05 டிசம்பர் 2015

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன என்றும் சுனிதா நரெயின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது எனவும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

நீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

ஈரநிலப்பகுயில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை எனவும் சுனிதா நரெயின் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

அனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

மனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

@ BBC

01 மே 2015

மே தினம் உருவானது எப்படி?

 
        1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது.

        1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. அப்போது திடீரென்று காவல்துறை யினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உரிமைக் குரல்

            இந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி கைது செய்யப் பட்டு ஒரு ஆண்டிற்கு மேலாக நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம்தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேற்கண்ட நான்கு தோழர்களுடன், அடால்ப் பிட்சர், மைக்கேல் ஸ்வார்ப், சாமுவெல் பீல்டன், லூயிஸ் லிங்க் மற்றும் ஆஸ்கர் நீப் ஆகிய தோழர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஆஸ்கர் நீப் என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக ஸ்வார்ப் மற்றும் பீல்டன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந்தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

நீதிமன்றத்தில் உரிமைக் குரல்

          சிகாகோ நகர தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர்களில் முதன்மையானவர் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆவார். நீதிமன்றத்தில் இவர் மீது குற்றம் சுமத்தி வாதாடிய அரசு வழக்குரைஞர், ‘ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் இவர் பின்னால் அணிதிரண்டதே இவர் செய்த முதன் மையான குற்றம்’ என வாதிட்டார். ஆகஸ்ட் ஸ்பைஸோ, ‘இந்த குற்றச்சாட்டே தனக்கு தற்காப்பு வாதமாக அமைந்துவிட்டது” என எதிர்வாதம் செய்தார். காவலர்கள் மீது தான் குண்டு வீசியதாக அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது இதன்மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வாதிட்டார். காவலர்கள் மீது வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டிருந்தால் அதை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்று தைரியத்தோடு  உரைத்தார்.

         மற்றொரு தோழர் ஆல்பர்ட் பர்ஸன் நீதிமன்றத்தில் வாதாடுகையில், மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல் தொழிலாளர்கள், போர்க்குணம் மற்றும் தியாகத்தின் மூலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தங்களுக்கு அளிக்கப்படும் மரணதண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும் என ஆர்ப்பரித்தார்.

            ஆஸ்கர் நீபி என்ற தோழர், கலவரம் விளைவிக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திற்கு தான் தலைமை வகித்தேன் என்ற உண்மையை இந்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வதாகவும், 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு நான் தலைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுவதாகவும் உரைத்தார்.

         அடால்ப் பிட்சர் என்ற தோழர் நீதி மன்றத்தில் உள்ள காவலர்களைப் பார்த்து எள்ளி நகையாடி இவர்களா சட்டத்தின் காவலர்கள்? இவர்கள் திருடர்கள். அடுத்தவர்களின் சொத்தினை அபகரிப்பவர்கள் என எக்காளமிட்டார்.

          தோழர் மைக்கேல் ஸ்வாப், நீதி மன்றத்தில் தங்களுடைய நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோசலிசத்தை அடைவதே என்று பிரகடனப்படுத்தினார்.

         தோழர் ஜார்ஜ் ஏங்கல், தொழிலாளர்களின் தேவை, வேலை, ரொட்டி, அமைதி, இவை மூன்றுதான். இதுகூட இவர்களுக்கு இன்று உத்தரவாதப்படுத்தப் படவில்லை என்று முழக்க மிட்டார்.

           தோழர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங்கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெயரில் அபகரித்து விடுவோம் என நினைக் கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல. யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம் என விளக்கினார்.

முதலாளித்துவத்திற்கு சாவுமணி!

        சுரண்டப்படும் தொழிலாளர்களை திரட்டி, சோசலிச உணர்வுகளை ஊட்டி முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதை ஒடுக்கவே, காவல்காரர்களே குண்டு வீசி சதி செய்து, தங்கள் மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிந்திருந்தும், மே தின தியாகிகள் சிறிதும் அஞ்ச வில்லை. 

     நீதிமன்றத்தில் வாதாடுவது மூலம் தாங்கள் தண்டனையிலிருந்து தப்பமுடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் கொலைக் களத்தையும் பிரச்சார மேடையாக பயன்படுத்தி முதலாளித்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்து, சோசலிசத்தின் மேன் மையை தூக்கிப் பிடித்து, நீதிமன்றத்தில் அவர்கள் ஆற்றிய உரையும், ஆதிக்க சக்திகளின் திணறலையும், வரலாற்று ஆவணமாக மாற்றிய அவர்களின் வீரத்தை போற்றி பாராட்ட வார்த்தை களே இல்லை. 
    அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீரத்துடன் போராடிய அந்த தோழர்களுக்கு கிடைத்த மரண தண்டனையே முதலாளித்துவத்திற்கு அடிக்கப்பட்ட முதல் சாவு மணியாக மாறியது. அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாக இன்று உருவெடுத்து உள்ளது.
மே தின தியாகிகள் வாழ்க!
நன்றி: NFPE
 
குறிப்பு: மீள் பதிவு

20 மே 2014

பா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா?

