02 மார்ச் 2012

துக்கமனைத்தையும் போக்கும் துக்க நிவாரண அஷ்டகம்

பாடலைக்   கேட்க இங்கே சுட்டவும்

மங்கல ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கணபாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

காணுறு மலரெனக் கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள்
தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்ச நல்பாணியளே
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனை கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

எண்ணிய படி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்களகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

4 கருத்துகள்:

உணவு உலகம் சொன்னது…

ஆடியோ பகிர்வு அருமை. கேட்டு மகிழ்ந்தேன்.

பெயரில்லா சொன்னது…

நலம் தானே நண்பரே...?

வீட்டில் போய் கேட்கிறேன்...

வாழ்த்துக்கள்...

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
நீங்கள் ஆன்மீகம் எழுதுவீர்களா? வாழ்த்துகள்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

arul சொன்னது…

thanks for sharing