31 மார்ச் 2012

தமிழக மின்வெட்டு -மத்திய அரசின் திட்டமிட்ட நாடகம் அம்பலம்!

கடந்த தி. மு. க  ஆட்சியில் தமிழகம் முழுவதும் இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின் வெட்டு அமல் படுத்தப் பட்டது .தி.மு.க. வின் தோல்விக்கு மின் வெட்டும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

ஆட்சி மாறியபின்னும் அதே மின் வெட்டு தொடர்ந்தது .இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கூடங்குளம் அணு மின் நிலையைத்தை மூடக்கோறும் போராட்டங்கள் வலுவடைந்தன .போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பெரும் ஆதரவு எழுந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதியிலிருந்து கூடங்குளம் அருகிலுள்ள இடிந்தகரையில் 127  பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர் .12  நாட்கள் நடந்த அந்த உண்ணாவிரதத்தில் தினமும் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் பேர் வரை கலந்துகொண்டனர்.கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர் .இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ,தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சரவண பெருமாள் ஆகியோரும் உண்டு.

போராட்டம் தீவிரமாவதை உணர்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் அகலும் வரை அணு உலையில் நடைபெறும் வேலைகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்று தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் இயற்றினார் .ஆனாலும் தொடர்ந்து அணு மின் நிலையத்தில் வேலை நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

அதைத் தொடர்ந்து கூடங்குளம் பகுதி மக்கள் அதிரடியாக அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டு பணிக்கு செல்பவர்களை தடுத்தனர்.தமிழக அரசும் இந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்ததால் வேறு வழியின்றி அணு உலைப் பணிகள் முடங்கின.

இதை சகித்துக்கொள்ளாத மத்திய அரசு மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கி வந்த மின்சாரத்தை பெருமளவு குறைத்தது .இதன் காரணமாக நான்கு மணி நேரமாக இருந்த மின்வெட்டு 11 மணி நேரமாக அதிகரித்தது.

இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழக காங்கிரசாரும் ஒருசில ஊடகங்களும் இணைந்து தமிழகத்தின் மின் பற்றாக்குறை தீர ஒரே வழி கூடங்குளம் அணு மின் நிலையத்தை செயல்படுத்துவதுதான் என்று பரப்புரை செய்தன .வழக்கம் போல ஏமாந்த தமிழர்கள் பலர் அணு உலையை எதிர்த்து வந்த தங்கள் போக்கை மாற்றி அணு உலைக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர் .

இதன் காரணமாக அணு உலையை எதிர்த்து போராடிய மக்களுடனோ போராட்டக்குழுவினர் அமைத்த நிபுணர் குழுவுடனோ எந்த ஒரு பேச்சு வார்த்தையும் மேற்கொள்ளாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அணு உலையை திறக்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார் .தொடர்ந்து கூடங்குளம்  பகுதியில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு   போராட்டக்காரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு கூடங்குளத்திளிருந்து வெகுதூரத்திலிருக்கும் கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர்.


இந்நிலையில் சமீபத்தில் தென்கொரிய தலை நகர் சியோலில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்தார். அவ்வமயம் பாகிஸ்தானுக்கு 5000  மெகாவாட் மின்சாரம் வழங்க மன்மோகன் சிங் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக உபரியாக மின்சாரமிருந்தும் கூடங்குளம் அணு உலையைத் திறக்கும் நோக்கத்திற்காக வேண்டுமென்றே தமிழகத்திற்கு மின்சாரத்தை நிறுத்தி வைத்திருப்பது  தற்போது அம்பலமாகியுள்ளது.

30 மார்ச் 2012

கந்த ஷஷ்டி கவசம் -பாடலும் பாடல் வரிகளும்

 

கந்த சஷ்டி கவசம் விளக்கம் :

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்ற்க் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காபாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது, வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.
 

இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைகிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு இரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கன்க வேல் காக்க.
 

அப்பப்பா எதனி விதமான் வேல் நம்மைக் காக்கின்றன.

அடுத்தது எத்தனை விதமான் பயத்திலிருந்து காக்க வேண்டும், பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், ப்ரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார். அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவச்ம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.
 

பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் ச்ஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.
 

இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும்.