1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றியினை நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ் வரலாற்றிலேயே மிகப்பெரும் தோல்வியை சந்திருக்கிறது.

1984-ல் காங்கிரஸ் பெற்ற வெற்றியை விட இது சிறப்பு வாய்ந்தது எனலாம். காரணம் அப்போது காங்கிரசின் வெற்றி இந்திரா காந்தியின் மரணத்தின் மூலம் கிடைத்த அனுதாப ஓட்டுக்களால் கிடைத்த வெற்றி.


பாரதிய ஜனதா கட்சியின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் எதிர்ப்பு அலையா? அல்லது மோடி ஆதரவு அலையா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு அலை மட்டுமே காரணம் என்றால் காங்கிரஸ் கூட்டணி மட்டுமே மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கவேண்டும். 

ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடாத சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் பா.ஜ.க வால் பந்தாடப் பட்டுள்ளன.

எனவே காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த மிகப்பெரும் வெறுப்பு மட்டுமல்லாமல்  மோடி மீது மக்களுக்கு உள்ள மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஆகிய இரண்டும் சேர்ந்தே இப்பெரு வெற்றிக்கு காரணம் என எண்ணத் தோன்றுகிறது.

ஜெயலலிதா மற்றும் மம்தாவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைப்பதற்கு மோடி புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

பகவான் வரம் கொடுத்துட்டார். மோடி பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

06 மே 2014

பாடலிலிருந்து இசையை பிரிக்க மென்பொருள்!

இன்னிசை நிகழ்ச்சிகளில் நாம் பார்த்திருப்போம், வாத்தியக் கருவிகள் அதிகம் இல்லாமலேயே பின்னணி இசை அருமையாக ஒலிக்கும். 

குறைந்த பட்ஜெட்டில் இசை நிகழ்சிகள் நடத்துபவர்கள் karaoke CD மூலமாக இசையை ஒலிக்க  செய்கிறார்கள். பாடகர்கள் பாடலை பாடுகிறார்கள். 


இது போன்ற karaoke CD க்களை நமக்கு பிடித்த பாடல்களைக் கொண்டு நாமே உருவாக்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது. 

 Audacity  என்னும் இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். 

பின்பு இசையை பிரிக்க வேண்டிய பாடலை Audacity ல் திறந்துகொள்ளுங்கள். 


அதில் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளவாறு Effect மெனுவில் Vocal Remover என்பதை தேர்வுசெய்து பாடலில் உள்ள குரலை நீக்கிவிடலாம். பின்னர் File மெனுவில் Export ஐ அழுத்தி இசையை சேமித்துக்கொள்ளலாம்.

இம்மென்பொருளில் பாடலிலிருந்து இரைச்சலை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. 

பயன்படுத்திப்பாருங்கள் ...இது எத்தனை அருமையான இலவச மென்பொருள் என்பது தெரியும்.

01 ஏப்ரல் 2014

மரங்களின் தாய் பிறந்தநாள் இன்று!

மரக்கன்று நடுவது சுற்றுச்சூழலை மேம்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம், மரக்கன்று நடுதல் மட்டுமே சுற்றுச்சூழலை முழுமையாகக் காப்பாற்றிவிடுமா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், இந்த மரக்கன்று நடுதலைச் சற்றே வேறுபட்ட முறையில் நடைமுறைப்படுத்தி, வெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்பாடாக மட்டுமில்லாமல் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக, பெண்ணுரிமைக்குக் குரல் கொடுப்பதாக, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமாக மாற்றியவர் மறைந்த சுற்றுச்சூழல் போராளி வங்காரி மாத்தாய். அதைச் சாதித்துக் காட்டியது, அவர் தொடங்கிய பசுமை பட்டை இயக்கம் (Green belt movement).


கென்ய தலைநகர் நைரோபிக்கு வடக்கே, மாபெரும் கென்ய மலையின் பார்வையில் இருக்கும் மாகாணத் தலைநகரமான நையேரியில் 1940ஆம் ஆண்டு வங்காரி மாத்தாய் பிறந்தார். கென்யாவைச் சேர்ந்த பெரும்பாலான ஆப்பிரிக்கப் பெண்களைப் போலன்றி, அவர் உயர்கல்வி கற்றார். இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை அமெரிக்காவில் நிறைவு செய்தார். 1971-ல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண்ணாக ஆனார், தொடர்ந்து நைரோபி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியையாகவும் மாறினார்.

