01 மே 2015

மே தினம் உருவானது எப்படி?

 
        1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது.

        1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. அப்போது திடீரென்று காவல்துறை யினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உரிமைக் குரல்

            இந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி கைது செய்யப் பட்டு ஒரு ஆண்டிற்கு மேலாக நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம்தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேற்கண்ட நான்கு தோழர்களுடன், அடால்ப் பிட்சர், மைக்கேல் ஸ்வார்ப், சாமுவெல் பீல்டன், லூயிஸ் லிங்க் மற்றும் ஆஸ்கர் நீப் ஆகிய தோழர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஆஸ்கர் நீப் என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக ஸ்வார்ப் மற்றும் பீல்டன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந்தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

நீதிமன்றத்தில் உரிமைக் குரல்

          சிகாகோ நகர தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர்களில் முதன்மையானவர் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆவார். நீதிமன்றத்தில் இவர் மீது குற்றம் சுமத்தி வாதாடிய அரசு வழக்குரைஞர், ‘ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் இவர் பின்னால் அணிதிரண்டதே இவர் செய்த முதன் மையான குற்றம்’ என வாதிட்டார். ஆகஸ்ட் ஸ்பைஸோ, ‘இந்த குற்றச்சாட்டே தனக்கு தற்காப்பு வாதமாக அமைந்துவிட்டது” என எதிர்வாதம் செய்தார். காவலர்கள் மீது தான் குண்டு வீசியதாக அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது இதன்மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வாதிட்டார். காவலர்கள் மீது வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டிருந்தால் அதை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்று தைரியத்தோடு  உரைத்தார்.

         மற்றொரு தோழர் ஆல்பர்ட் பர்ஸன் நீதிமன்றத்தில் வாதாடுகையில், மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல் தொழிலாளர்கள், போர்க்குணம் மற்றும் தியாகத்தின் மூலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தங்களுக்கு அளிக்கப்படும் மரணதண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும் என ஆர்ப்பரித்தார்.

            ஆஸ்கர் நீபி என்ற தோழர், கலவரம் விளைவிக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திற்கு தான் தலைமை வகித்தேன் என்ற உண்மையை இந்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வதாகவும், 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு நான் தலைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுவதாகவும் உரைத்தார்.

         அடால்ப் பிட்சர் என்ற தோழர் நீதி மன்றத்தில் உள்ள காவலர்களைப் பார்த்து எள்ளி நகையாடி இவர்களா சட்டத்தின் காவலர்கள்? இவர்கள் திருடர்கள். அடுத்தவர்களின் சொத்தினை அபகரிப்பவர்கள் என எக்காளமிட்டார்.

          தோழர் மைக்கேல் ஸ்வாப், நீதி மன்றத்தில் தங்களுடைய நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோசலிசத்தை அடைவதே என்று பிரகடனப்படுத்தினார்.

         தோழர் ஜார்ஜ் ஏங்கல், தொழிலாளர்களின் தேவை, வேலை, ரொட்டி, அமைதி, இவை மூன்றுதான். இதுகூட இவர்களுக்கு இன்று உத்தரவாதப்படுத்தப் படவில்லை என்று முழக்க மிட்டார்.

           தோழர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங்கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெயரில் அபகரித்து விடுவோம் என நினைக் கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல. யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம் என விளக்கினார்.

முதலாளித்துவத்திற்கு சாவுமணி!

        சுரண்டப்படும் தொழிலாளர்களை திரட்டி, சோசலிச உணர்வுகளை ஊட்டி முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதை ஒடுக்கவே, காவல்காரர்களே குண்டு வீசி சதி செய்து, தங்கள் மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிந்திருந்தும், மே தின தியாகிகள் சிறிதும் அஞ்ச வில்லை. 

     நீதிமன்றத்தில் வாதாடுவது மூலம் தாங்கள் தண்டனையிலிருந்து தப்பமுடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் கொலைக் களத்தையும் பிரச்சார மேடையாக பயன்படுத்தி முதலாளித்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்து, சோசலிசத்தின் மேன் மையை தூக்கிப் பிடித்து, நீதிமன்றத்தில் அவர்கள் ஆற்றிய உரையும், ஆதிக்க சக்திகளின் திணறலையும், வரலாற்று ஆவணமாக மாற்றிய அவர்களின் வீரத்தை போற்றி பாராட்ட வார்த்தை களே இல்லை. 
    அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீரத்துடன் போராடிய அந்த தோழர்களுக்கு கிடைத்த மரண தண்டனையே முதலாளித்துவத்திற்கு அடிக்கப்பட்ட முதல் சாவு மணியாக மாறியது. அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாக இன்று உருவெடுத்து உள்ளது.
மே தின தியாகிகள் வாழ்க!
நன்றி: NFPE
 
குறிப்பு: மீள் பதிவு

4 கருத்துகள்:

stalin wesley சொன்னது…

thanks

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி தோழர்...

தொடர்ந்து எழுதுங்கள்...

Unknown சொன்னது…

தொடருங்கள்! தொடர்வோம்!

joseph jeyabal சொன்னது…

மே தினம் என்பது தொழிலாளர் தினம் என்று மட்டுமே தெரியும். ஆனால் இதற்கு பின்னால் இவ்வளவு வலியோயு கூடிய சரித்திரம் இருக்கிறது என்பது தெரியாது மிக்க நன்றி..