,அழைப்பை ஏற்றால் ஏதாவது சேவைகள் பற்றிய விபரங்கள் வரும் இதை உடனே ஆக்டிவேட் செய்ய இதை அழுத்துங்கள் என்ற செய்தி வரும் .அடுத்து என்ன நடக்கும் என அறியாமல் குறிப்பிட்ட பட்டனை அழுத்திவிடுவார்கள்.அடுத்த நிமிடமே அவர்கள் கணக்கிலிருந்த காசு முழுவதும் காலியாகியிருக்கும்.இப்படி எத்தனையோ ஏமாற்று வேலைகளை தட்டிக்கேட்க ஆளின்றி மொபைல் நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இது நேற்று எனக்கு ஏற்பட்ட அனுபவம் .நான் ஏர் டெல் மொபைல் சேவையை பயன்படுத்தி வருகிறேன்.ஏர் டெல்லிரிருந்து ஒரு அழைப்பு வந்தது,அழைப்பை எடுத்தேன் அதில் பேசிய குரல் யூத் சம்மந்தமான தகவல்களைப் பெற ஸ்டார் பட்டனை அழுத்தவும் என்றது .நான் யூத்துதான் ஆனாலும் அச்சேவையை நான் விரும்பவில்லை .எக்சிட் பட்டனை அழுத்தி அழைப்பைத் துண்டித்தேன் .

ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் அந்த அதிர்ச்சியான குறுந்தகவல் வந்தது.அதில் உங்கள் வேண்டுகோளை ஏற்று யூத் சேவை உங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது இதற்காக தினமும் உங்கள் கணக்கிலிருந்து ரூபாய் 1.50 பிடித்தம் செய்யப் படும் என்று கூறப்பட்டிருந்தது.

உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள 121 க்கு டயல் செய்தேன் .அப்போது தானியங்கி குரல் மேலதிக சேவைகளைப் பெற அல்லது நிறுத்த 12116 ஐ டயல் செய்யவும் கூறியது .நானும் நிம்மதி பெருமூச்சோடு மேற்படி எண்ணை அழைத்தேன் அப்போது பேசிய தானியங்கி இச்சேவை தற்போது சோதனை முறையிலிருப்பதால் இது வேலை செய்யாது என்று கூறியது.

இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் 121  ஐ டயல் செய்து வாடிக்கையாளர் சேவை அதிகாரியை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் அப்போது பேசிய தானியங்கி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் உங்கள் அழைப்பு கொடுக்கப்படும் இதற்கு கட்டணமாக மூன்று நிமிடங்களுக்கு 50  பைசா வசூலிக்கப்படும் (இதுதான் சேவையோ) என்று கூறியது .

நானும் அதைப் பற்றி பரவாயில்லை நமக்கு திணிக்கப்பட்ட இந்த சேவையை நிறுத்த சொல்லிவிடலாம் மேலும் இரண்டு டோஸ் விடலாம் என்று எண்ணினேன் .தொடர்ந்து பேசிய தானியங்கி எங்கள் சேவை பற்றிய தரம் அறிய உங்கள் வாய்ஸ் ரெக்கார்ட் செய்யப்படலாம் (சேவையின் தரம் அறியவா அல்லது காதில் வரும் கெட்டவார்த்தைகளின் பொருள் அறியவா?)இணைப்பு கிடைக்கும் வரை காத்திருக்கவும் என்று கூறியது .

 என்ன ஒரு ஆச்சரியம் அடுத்த ஐந்து வினாடிகளில் தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டது .பல முறை முயற்சித்தும் மீண்டும் மீண்டும் தொடர்பு துண்டிக்கப் பட்டது .எப்படியோ எனக்கு பல்பு கிடைத்தது உறுதியாகிவிட்டது .
அவ்வ்வ்வவ் ....

அட நாதாரிப் பயல்களா இந்த பிழைப்பு பிழைப்பதற்குப் பதில் பிச்சையெடுத்து பிழைக்கலாமே!