ஓர் உயிரியலாளராகக் காடு அழிப்பும், மண்ணரிப்பும் கிராமப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை அவர் நேரில் கண்டுணர்ந்தார். பெரும்பாலும் உடலுழைப்பைச் செலுத்தும் பெண்களிடம், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. கால்நடைகளின் மேய்ச்சல் நிலம் அழிக்கப்பட்டிருந்தது. விறகுக்கான மரங்களைத் தேடி மேலும்மேலும் தொலைதூரத்துக்குப் பெண்கள் அலைய வேண்டியிருந்தது.

1977-ம் ஆண்டு தன் பேராசிரியை பதவியை மாத்தாய் துறந்தார். அந்த வருட உலகச் சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5-ம் தேதி) அன்று தன் வீட்டின் புழக்கடையில் ஒன்பது மரங்களை நட்டு, பசுமை பட்டை என்ற இயக்கத்தை அவர் தொடங்கினார். ஆப்பிரிக்கக் காடுகளை மீட்டெடுப்பது, காடு அழிப்பினால் ஏற்பட்ட வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதே அந்த இயக்கத்தின் நோக்கம். இதன்மூலம் 30 வருடங்களில் மூன்று கோடி மரங்களை நடுவதற்கு ஏழைப் பெண்களைத் திரட்டினார்.

ஆப்பிரிக்காவில் காடழிப்பும் காடு இழப்பும், அதைச் பாலைவனமாக்கி விட்டதையும், நிலம் பாலைவனமாதல் உலகின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதையும் இப்போது நாம் பார்க்கிறோம். பாலைவனமாவதில் இருந்து காடுகளைப் பாதுகாப்பது என்பது, உலகச் சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதில் முக்கிய முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் மூலம் பசுமை பட்டை அமைப்பு அடித்தட்டு மக்களுக்கு உதவும் வளர்ச்சிக்கான சூழ்நிலையை உருவாக்கியது.

1980களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைவியாக மாத்தாய் பதவியேற்றார். மரம் நடுவது, பெண்களுக்கான அரசியல் பிரசாரத்தில் அவர் பெற்ற வெற்றிகள், கென்ய ஆட்சியில் இருந்தவர்களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தின. பின்னர் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராக அவர் மாறினார். நைரோபியில் உள்ள ஒரே பூங்காவான உஹுரு பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட கட்டடத்தைக் கட்ட கென்ய அரசு நினைத்தபோது, மாத்தாய் நடத்திய போராட்டத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இப்படி அவருடைய முயற்சிகள் சுற்றுச்சூழல், ஜனநாயகம், பெண் உரிமைக்கான போராட்டங்கள் அனைத்தும் ஒரே தளத்துக்கு வந்தன. பல்வேறு சமூக முன்னெடுப்புகளுக்கு எதிராக மாத்தாய் சித்திரவதைக்கு ஆளாக வேண்டியிருந்தது. அவர் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்; கண்ணீர் புகைக்குண்டாலும், தடியாலும் தாக்கப்பட்டார். அரசுக்கு இக்கட்டுகளை ஏற்படுத்தும் அந்தப் பெண்ணை அடக்குவதில் அரசாங்கம் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.

சர்வதேச அளவில் மாத்தாய் பிரபலமடைந்தார், தன்னுடைய பணிகளுக்காகப் பல பரிசுகளைப் பெற்றார். 1978ஆம் ஆண்டிலிருந்து கென்யாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த டேனியல் அரப் மோய் 2002ஆம் ஆண்டில் பதவி விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில், நாடாளுமன்றத்துக்கு மாத்தாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003-ம் ஆண்டில் பல்வேறு கட்சிகளின் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த ஆட்சியில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், காட்டுயிருக்கான இணை அமைச்சராக மாத்தாய் நியமிக்கப்பட்டார்.

ஜனநாயகம், மனித உரிமை, டேனியல் அரப் மோய் ஆட்சியின் கீழ் பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களில் வங்காரி மாத்தாய் முன்னணியில் இருந்தாலும், அவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில்கொண்டு, சுற்றுச்சூழல் சேவையும் உலக அமைதிக்குப் பங்களிக்கிறது என்பதை அங்கீகரிக்கும் வகையில் முதன்முறையாக நோபல் அமைதிப் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. 

இதன்மூலம் நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற கௌரவத்தையும் அவர் பெற்றார்.


நன்றி: தி இந்து