நன்றி : ஈகரை.நெட்  

பாடலைக் கேட்க இங்கே சுட்டவும் 

கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

28 மார்ச் 2012

புதிய மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு சாதனை !

     இத்தலைப்பைப்   பார்த்தவுடன் தமிழக அரசை கிண்டல் செய்வதற்காக எழுதப்பட்டதாக தோன்றும் .ஆனால் உண்மையிலேயே தமிழக அரசு செய்த  சாதனயைத்தான் சொல்லப்போகிறேன் .
       
       ஆனால் இந்த சாதனை சமீபத்தில் நிகழ்ந்தது அல்ல 1954 ம் வருடத்திற்கும் 1963 ம் வருடத்துக்கும் இடையே நிகழ்த்தப்பட்ட சாதனை .இப்போது அநேகருக்கு புரிந்திருக்கும் .ஆம் தன்னலமில்லா தலைவர் பெருந்தலைவர் காமராஜ் ஆட்சியில்தான் இந்த சாதனை நிகழ்ந்தது .
        
     
       அந்த கால கட்டத்தில் தமிழக அரசின் ஆண்டு வருமானமே 50 கோடிக்கும் குறைவுதான் .ஊழலில்லாமல் ஆட்சி புரிந்தால் என்னென்ன சாதனை நிகழ்த்தலாம் என்பதற்கு இன்றும் உதாரணமாக திகழ்வது காமராஜ் நிறைவேற்றிய  திட்டங்கள்தான் .

இப்போது காமராஜ் ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மின் திட்டங்களின் பட்டியல்

1 . குந்தா நீர் மின் திட்டம் (26 கோடி )
 

2 .பெரியாறு மின் திட்டம் (10  கோடி )
 

3 .கும்பார் -அமராவதி மின் திட்டம் (8  கோடி)
 

4 .மேட்டூர் கீழ்நிலை மின் திட்டம் (12 கோடி )
 

5 .மோயாறு நீர்மின் திட்டம்
 

6 .கூடலூர் நீர் மின் திட்டம்
 

7 .நெய்வேலி அனல் மின் திட்டம்
 

8 .சமயநல்லூர் அனல் மின் நிலையம்
 

9 .சென்னை அனல் மின் நிலையம்
 

10 .கல்பாக்கம் அணு மின் நிலையம் .



       இந்த பத்து மின் திட்டங்களும் காமராஜ் ஆட்சி காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு அவரது ஆட்சியிலேயே முடிக்கப்பட்டது மேலும் சாண்டியனல்லூர் நீர் மின் திட்டம் ,குந்தா திட்டத்தின் மூன்றாவது பிரிவு,பெரியார் திட்டத்தின் இரண்டாவது பிரிவு ,பரம்பிக்குளம் .ஒக்கேனக்கல், பாண்டியாறு ,புன்னம்புழா ,சுருழியாறு ,பரளியாறு ஆகிய நீர் மின் திட்டங்கள் காமராஜ் ஆட்சி காலத்தில் தீட்டப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது .
           

      காமராஜ் ஆட்சிக்கு வருவதற்கு முன் 160  மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி அவரது ஆட்சி முடிகையில் 600  மெகா வாட்டாக உயர்ந்திருந்தது .மிக குறைந்த வருவாயை கொண்டே காமராஜ் இத்தனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ மின் வெட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்காமல் முந்தையவர்களை குறை கூறுவதிலேயே நாட்களைக் கழிக்கின்றனர் .

                                        

                                   ம்ம்ம்ம் ....அந்த நாள் மீண்டும் வருமா..?

டிஸ்கி:இது ஒரு மீள் பதிவு  

27 மார்ச் 2012

நாங்கல்லாம் தேசத் துரோகிகளாமாம் !

தமிழகம் இது வரை கண்டிராத மிக நீண்ட அற வழிப் போராட்டமாக ஆறு மாதங்களாக தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டம்.இதே அற வழிப் போராட்டத்தைக்  காந்தி அண்ணல் கைக் கொண்டிருந்ததால்தான் ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் அளித்தார்கள் .


ஆனால் நாடு சுதந்திரமடைவதற்கு மிகவும் பாடுபட்ட இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி  இன்று அற வழிப் போராட்டங்களை கண்டாலே அலறுகிறது .

கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டம் 25  ஆண்டுகளாக நடை பெற்று வரும் போராட்டம் .ஆனால் அணு உலை குறித்த தெளிவான சிந்தனைகள் இல்லாததால் அந்நாட்களில் அணு உலைப் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அவ்வளவாக இல்லை .

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்த கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்தார்கள் .அதனைத் தொடர்ந்து அணு உலை குறித்த விபரங்களை தெளிவாக அறிந்த அறிஞர்கள் பலரை இணைத்துக்கொண்டு வருமுன் காப்போம் என்ற வகையில் கட்டி முடிக்கப் படாத கூடங்குளம் அணு உலையை மூட அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் .

இப்போராட்டத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஆளும்  வர்க்கம் போராட்டத்தின் மீது வீசிய முதல் அஸ்திரம் செயற்கையான மின் வெட்டு .

அடுத்த அஸ்திரமாக கிறிஸ்தவ பாதிரியார்கள்தான் போராட்டத்திற்கு காரணம் என்ற ஒரு குற்றச் சாட்டை வைத்தார்கள் .

அடுத்ததாகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான் போராட்டங்களுக்கு காரணம் என்றார்கள் .

அடுத்து போராட்டத்திற்கு வெளி நாட்டிலிருந்து பணம் வருகிறது என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள் .

ஆனால் எந்த குற்றச் சாட்டுமே நிரூபிக்கப் படவில்லை .

கூடங்குளம் பகுதி மக்களும் இந்த ஆயிரமாயிரம் இன்னல்களைத் தாண்டி இன்னமும் அற வழிப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள் .

ஆனால் ஆளும்  வர்க்கமும் அவர்களுக்கு  ஆதரவானவர்களும் கூடங்குளம் மக்களின் போராட்டம் தேச நலனுக்கெதிரானது என்றும் போராடும் மக்களை தேசத் துரோகிகள் என்றும் வர்ணிக்கிறார்கள் .

நான் ஒன்றே ஒன்றை கேட்கிறேன் அணு உலை வேண்டாம் என்பவர்களை தேசத் துரோகிகள் என்று அழைக்கும் நீங்கள் நீங்கள் வாழும் ஊர்களில் இதே போல் பத்தாயிரம் பேரைத் திரட்டி எங்கள் ஊருக்கு இரண்டு அணு உலைகள் வேண்டும் என்று போராடி உங்கள் தேச பக்தியை நிரூபியுங்கள் .

இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் கிராம மக்கள் அல்லது நகர மக்கள் இணைந்து எங்கள் பகுதியில் அணு உலை அமைக்கவேண்டும் என்று போராடினால் எங்களை தேசத் துரோகிகள் என்று வசை பாடலாம் .

அவ்வாறு நடக்காத் பட்சத்தில் கூடங்குளம் பகுதி மக்கள்தான் உண்மையிலேயே தேச நலனில் அக்கறையுள்ள தேச பக்தர்கள்.

இதையும் படியுங்கள் நாடு பூரா நக்சலைட்டு .

24 மார்ச் 2012

சங்கரன் கோவிலில் வென்று கூடங்குளத்தில் தோற்ற ஜெ!

சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் நினைத்துப் பார்க்காத ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது .

ஏற்கெனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தில் மக்களோடு நானும் இருப்பேன் என்று உணர்ச்சிமயமாக? முதல்வர் ஜெயலலிதா பேசினார் .ஆனால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கூடங்குளம் பிரச்சனை பற்றி வாயே திறக்கவில்லை .ஆனால் தி.மு.க.தலைவர் கருணாநிதி கூடங்குளம் அணு உலையை உடனடியாக திறக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார் .ஆனால் அப்பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை .வழக்கம்போல் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி மகத்தான வெற்றி பெற்றது .


தேர்தல் முடிந்த மறுநாளே ஜெயலலிதாவின் உண்மை முகத்தை கூடங்குளம் மக்களுக்கு தெரிய வைத்தார் .தான் ஏற்கெனவே கூடங்குளம் போராட்டம் பற்றி தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு முற்றிலும் மாறாக கூடங்குளம் அணு உலையை உடனடியாக செயல் படுத்தப் படவேண்டும் என்று அமைச்சரவையைக்கூட்டி தீர்மானம் இயற்றினார் .