28 ஏப்ரல் 2012

தமிழக சுற்றுலா தலங்களை 36ஂ ல் பார்வையிட ஒரு தளம்!

சுற்றுலா செல்வதை விரும்புபவர்கள் அதிகம்.இன்னல்கள் நிறைந்த வாழ்கையில் சற்று ஆறுதல் அடைய சுற்றுலா மிகவும் உபயோகமாக இருக்கிறது .

தற்போது வளர்ந்துள்ள தொழில் நுட்பங்கள் காரணமாக இனி செலவில்லாமலேயே சுற்றுலா செல்ல முடியும் போல் தோன்றுகிறது . அகலப் பரப்பு காட்சி (பனோரமா ) படங்கள் மூலமாக வெளி இடங்களை நேரில் சென்று பார்க்கும் உணர்வுடன் பார்க்க முடிகிறது.


தமிழக அரசின் சுற்றுலா துறையின் இணைய தளத்தில் தமிழக சுற்றுலா தளங்கள் சிலவற்றை 36ஂ ல் பார்வையிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலமாக அந்தந்த சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாய்ப்பில்லாதவர்களும் , அத்தலங்கள் எப்படி இருக்கும் என அறிய விரும்புபவர்களும் பயன் பெறலாம் . 

கோவில்கள் ,தேவாலயங்கள், நீர்வீழ்ச்சிகள், கோடைவாசஸ்தலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 


தளத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும். 

டிஸ்கி : குறைவான இணைய வேகம் உள்ளவர்களின் பொறுமையை இது சற்று சோதிக்கும் !

இதையும் படிக்கலாமே ....

22 ஏப்ரல் 2012

பூமித் தாய்க்கு வணக்கம்!


எத்தனை துன்பம் இழைத்திட்டபோதும் 

பெற்ற தாய் குழந்தைக்கு கொடுமை 

இழைப்பாளோ 

எங்களைப் பெற்றெடுத்த பூமித்தாயே

உன் மைந்தர்கள் உனக்கு 

எவ்வளவு துன்பம் இழைத்திட்டாலும் 

அவர்களுக்கு 

காற்றும் நீரும் உணவும் வழங்கி 

காப்பாற்றி வருகின்றாய் 

உலக பூமி தினமான இன்று 

பூமித் தாயே  உன்னை வணங்குகின்றேன்!

19 ஏப்ரல் 2012

மத்திய அரசுக்கு தண்ணி காட்டிய பத்து வயது பள்ளி மாணவி!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த 5 ம் வகுப்பு பயிலும்  ஒரு பத்து வயது பள்ளி மாணவியான  ஐஸ்வர்யா பராஷர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறியுள்ளது   மத்திய அரசு.ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார். அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .


இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இச்சம்பவம் நடந்தது கடந்த மார்ச் மாதம் .


இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.


இந்திய  வரலாற்றை  புரட்டிப் பார்க்கும்போது     1944  ம் ஆண்டு  ஜூலை மாதம்      6  ம் தேதி சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரையில் காந்தியடிகளை முதன்முதலில் தேசத் தந்தை எனக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

14 ஏப்ரல் 2012

மீனவர்களை நொடியில் காப்பாற்ற இதோ வருகிறது புதிய கருவி!

     சமீப காலமாக் சமூகத்தில் அதிக துன்பங்களை சந்தித்து வருபவர்கள் மீனவர்கள்தான் .படகோட்டி திரைப்படத்தில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான் பாடலில் கவிஞர் வாலி மீனவர்களின் துயரங்களை வார்த்தைகளில் வடித்திருப்பார் .

     சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.இது மீனவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி . 

      நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் சிறிய வகை மீன்பிடி படகுகள் போன்றவற்றிற்கு, கடற்கொள்ளையராலோ, விரோத மனப்பான்மை கொண்ட பிற நாட்டு விஷமிகளாலோ, இயற்கைச் சீற்றங்களினாலோ அல்லது வேறேனும் விதத்தில் பேரிடர் ஏற்படுமானால், கரையிலிருந்து நொடிப்பொழுதில் உதவிக்கு அழைக்கும் விதத்தில் இயங்கக்கூடிய Distress Alert Transmitter (DAT) என்னும் மலிவு விலைக் கருவியை இந்திய கடலோரக் காவல் படையும் (Indian Coast Guard) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (ISRO) சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.  நான்கு பட்டன்களைக்கொண்டு ஒரு தொலைபேசி வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவியின் ஒவ்வொரு பட்டனும் ஒவ்வொரு வகை நெருக்கடியை அறிவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
          
       
        இதை உபயோகிப்பது எப்படியென்றால், மீனவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடருக்காக ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பட்டனை அழுத்தவேண்டும்.  அந்தக் கருவி மூலமாகக் கிடைக்கும் இருப்பிட எல்கைகளை அறிந்து அவர்களுக்கு உதவ படைகள் விரைந்து வரும். 
         
           'டாட்' என்னும் இந்தக் கருவி பாட்டரி மூலமாக இயங்கக்கூடியது.
          
         இந்தக் கருவி இப்போது சோதனை ஓட்டத்திற்காக அந்தமான், நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் விடப்பட்டுள்ளது.  சோதனை வெற்றி பெற்று வெளிச்சந்தைக்கு வந்த பின்னர் அதன் விலையில் அரசு மானியம் அறிவிக்கலாம். 
          
        இந்தியக் கடலோர எல்லைகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைக்கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தைப் பயிற்றுவித்தால், எல்லைகள் பயமற்றதாகவும், பாதுகாப்பாகவும் இருக்க உதவும் சூழ்நிலைகள் உருவாகும் என்று கடலோரக் காவற்படையைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்ததாக அந்தச் செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.        
 
Thanks : DNA

13 ஏப்ரல் 2012

நந்தன ஆண்டு எப்படி இருக்கும்? -இடைக்காடர் சித்தர் வாக்கு

தமிழ் வருடங்கள் மொத்தம் 60  .இதில் 26  வது ஆண்டான நந்தன ஆண்டு இன்று துவங்குகிறது .

ஒவ்வொரு தமிழ் ஆண்டும் எப்படி விளங்கும் என்பதை பிரபல சித்தர் பெருமானாகிய இடைக்காடர் செய்யுள்களாக அருளியுள்ளார்.இந்த நந்தன ஆண்டு எப்படி இருக்கும் என்று அவர் கூறியுள்ளதைப் பார்ப்போம் .


"நந்தனத்தில் மாரியுறும் நாடெங்கும் பஞ்சமாகும்
நந்துமுயின் நோயா நலியுமே - அந்தரத்தின்
மீனுதிருந் தூமமெழு மிக்க கெடுதியுண்டாம்
கோன் மடிவானென்றே நீ கூறு"

இதன் பலன் : நந்தன ஆண்டில் குறைவான அளவு மழை பெய்யும். விளைச்சல் குறையும். பஞ்சம் அதிகரிக்கும். உயிரினங்களுக்கு நோய்கள் உண்டாகும். புதிய நோய்களால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். விண்மீன்கள் உதிரும். சுற்றுசூழல் பாதித்து புகை மண்டலம் ஏற்படும். நன்மைகள் குறைந்து தீமைகள் அதிகரிக்கும். ஆட்சியாளர்கள், தலைவர்கள் கண்டத்தை சந்திக்க வேண்டி வரும்.

இடைக்காடர் அருளியுள்ளதைப் பார்க்கும்போது இந்த ஆண்டு சோதனைகள் நிறைந்ததாக இருக்கும் என்று கருதவேண்டியுள்ளது .நன்மைகள் நடக்க இறைவனைப் பிரார்த்திப்போம் .

10 ஏப்ரல் 2012

கூடங்குளம் போராட்டம் : அன்றே கணித்த அய்யா வைகுண்டர்?

