17 செப்டம்பர் 2012

கூடங்குளத்தின் தற்போதைய நிலை - நேரடி தகவல்

ஒரு வருடத்திற்கும் மேலாக அமைதியான முறையில் நடைபெற்ற கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தமிழக அரசின் அடக்குமுறை காரணமாக கடந்த 10-9-2012 அன்று போர்க்களமாக மாறியது. கடற்கரையில் குழுமியிருந்து அணு உலைக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடியும் கண்ணீர் புகை குண்டும் வீசி பொதுமக்களை கலைந்தோட செய்தனர். 


தொடர்ந்து இடிந்தகரை ஊருக்குள்ளும் போலீஸ் படை  புகுந்தது. அதே வேளையில் கூடங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் கூடங்குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடி மறியலில் ஈடுபட்டனர் . உடனே இடிந்தகரைக்குள் சென்ற போலீசார் அனைவரும் கூடங்குளத்திற்கு திரும்பினர். 

போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே நடந்த சண்டையில் பொதுமக்கள் பலர் லத்தியாலும் , குண்டடிபட்டும் ரத்தக் காயமடைந்தனர். கண்ணீர் புகை குண்டுடன் ஆகாயத்தில்  சென்று வெடிக்கும் ஒரு வினோதமான குண்டும் போலீசாரால் உபயோகிக்கப் பட்டது. இந்த குண்டு பட்டதில் கூடங்குளம் கஸ்தூரி மருத்துவ மனை முகப்பு போர்டு சேதமடைந்தது. அடுத்ததாக 

11-9-2012 அன்றைய  தினத்தில்தான் கூடங்குளம் மக்கள் இது வரை காணாத ஒரு மோசமான தாக்குதலை எதிர்கொண்டனர். தனித்தனி குழுக்களாக வெவ்வேறு தெருக்களுக்கும் புகுந்த போலீஸ் படையினர் வழியில்  கண்டவர்கள் அனைவரையும் லத்தியால் தாக்கினர். சில குழந்தைகள், வயதுப்  பெண்களும் இத்தாக்குதலிலிருந்து தப்பவில்லை. 

நடுத்தர வயதுடைய ஆண்கள் பலர் கைது செய்யப் பட்டு திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட நீண்ட தூரத்திலுள்ள சிறைகளில் அடைக்கப் பட்டனர். இதன் காரணமாக நடுத்தர வயதுடைய ஆண்கள் பலரும் ஊரை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களை நாடி சென்றுவிட்டனர். 

தொடர்ந்து 10  - வது நாளாக கூடங்குளத்தில் கடைகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் இயக்கப் படவில்லை. தனியார் வாகன உரிமையாளர்களும் பயத்தின் காரணமாக வாகனங்களை இயக்கவில்லை. ஒருசில வயதான ஆண்களும், பெண்களும் மட்டுமே தெருக்களில் நடமாடுகின்றனர். 

144  தடை உத்தரவின் கீழ் பல மாதங்களாக சிக்கித் தவிக்கும் கூடங்குளம் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட இடம் போல் காட்சியளிக்கிறது.

6 கருத்துகள்:

Prabu Krishna சொன்னது…

கூடங்குளம் மக்களை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா. அடுத்த முறை இந்த கேவலமான அதிமுக, காங்கிரஸ். திமுக போன்றவை ஓட்டு கேட்டு வரும் போது அணு உலையை எதிர்ப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்??

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்தப் பிரச்சனை எப்போது முடிவுக்கு வருமோ...?

SNR.தேவதாஸ் சொன்னது…

கூடங்குளத்து பிரச்னையில் என்னால் தங்களது கருத்துடன் ஒத்து போக இயலாது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Unknown சொன்னது…

மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.

Unknown சொன்னது…

மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.