உடனடியாக இன்னொரு நாட்டுடன் யுத்தத்திற்கு தயாராவதுபோல் கூடங்குளத்தில் போலீஸ் மற்றும் ராணுவம் குவிக்கப் பட்டது .144  தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது .போராட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர் .மேலும் பலர் நள்ளிரவில் கைது செய்யப் பட்டனர் .ஆனால் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று ஜெ போட்ட திட்டம் பலிக்கவில்லை .

போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார் .பல்வேறு தடைகளையும் தாண்டி உண்ணாவிரதத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

உதயகுமாரை 24  மணி நேரத்தில் கைது செய்துவிடுவோம் என்று கூறிய காவல் துறையினர் நான்கு நாட்களாகியும் இடிந்தகரையை நெருங்கவில்லை .

தற்போது கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள காவல் படையினருக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காததால் பெரும்பாலானோர் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றனர் .அதிலும் குறிப்பாக பெண் போலீசார் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிற மாநிலத் தலை நகரங்களிலும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் வெடித்துள்ளது .

இதன் காரணமாக மீண்டும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிலைக்கு ஜெ தள்ளப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

19 மார்ச் 2012

கூடங்குளத்தில் உச்ச கட்ட கிளைமேக்ஸ் -வெற்றி யாருக்கு?

பலரும் எதிர் பார்த்தது போலவே சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிந்த மறுநாளே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை முகம் தெரிந்துவிட்டது.

கடந்த செப்டம்பர் 22  ம் தேதி தமிழக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம்    நிறைவேற்றினார் .

அதோடு நில்லாமல் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூடங்குளம் போராட்டத்தில் நானும் ஒருத்தியாக இருப்பேன் என்றும் கூறினார்

ஆனால் மக்களின் அச்சம் சிறிதளவும் தீராத நிலையில்   அணுமின் நிலையம் தொடங்க அனைவரும்  ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று இன்று அமைச்சரவையைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் .

அத்தோடு நில்லாமல் எந்த ஒரு தனி மனிதரையோ அல்லது பொதுச் சொத்தையோ அணு அளவுக்குகூட சேதம் விளைவிக்காமல் ஆறு மாதமாக போராடிவரும் அப்பாவி மக்களை கைது செய்து வருகிறார்கள் .இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை போராட்டத்தின் இறுதிக்கட்டமாக இது இருக்கும் என்று கருதுகிறேன் .

கைது நடவடிக்கையை தொடர்ந்து போராட்டக் குழுவின்  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் காலவரையற்ற உண்ணாநிலையைத் தொடங்கியுள்ளார் .மேலும்  பல்லாயிரக்கணக்கானோர் இடிந்தகரையில் குவிந்து வருகின்றனர் .

வேற்றூர்களில் இருந்து வருபவர்களை தடுக்க ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப் பட்டுள்ளதால் கடலோர கிராம மக்கள் கடல் வழியாக இடிந்தகரையை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர் .

கிளைமேக்ஸ் தொடங்கிவிட்டது ,வெற்றி கூடங்குளம் பகுதி பொதுமக்களுக்கா இல்லை அணு உலைக்கா என்பது விரைவில் தெரிய வரும் என நினைக்கிறேன் .

கைது செய்யப் பட்ட கூடங்குளத்தை சார்ந்த வக்கீல் சிவசுப்பிர மணியன் மற்றும் போராட்டக் குழுவினர் .

கடல் மார்க்கமாக இடிந்தகரை நோக்கி வரும் கடலோர கிராம மக்கள் .

17 மார்ச் 2012

இஞ்சி தின்ன குரங்கும் எலுமிச்சை தின்ன குழந்தையும் -காமெடி !

யாராவது சாப்பாட்டை வேண்டாவெறுப்பாக உண்டால் இஞ்சி தின்ன குரங்கு போல இருக்கிறான் என்று சொல்லுவோம்.

இஞ்சி தின்ன குரங்கு எப்படி ஃபீல் பண்ணுகிறது என்பது நமக்குத் தெரியாது (நியாயமாக தெரிந்திருக்கவேண்டும்).

இந்த காணொளியில் எலுமிச்சை சாறை உண்ட குழந்தைகள் எப்படி ஃபீல் பண்ணுகிறார்கள் என்பதை கண்டு மகிழுங்கள்.