எதிர் காலத்தைக் கணிப்பதில் வல்லவர் யாரென்றால் சட்டென நினைவுக்கு வருபவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நோஸ்ராடாமஸ்.அவர் எதிர் காலம் பற்றி கூறிய தீர்க்க தரிசனங்கள் பல நடந்துள்ளன பல நடந்து கொண்டிருக்கின்றன.அவர் தீர்க்கதரிசனத்தில் உள்ள குறைபாடு என்ன வென்றால் அனைத்து நிகழ்வுகளுமே மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நிகழ்வு நடந்தபின்புதான் அதை உணர முடிகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.நோஸ்ராடாமஸ் போல இந்தியாவிலும் பல தீர்க்க தரிசிகள் வாழ்ந்துள்ளனர்.


அவர்களுள் முக்கியமானவர் தமிழகத்தின் தென்கோடியில் குமரி முனை அருகேயுள்ள சுவாமி தோப்பில் உதித்த அய்யா வைகுண்டர் ஆவார்.கி.பி.1809  வருடம் சாதாரண மானிடப் பிறப்பெடுத்த முடிசூடும் பெருமாள் என்கிற முத்துக்குட்டி பின்னர் வைகுண்டர் அவதாரமெடுத்து பல அற்புதங்களை நிகழ்த்தினார் .

அதோடு மட்டுமல்லாமல் அருள் நூல் மற்றும் அகிலத் திரட்டு ஆகிய நூல்களில் எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை எழுதியுள்ளார்.அவற்றில் பல நடந்தும் நடந்துகொண்டுமிருக்கின்றன.

இப்போது தமிழகத்தின் மிகப்பெரும் போராட்டமாக நடந்துகொண்டிருப்பது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிரான போராட்டம்.இது பற்றியும் அய்யா தனது அருள் நூலில் கூறியிருப்பதாக அய்யா வழி நண்பர் ஒருவர் கூறினார்.நான் அதைப் பார்க்க விருப்பம் கொண்டிருந்தேன் .

இந்நிலையில் நேற்று எனது நண்பர் ஒருவர் மூலமாக அந்நூலின் குறிப்பிட்ட பக்கத்தின் நகல் எனக்குக் கிடைத்தது .அந்நூலின் 24  வது பக்கத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் கூடங்குளம் போராட்டம் பற்றி அய்யா கூறியிருப்பதாகத் தோன்றுகிறது .அவ்விரு வரிகள் 

அண்ணர்க்களந்தபாலை இடித்தக்கரை காவல்காரன் 
அவிழ்த்துப்  பார்க்கலாச்சே சிவனே அய்யா 

கூடங்குளம் அணு உலைக்கெதிரான தொடர் போராட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இடிந்தகரையில் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. 

இது போல இலங்கைத் தமிழர் மறு வாழ்வு குறித்தும் அய்யா குறிப்பிட்டுள்ளதாக அகிலத் திரட்டில் வரிகள் உள்ளன .

அவை 

ஸ்ரீலங்கா மரியாத்து சென்னில் விளையுதடா தீ மீளுக நலச்சு
என்னுடைய தம்பிமார்களே இலங்காபுரி ஆளுவாய் 

என்பதாகும் .

இதைப் படிக்கும்போது எதிர்காலத்தில் இலங்கை முழுவதுமே தமிழர்கள் ஆட்சி செய்யும் காலம் வரும் என்று கூறியுள்ளதைப் போல் தோன்றுகிறது.அவ்வாறு நடந்தால் அதைவிட வேறு மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவாக இருக்க முடியும் .நன்றி : ayyavazhi.org

07 ஏப்ரல் 2012

நோயின்றி உற்சாகமாய் வாழ உடற்பயிற்சிகள் -மின்னூல்

சுவரின்றி சித்திரமில்லை என்பது முதுமொழி.Sound mind in a sound body என்பது ஆங்கிலப் பழமொழி.உடல் நிலை சரியாக இருந்தால்தான் உள்ளம் தெளிவாக இருக்கும்.அவ்வாறிருந்தால்தான் நாம் வாழ்க்கையில் இலக்குகளை எளிதில் எட்ட முடியும்.உடலை நோயின்றி எப்போதும் இளமையுடன் வைத்துக்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன.இவற்றில் தலையாயது உடற்பயிற்சி என்று சொன்னால் மிகையாகாது.


தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியைப் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.உலக மக்கள் அமைதியாக வாழ 1958 ல்  சமுதாய சேவா சங்கம் என்ற ஒரு  அமைப்பை ஏற்படுத்தியவர்.இன்று அவ்வமைப்பு பல கிளைகளுடன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.வேதாத்திரி மகரிஷி 90  வயதைக் கடந்தபின்பும் ஒரு இளைஞனைப் போல் சுறு சுறுப்பாக இருந்தவர் . அவர் சமூக நன்மை கருதி நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் சில உடற்பயிற்சி முறைகளை அறிமுகப் படுத்தினார்.

இவ்வுடற்பயிற்சிகள் செய்வதற்கு எளிதாகவும் அதே வேளையில் மிகுந்த பயனளிப்பவையாகவும்  உள்ளன .நீங்களும் இவ்வுடற்பயிற்சிகளை  செய்து வாழ்வில் வளம் பெறுங்கள் .

வாழ்க வளமுடன்!

மின்னூல் தரவிறக்க  

http://www.ziddu.com/download/19087895/exercise.pdf.html

கூடங்குளம் : சில திடுக்கிடும் சம்பவங்கள் !

இங்கே நான் பகிரப் போகும் சம்பவங்கள் பகுத்தறிவுக்கு அப்பார் பட்டவையாக இருக்கலாம் ....எனினும்  சிந்திக்க வைக்கும் சில சம்பவங்களைப் இங்கே பகிர்கின்றேன்.


கூடங்குளம் அணு உலை அமைக்க எப்போது திட்டமிடப் பட்டதோ அப்போதிருந்தே பல்வேறு தடைகள் நிகழ்ந்து வந்துள்ளன .கூடங்குளத்தில் அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் 20-9-1988 ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சோவியத் யூனியன் அதிபர் மிக்கேல் கோர்பசேவுக்குமிடையே கையெழுத்தானது .

26 ஏப்ரல்  1986 ல் உலகின் மிக மோசமான அணு விபத்து செர்னோபிலில் நிகழ்ந்திருந்த நிலையில் இரு வருடத்திற்குள்ளாகவே இவ்வொப்பந்தம் நிகழ்ந்ததை சுற்று சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள் . அவ்வொப்பந்தத்திற்கு பின் நிகழ்ந்த சில மோசமான சம்பவங்களை பகிர்கின்றேன் .

1 ) கூடங்குளம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 21-5-1991 ல் பலியானார் 

2) 1991  ஆகஸ்டில் சோவியத் யூனியன் பிளவுண்டது கூடங்குளம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கோர்பசேவ் பதவியிழந்தார் .அதனைத் தொடர்ந்து கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகள் நிறுத்தப் பட்டன.

3)பின்னர் தூக்கத்திற்கு புகழ் பெற்ற முன்னாள் பிரதமர் தேவ கவுடா மற்றும் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸ்டின் ஆகியோர் மார்ச் 1997  கூடங்குளம் ஒப்பந்தத்தை புதுப்பித்தனர் .மீண்டும் கூடங்குளத்தில் பணிகள் தொடங்கின .அதன் பின்னர் தேவ கவுடா அரசியல் அநாதை ஆகிவிட்டார் 

4 ) 7-1-2008 ல் கூடங்குளம் அணு உலை இயக்குனராக இருந்த சுனில் குமார் அகர்வால் தனது 55  வது வயதில் திடீர் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார் 

5 ) 9-5-2010 ல் உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தற்போது அணு மின் நிலைய இயக்குனராக இருக்கும் திரு காசிநாத் பாலாஜி பயணம் செய்த வாகனம் சிக்கியது.விபத்தில் அவர் மனைவி மரணமடைந்த துயரம் நிகழ்ந்தது.அவருக்கு படுகாயம் ஏற்பட்டது .

