27 மார்ச் 2011

கூடங்குளம் அணு உலை மூடக் கோரி மக்கள் போராட்டம் .





    ஜப்பானில் கடந்த 11-3-2011 அன்று ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியைஅடுத்து அங்கு பேரழிவு ஏற்பட்டது .ஜப்பான் மக்களுக்கு சுனாமி என்பது புதிதான ஒன்று அல்ல .ஆனாலும் இந்த முறை சுனாமியின் தாக்குதல் மிகவும் கோரமாகவே இருந்தது .இந்நிலையில் அவர்கள் சற்றும் எதிர் பார்க்காத ஒரு பேராபத்து ஒன்று வந்தது .அதுதான் அங்குள்ள அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து .கதிரியக்க பாதிப்பால் அப்பகுதில் இருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள மக்கள் உடனடியாக அப்புறப் படுத்தப் பட்டுள்ளனர் .அதோடில்லாமல் 240 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டோக்யோ நகரத்திலும் குடிநீரில் கதிரியக்கம் உள்ளதால் ஜப்பான் அரசாங்கமும் மக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பிற்குள்ளாகி வருகின்றனர் .இதன் தாக்கம் தற்போது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது .இரண்டு நாட்களுக்கு முன் டில்லி மற்றும் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் மக்கள் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர் .கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் கடற்கரையில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு விரைவில் செயல் படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் கூடங்குளம் பகுதியில் அணுஉலை விபத்து நேர பாதுகாப்பு ஒத்திகை இது வரை நடத்தப்படவில்லை .காரணம் இங்குள்ள ஜனத்தொகை .ஒத்திகை
நடத்தப்படவேண்டிய20kmபகுதிக்குள்2லட்சத்திற்கும்அதிகமானோர்வசிக்கின்ற
னர்.இவர்களை எப்படி அப்புறப்படுத்துவது அப்படியே அப்புறப்படுத்தினாலும் எப்படி அவர்களை பேணுவது என்று மாவட்ட நிர்வாகம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது .இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அணுமின் நிலையம் குறித்து மிகவும் அச்சமடைந்துள்ளனர் .எனவே கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு பதிலாக அவ்விடத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு நேராத வகையில் வேறு மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர் .இதற்காக 26 -03 -2011 அன்று கூடங்குளம் பகுதி மக்கள் சுமார் 1000 பேர் ஜப்பான் மக்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு கூடங்குளம் அணுமின்திட்டத்தை நிறுத்தவேண்டும் என்று மௌன ஊர்வலம் சென்றனர் .கடந்த 23 -03 -2011 அன்று கூடங்குளம் அணுமின் திட்ட இயக்குனர் மக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் என்று கூடங்குளம் பகுதி மக்கள் 50 பேருக்கு பிரியாணி விருந்து அளித்தார் .ஆனால் மக்கள் அதை கண்டுகொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டது அணுமின் நிலைய நிர்வாகத்தை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது .  

25 மார்ச் 2011

ஜப்பானில் அணு உலை விபத்து -கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பிரியாணி விருந்து !

         உலகையே துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி மேலும் அதை விட கொடூரமான அணு உலை விபத்தால் நித்தமும் அவதிக்குள்ளாகி வருகிறாகள் அப்பாவி ஜப்பான் மக்கள் .உலக மக்கள் அனைவரும் இந்த கோர நிகழ்வுகளுக்கு அனுதாபம் தெரிவித்து வரும் இவ்வேளையில் கூடங்குளம் அணுமின் திட்ட நிர்வாகம் ஓர் அசிங்கத்தை அரங்கேற்றியிருக்கிறது .ஜப்பான் அணுஉலை விபத்துக்கு சிறிதும் அனுதாபம் தெரிவிக்காமல் கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவாளர்களை அழைத்துபிரியாணி விருந்து வழங்கி கொண்டாடியிருக்கிறது .

       ஜப்பான் அணு விபத்தால் பல்வேறு நாடுகளும் அணுசக்தி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய தொடங்கியுள்ளன .ஆனால் கூடங்குளம் அணுமின் திட்ட இயக்குனர் திரு காசிநாத் பாலாஜி அவசரமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ஜப்பான் போன்றதொரு விபத்து கூடங்குளத்தில் நிகழ வாய்ப்பே இல்லை என்று பேட்டியளித்தார் .அதோடு நில்லாமல் கூடங்குளம் பகுதி மக்களிடமிருந்து அணு உலைக்கு எதிர்ப்பு வரும் என்று எண்ணி எந்த ஒரு நிலையிலும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக செயல் படும் கூடங்குளம் ஊர் மக்கள் 50 பேரை   கடந்த 23-3-2011 அன்று அணுமின் நிலையத்திற்குள் அழைத்து சென்று அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் அவர்களுக்கு விருந்தளித்து தொடர்ந்து அணு மின் நிலையத்திற்கு ஆதரவு தரவேண்டும் எனவும் அணு மின் நிலையத்தின் நன்மைகள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுளார் .கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கூடங்குளம் பகுதி மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

16 மார்ச் 2011

இன்று புகுஷிமா -நாளை கூடங்குளம் ?


ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து சர்வதேச அணு விஞ்ஞானிகளின் எண்ணங்களை தவிடுபொடியாக்கிவிட்டது .       காரணம் உலக வல்லரசுகளில் ஒன்றான, இதுவரை அணு விபத்துக்களையே சந்தித்திராத, அணு உலை கட்டுமானத்தில் பெயர் பெற்ற ஒரு நாட்டில் இது நிகழ்ந்ததுதான் நிலநடுக்கமும் சுனாமியும் அடிக்கடி நிகழும் நாடு என்பதால் வேறு எந்த ஒரு நாடுகளையும் விட அணு உலைகளை மிக பாதுகாப்பாக அங்கு அமைத்திருந்தார்கள் .ஆனால் இயற்கையை வெல்ல எந்த ஒரு விஞ்ஞானியாலும் முடியாது என்பதை நிரூபித்துள்ளது தற்போது நிகழ்ந்துள்ள அசம்பாவிதம் .இதன் மூலம் மேலும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது
இனி வரும் நாட்களில் தெரியவரும் .
                                            இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் திரு .காசிநாத் பாலாஜி அவர்கள் நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ஜப்பானை போல் நிலநடுக்கம்      ஏற்பட்டாலும்              கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறியுள்ளார் .பாவம் அவரால்         வேறு என்ன       சொல்ல     முடியும் .        அவர் அவரது கடமையை செய்துள்ளார் . 4 வருடங்களுக்கு முன் அணுமின் நிலைய இயக்குனராக இருந்த திரு சுனில்குமார் அகர்வால் அவர்கள் அணுமின் நிலையத்தால் எந்த கதிர் வீச்சு பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார் ஆனால் நல்ல உடல்நிலையில் இருந்த அவர் திடீர் உடல்நல குறைவால் இறந்து போனார் .அவர் எந்த நோயால் இறந்தார் என்பது அணுசக்தி துறையினருக்கே வெளிச்சம் .
                                         கதிர் வீச்சு பாதிப்பு வராது என்று கூறும் அவர்கள் ஊழியர் குடியிருப்பை 8 கி.மீ க்கு அப்பால் கட்டியிருக்கிறார்கள் .atomic energy regulatory board  (AERB ) விதிமுறைகளுக்கு உட்பட்டு  ஊழியர் குடியிருப்பை கட்டியிருக்கிறோம்
என்று விளக்கம் கூறும் அவர்கள் பொதுமக்கள் விஷயத்தில் மட்டும் விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள் .AERB  விதிமுறைகளின் படி இல்லாமல் அணு உலை அமையும் இடத்தினருகில் மக்கள்நெருக்கம்      பல மடங்கு அதிகமாக உள்ளது .விபத்து நடந்தால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி ஒரு சிறு    விஷயம்கூட      இதுவரை    மக்களுக்கு தெரிய படுத்த வில்லை .சரி எப்படியோ விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொண்டாலும் பாதுகாப்பான அணு உலை அமைக்கிறார்களா என்றால் அதிலும் பல்வேறு
சந்தேகங்கள் எழுகிறது .அணு உலை செயல்படும் முன்பே அங்கு நிகழ்ந்து வரும் விபத்துக்களே சந்தேகத்திற்கு காரணம் .உதாரணமாக ஆறு மாதங்களுக்கு முன்பாக அங்கு நிகழ்ந்த பெரிய தீ விபத்து .அதன் மூலம் சுமார்
100 கோடி அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது (இப்ப நடக்கிற ஊழல்ல 100 கோடி யாருக்கு பெருசா தெரியுது) எத்தனை விபத்துக்கள்நடந்தாலும்அவற்றை பத்திரிகைகளிடம் இருந்து காப்பாற்றுவது எப்படி என்பது அவர்களுக்கு
மட்டுமே தெரிந்த ரகசியம் .ஆனால் அதையும் மீறி நல்ல முறையில் அணு உலை அமைத்தாலும் அதற்கு உத்தரவாதம் இல்லை என்பதை ஜப்பான் அணு விபத்து தெளிவாக்கியுள்ளது .
                             தற்போது விபத்து நேர பாதுகாப்பு ஒத்திகைநடத்துவதற்கான நேரம் வந்துள்ளது .அணு  உலையிலிருந்து 20  கிலோ மீட்டருக்குள் வசிக்கும் சுமார்  3 லட்சம் மக்களை எப்படி வெளியேற்றி ஒத்திகை பார்ப்பது என்று கூடங்குளம் அணுமின் திட்ட நிர்வாகமும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் மண்டையை பிய்த்துகொண்டுள்ளன .ஜப்பான் நாட்டில் நல்ல சாலை வசதிகள் வாகன வசதிகள் இருப்பதால் மக்களை எளிதில் வெளியேற்ற முடிகிறது .ஆனால் இங்குள்ள சாலை வசதிகளில் மக்களை எப்படிஉடனடியாக வெளியேற்றுவது அப்படியே வெளியேற்றினாலும் அவர்களை எங்கே தங்க வைத்து சாப்பாடு          போடுவது         என்பது மிகப்பெரிய கேள்வி .ஒத்திகை நடத்துவதற்கே கடினமாக இருக்கும் பொழுது விபத்து நேரத்தில்  எப்படி இருக்கும் என்பது நினைத்து பார்க்க முடியாதது .இத்தனை இடர்பாடு நிறைந்த அணு உலை தேவைதானா என்ற எண்ணம் கூடங்குளம் பகுதி மக்களிடம் மேலோங்கிகொண்டிருக்கிறது .    இது          ஆட்சியாளர்களுக்கும்               அணு முதலாளிகளுக்கும் புரிந்தால்      ஜப்பான் போன்றதொரு சங்கடத்தை நம் சந்ததியினர் அனுபவிக்கவேண்டியிராது .