16 மார்ச் 2012

கூடங்குளம் போராட்டத்தில் முன்னாள் கப்பல் படை தளபதி !

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன .

நேற்றைய (15-03-2012) உண்ணாவிரதத்தில் இந்திய கப்பல் படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் கலந்துகொண்டார்.

மேலும் விஞ்ஞானிகள் உட்பட நாடு முழுவதுமிருந்து 200  க்கும் மேற்பட்ட அணு உலை எதிர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர் .5000  க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மேலும் நேற்று கூடங்குளம் அணு உலையை உடனடியாக செயல் படுத்தவேண்டும் என்று கூறிய முன்னாள் முதல்வர் கருணாநிதியை கண்டித்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள்  பேரணி  சென்றனர் .

உண்ணாவிரத பந்தலில் உரையாற்றிய அட்மிரல் ராம்தாஸ் 

நேற்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் 

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பேரணி நடத்திய பொதுமக்கள் 

அணு உலை விழிப்புணர்வு :அவசியம் காணவேண்டிய வீடியோ

அணு உலை விழிப்புணர்வு :அவசியம் காணவேண்டிய வீடியோ .


13 மார்ச் 2012

கூடங்குளம் பிரச்சினை: சிறப்பு பிரார்த்தனை .

கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடவேண்டி விஜயாபதியில் அமைந்திருக்கும் விசுவாமித்திர மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் இன்று சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது .


1 .கூடங்குளம் அணு உலை நிரந்தரமாக மூடப் படவேண்டும் 

2 .அணு உலைக்கு ஆதரவாக கருத்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் மன நிலை மாறவேண்டும் 

3.சூழலுக்கு மாசற்ற வகையில் மின்சாரம் வழங்கி மக்கள் வாழ்வு வளமடையவேண்டும் ஆகிய வேண்டுதல்கள் வைக்கப்பட்டன .

பிரார்த்தனை நிகழ்ச்சியில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


விஜயாபதி விசுவாமித்திர மகாலிங்க சுவாமி திருக்கோவில் 

 ராஜரிஷி விசுவாமித்திரர் சந்நிதி

11 மார்ச் 2012

ஜப்பான் மக்களுக்கு அஞ்சலி.

கடந்த ஆண்டு இதே நாள் மறக்க முடியாத சோகம் ஒன்றை ஜப்பான் மக்கள் அடைந்த நாள் .


கடந்த 11-03 2011 ல் ஜப்பான் வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவை சந்தித்தது .9  ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பல நகரங்கள் சிதைந்து சின்னாபின்னமாயின 

அதைத் தொடர்ந்து வந்த சுனாமி பல்லாயிரம் மக்களை நிர்மூலமாக்கியது .

அடுத்த பெரும் சோதனையாக நான்கு அணு உலைகள் வெடித்து சிதறின .

அதனால் பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊரைக் காலி செய்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் .


இவ்வேளையில் பேரழிவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். 

வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டவர்கள் விரைவில் மீழவும் இது போன்றதொரு பேரழிவு இன்னொரு முறை நிகழாமல் இருக்கவும் இறைவனை வேண்டுவோம் .

10 மார்ச் 2012

உலகம் முழுவதும் அணு உலைக் கட்டுமானம் கடும் வீழ்ச்சி !

நன்றி : The Guardian
சமீப காலமாக உலக நாடுகள் மின் தேவைக்கு அணு உலைகள் அமைப்பதை வெகுவாகக் குறைத்துள்ளன.இது பற்றி கிரீன்விச் பல்கலைக் கழக எரிசக்தித் துறை பேராசிரியர் ஸ்டீவ் தாமஸ் கூறியதாவது ,  

கடந்த 2008  ம் ஆண்டு முதல்  2010  வரையிலான காலத்தில் உலகம் முழுவதும் 38  அணு உலைகள் புதிதாக கட்டத் துவங்கப் பட்டன .ஆனால் கடந்த ஒரு வருடமாக அதாவது 2011 -12  ல் உலகம் முழுவதும் வெறும் இரண்டு அணு உலைகள் மட்டுமே புதிதாகக் கட்டத் துவங்கப் பட்டுள்ளன .