6) 21-6-2011 ல் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் தலைமை வடிவமைப்பாளராக இருந்த ரஷ்யாவைச் சேர்ந்த செர்கே ரிசொவ் விமான விபத்தில் பலியானார் .

இது பற்றி கூடங்குளம் பகுதியில் வசிக்கும் முதியவர்கள் கூறும்போது கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்திருப்பது விஸ்வாமித்திரர் பூமிஎன்றும் இப்பகுதிக்கு அழிவு ஏற்படுவதை விஸ்வாமித்திரர் தடுக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

(பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்காக ராமர் ,லட்சுமணர் காவல் காக்க விஸ்வாமித்திரர் யாகம் செய்த இடமாகவும் யாகத்தைக் குலைக்க வந்த தாடகையை ராமர் வதம் செய்த இடமாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ள விஜயாபதி கூடன்குளத்திலிருந்து 4  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

கடந்த 4-3-2012 ல் கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை மூடக்கோரி விஸ்வாமித்திரர் ஆலயத்திற்கு பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர் அதற்கு அடுத்த தினமே டில்லியில் நிலநடுக்கம் வந்து கட்டிடங்கள் குலுங்கியதும்  நினைவுகூறத் தக்கது.

05 ஏப்ரல் 2012

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ....


அன்பின் உறைவிடமாய் இருந்து இன்றும் புதுவையில் ஆத்ம ஒளி வீசிக்கொண்டிருக்கும் ஸ்ரீ அன்னையை வேண்டி கங்கை அமரன் அவர்கள் இசையமைத்து பாடிய பாடல் இது .எத்தனை முறை கேட்டாலும் நெஞ்சை வருடும் இப்பாடலைக்  கேட்டு மலர் போன்ற மனதைப் பெறுங்கள் .மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே


ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே
நதி காய நேராமல் நீரூற்று தாயே
நன்னிலம் பார்த்து நீயே
எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே
என் வளமான தாயே
பசி தாகம் காணாமல் வயிறாக்கு தாயே
ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே
இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே    -(மலர் போல)


புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறை ஞானம் எமை என்றும் ஆள
பொன் குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும்
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே
உறவோடு மகிழ்வோடு எமை மாற்று தாயே          -(மலர் போல)

04 ஏப்ரல் 2012

ஆசிரியர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழ் தளங்கள் !

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையிலும் ,ஆசிரியர் படிப்பு படித்தவர்களுக்கு உதவும் வகையில் பல வலைத்  தளங்கள் உள்ளன.

இங்கே பகிரப்பட்டுள்ள மூன்று தளங்களும் ஆசிரியர்கள் மற்றும் வருங்கால ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என நம்புகிறேன்.

 1 .கல்விச் சோலை .காம் 


ஆசிரியர்களுக்கான தகவல்களை அள்ளித் தருவதில் முதன்மையான தமிழ் வலைத் தளமாக இது உள்ளது .இத்தளத்தில் 

அரசாணைகள் 
படிவங்கள் 
கட்டுரைகள் 
பாடப் புத்தகங்கள் 
காணொளிகள் 

உள்ளிட்ட ஆசிரியர்களுக்குத் தேவையான எண்ணற்ற தகவல்கள் உள்ளன .

தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

2.Future Teachers Advisor 


தளத்தின் பெயர் ஆங்கிலத்திலிருந்தாலும் இது ஒரு தமிழ் வலைத் தளம்தான் . இது முக்கியமாக ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அதிக பயனளிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.இதில் 

பதிவு மூப்புப் பட்டியல் 
ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்புகள் 
அரசாணைகள் 

இடம் பெற்றுள்ளன.

தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

3.தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் .


தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்திற்குரிய இத்தளத்திலும் ஆசிரியர்களுக்கான பல பயனுள்ள தகவல்கள் உள்ளன.

படிவங்கள் 
அரசாணைகள் 
கல்வி விதிகள்  
ஆசிரியர்கள் செய்திகள் 

இடம் பெற்றுள்ளன  .

தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

02 ஏப்ரல் 2012

இருமல் மாத்திரை சாப்பிட்டா இருமல் வருமா? SMS ஜோக்ஸ்

சில்வர் செயினை உருக்குனா சில்வர்வரும் 
கோல்டு செயினை உருக்குனா கோல்டு வரும் 
சைக்கிள் செயினை உருக்குனா சைக்கிள் வருமா???

------------------------------------------------------------------------------

ஹோட்டல்ல சாப்பிட்டதுக்கு காசு இல்லண்ணா 
மாவாட்ட சொல்லுவாங்க பஸ்சுல டிக்கெட்டுக்கு காசு இல்லண்ணா 
பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

--------------------------------------------------------------------------------------------------

கப்பல் ஓடுவது பெட்ரோலிலா?  டீசலிலா? 
கடலில் 

-----------------------------------------------------------------

பாயாசம் பத்து நாளா வச்சிருந்தா பாய்சன் ஆயிடும் 
ஆனா பாய்சன பத்து நாளா  வச்சிருந்தா  பாயாசமாகாது !!!

----------------------------------------------------------------------------------------------

தூக்க மாத்திரை சாப்பிட்டா தூக்கம் வரும் 
இருமல் மாத்திரை சாப்பிட்டா இருமல் வருமா?

-------------------------------------------------------------------------------------------------

சும்மா இருக்கிறவன் சும்மா இல்லாம சும்மா இருக்கிறவுங்களை  சும்மா கிண்டல் பண்ணுனா  சும்மா இருக்கிறவுங்க சும்மா சும்மா கிண்டல் பண்ணுனவனை சும்மா விடமாட்டாங்க.......

உலக அதிசயங்கள் 7 ஐ யும் இலவசமாக சுற்றி பார்க்க!


உலகின் புதிய 7  அதிசயங்கள் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடந்த விழாவில் கடந்த 7-7-2007 ல் அறிவிக்கப்பட்டன .

உலக அதிசயம் ஒன்றை பார்ப்பதற்கே  கொடுத்து வைத்திருக்க வேண்டும் . இவ்வேளையில் சாமானிய மக்களும் உலகின் பல்வேறு பகுதிகளை நேரில் பார்த்த அதே களிப்புடன் பார்வையிட இணையத்தில் வசதிகள் உள்ளன .

இங்கே நான் பகிர்ந்துள்ள தளம் வாயிலாக உலகின் புதிய 7  அதிசயங்களையும் 36ஂ கோணத்தில் பார்வையிடலாம் .கிட்டத்தட்ட அதிசய உலகத்திற்கு நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

நீங்களும் உலக அதிசயங்களை இலவசமாகக் காண இங்கே சுட்டுங்கள்.

01 ஏப்ரல் 2012

நாளை முதல் பிளாக்கர் சேவை நிறுத்தம் !

பதிவர்களுக்கு உண்மையிலேயே இது வருந்தத்தக்க செய்திதான் .இருப்பினும் கூகுள் நிறுவனம் வேறு வழியில்லாமல் இதை செய்கிறதாம் .

இதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு என்று கூறப்படுகிறது .அதிலும் கூடல் பாலா உள்ளிட்ட சில பதிவர்கள் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து பதிவெழுதி வருவதால் மத்திய அரசுக்கு கடும் அவப் பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே மத்திய அரசு கூகுள் நிறுவனத்தின் காலில் விழுந்து பிளாகர் சேவையை நிறுத்தும்படி கெஞ்சியதாகவும் இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் இதனை ஏற்று நாளை முதல் பிளாக்கர் சேவையை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதிவர்கள் அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள் !!!???