இதற்குக் காரணம் கடந்த ஆண்டு ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் நிகழ்ந்த விபத்தால் உலக நாடுகளிடையே அணு உலைகள் அமைக்க அச்சம் எழுந்துள்ளது .ஃபுகுஷிமா அணு உலை விபத்தால் அதிக உயிர்ச் சேதம் இல்லையென்ற பொழுதும் பல்லாயிரக் கணக்கானோர் சொந்த வீடுகளை காலி செய்துவிட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் .

* ஜெர்மனி,ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளிலுள்ள அனைத்து அணு உலைகளையும் படிப் படியாக மூட முடிவு செய்துள்ளன.

* குவைத் அரசாங்கம் கட்டத் திட்டமிட்டிருந்த நான்கு அணு உலைகளுக்கான ஒப்பந்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாக ரத்து செய்துள்ளது .

* வெனிசுலா அரசு தனது அனைத்து அணு சக்தித் திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது .

* மெக்சிக்கோ கட்ட திட்டமிட்டிருந்த 10  அணு உலைகளுக்கான திட்டத்தை ரத்து செய்துள்ளது .

* சீன அரசு 2020  ம் ஆண்டிற்குள்ளாக புதிதாக 40000  மெகாவாட் மின்சாரம் அணு மின் நிலையங்கள் மூலமாக பெறத் திட்டமிட்டிருந்தது ,ஆனால் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அவை கிடப்பில் போடப் பட்டுள்ளன.

சமீபத்தில் உலகிலுள்ள 24  நாடுகளில் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் 62 % மக்கள் அணு உலைகள் வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர் .

07 மார்ச் 2012

கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தின் வரவு செலவுக் கணக்கு இதோ !

அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் 200 வது நாள் எட்டியதை முன்னிட்டு,

அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தங்கள் பணபரிவர்த்தனைகள்(a statement of accounts) முழுவதுமாக வெளியிட்டது..... வெளியிட்டடதின் காரணம் தங்கள் போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டு தொண்டுநிறுவனங்கள் உதவி செய்யவில்லை என்பதை நிரூபிக்கவே
 
அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் முப்பது பேர் கொண்ட நிதி குழு ஒன்றை வைத்து தங்களுக்கு வரும் உதவிகளை உரிய முறையில் ஆவண படுத்தியுள்ளது.... அந்த குழு உறுப்பினர் திரு.ஜி.ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கை இதோ அகத்து(August) 14, 2011 இல் ஆரம்பித்து Feb 26,2012 வரை இந்த இயக்கத்திற்கு வந்த பணம் அதற்க்கான கணக்குகளை சரிபார்க்கும் போது அந்த இயக்கத்திற்கு மொத்த பணஉதவி 2,517,991 (இந்திய ரூபாயில்).... இந்த பணத்தை வைத்து கொண்டு இயக்கப்போரட்டங்களை நடத்த அதிலிருந்து பயன்படுத்தப்பட்ட ருபாய் 1,764,233 நன்கொடையாக வசூளிக்ப்பட்ட பணத்திற்கு உரிய ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன .....

அதே போல் ஆரம்பகட்டத்தில் இந்த இயக்கம் ஆரம்பிப்பதற்க்கும், மக்கள் போராட்டத்தை அரசின் கவனத்திற்கும் எடுத்துசெல்ல இடிந்தகரை ஊரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ருபாய் 200 வசூலிக்கப்பட்டது பின்னர் இந்த விவகாரம் பெரிய அளவில் இட்டுசெல்லும், அதே போல் மிக நீண்ட நாட்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த குழுவினர் அந்த ஊர் மக்களிடம் வைத்த கோரிக்கை இது தான் "நீங்கள் தினசரி செய்யும் மீன்பிடி தொழிலில் வரும் வருமானத்தில் ஒரு வாரத்திற்கு பத்து சதவிகிதம் நன்கொடையாக தந்தால் போராட்டம் வெற்றிகரமாக இட்டுசெல்ல முடியும் என்பதே அந்த கோரிக்கை" மக்களும் அந்த கோரிக்கைக்கு செவி சாய்த்து தங்கள் ஒரு வார வருமானத்தில் பத்து சதவிகிதத்தை நன்கொடையாக அளித்தனர்...

இந்த நன்கொடைக்கு மேலும் வலுசேர்த்தவர்கள் அந்த ஊரில் உள்ள பீடி தொழிலாளர்கள்...அவர்களும் தங்கள் பங்கிற்கு முடிந்த உதவிகளை செய்தனர் ....

உடனே சில மேதாவிகள் வந்து எல்லாருமே போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்றால் யார் மீன்பிடி தொழில் செய்வார்கள் எப்படி அவர்களுக்கு வருமானம் வரும் ??

... ஐயா கனவான்களே .... காலையில் நடக்கும் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்வார்கள் இரவில் ஆண்கள் வந்து கலந்து கொள்வார்கள்.... மேலும் விளக்கம் வேண்டும் என்றால் தினசரி நடுநிலை பத்திரிகைகளை வாசித்து தெரிந்து கொள்ளவும் ....

போரட்டக்காரகள் இந்த போராட்டத்திற்கு வசூலிக்கப்பட்ட நன்கொடையிளிருந்து துளியுன்ட்டும் சுரண்டவில்லை... சுரண்டுவதற்கு அவர்கள் அரசியல் வாதிகள் இல்லையே...

தங்களின் போக்குவரத்து செலவுகள், பயணம் செய்யும் போது வரும் செலவுகள் அனைத்தும் தங்கள் கைகாசை போட்டே சமாளித்து கொண்டனர்...

யார் வேண்டுமானாலும் ரசீதுகள் அடித்து கொள்ளலாம்... இதை ஏற்கமுடியாது என்று கூறுபவர்கள், ஆதாரம் கேட்போர் இடிந்த கரைக்கு சென்று ஒரு ஆடிட்டரை வைத்து சரி பார்த்து கொள்ளவும்.... தப்பாக இருந்தால் முச்சந்தியில் வைத்து என்னை செருப்ப கழட்டி அடிக்கலாம்.... வணங்கி ஏற்றுக்கொள்வேன்....

மாறாக உண்மையாக இருந்தால் உங்கள் பதில்..... ??? அப்போது யாருமே வாயை திறக்கவே மாட்டீர்கள் இது நன்றாகவே தெரியும்...

மதியழகன்

04 மார்ச் 2012

மதங்களை ஒன்றிணைத்த கூடங்குளம் போராட்டம்!

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நடை பெற்று வரும் போராட்டம் பல்வேறு தடைகளையும் தாண்டி 200  நாட்களைக் கடந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. 

இப்போராட்டங்களில் நம் சமூகத்திற்கு மிகவும் அவசியமான சில நிகழ்வுகள் இங்கே நடக்கின்றன.

அது மத ஒருமைப் பாடு .

இடிந்தகரை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் ஏராளமான இந்து மதத்தினர் கலந்துகொள்கிறார்கள் .

இந்நிலையில் இன்று அணு உலையை மூடவேண்டி கூடங்குளம் அருள்மிகு அரசமரத்து விநாயகர் திருக்கோவிலிலிருந்து விஜயாபதி அருள்மிகு விஸ்வாமித்திர மகா லிங்கேஸ்வரர் கோவில்(இத்திருத்தலம் பிரம்ம ரிஷி பதவியை அடைய விஸ்வாமித்திர மகரிஷி ஸ்ரீராமன் ,ஸ்ரீஇலக்குவன் துணையோடு யாகம் செய்த இடமாக இராமாயணம் கூறுகிறது)  வரை 7  கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் பால்குடம் ஏந்தி பாத யாத்திரை  சென்றார்கள் .

இந்து வழிபாடுகளில் மிகவும் பக்திப்பூர்வமாக செய்யப்படும் நேர்த்திக் கடன்களில் பால் குடம் எடுத்துச் செல்வதும் ஒன்று.

இந்த ஊர்வலத்தில் பல கிறிஸ்தவர்களும் பால்குடம் ஏந்தி வந்தது மெச்சும்படியாக இருந்தது.




மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மார்க்கம் ஒன்றுதான் என்பதை இந்நிகழ்வுகள் உணர்த்தின.

02 மார்ச் 2012

துக்கமனைத்தையும் போக்கும் துக்க நிவாரண அஷ்டகம்


பாடலைக்   கேட்க இங்கே சுட்டவும்

மங்கல ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கணபாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


காணுறு மலரெனக் கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள்
தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்ச நல்பாணியளே
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனை கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


எண்ணிய படி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்களகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி