27 செப்டம்பர் 2012

பிறந்த நாள் வாழ்த்துகள் கூகுள்!கடவுளுக்கு அடுத்தபடியாக காசில்லாமல் உதவி செய்வது கூகுள் ஆண்டவர் என பெருமையுடன் அழைக்கப்படும்  கூகுள் . இன்று தனது 14 -வது பிறந்த நாள் கொண்டாடும் கூகுளுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

26 செப்டம்பர் 2012

IRCTC ல் விரைவாக தட்கல் டிக்கட் முன்பதிவு செய்ய

இணையத்தில் செய்யக்கூடிய மிகக் கடினமான வேலைகளில் ஒன்று   IRCTC ல் தட்கல் முறையில் பயணச் சீட்டு முன் பதிவு செய்வது . தட்கல் முன்பதிவு 10  மணிக்கு ஆரம்பமாகும். ஆனால் எவ்வளவு வேகமான இணைய இணைப்பை கொண்டிருந்தாலும் IRCTC  தளத்திற்குள் நுழைவது சவாலாகவே இருக்கும். தளத்திற்குள் நுழைந்தாலும் பயண சீட்டிற்கு தேவையான வேலைகளை செய்து முடிக்கும் முன்பாக பயண சீட்டுகள் காலியாகிவிடும். 

பின் வரும் முறைகளை பின்பற்றுவதன் மூலமாக 5  நிமிடத்திற்குள்ளாக தட்கல் முன்பதிவு செய்ய முடிகிறது. 


1) முன்பதிவு துவங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக அதாவது 9 .45  க்கு LOGIN செய்து IRCTC  தளத்திற்குள் நுழையவேண்டும். 

2) தளத்திற்குள் நுழைந்தபின் ஓய்வெடுத்துவிடாமல் தளத்தினுள் ஏதாவது தகவல்களை கிளிக் செய்து பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் . இல்லையெனில் தானாக LOGOUT  ஆகிவிடும்.   

3) முன்பதிவு தொடங்குவதற்கு சரியாக 2  நிமிடங்களுக்கு முன்பாக அதாவது  9 .58  க்கு புறப்படும் இடம் சேருமிடங்களை நிரப்பவும் . சம்மந்தப் பட்ட ரயில் நிலையங்களின் பெயரை உள்ளிடுவது கால தாமதத்திற்கு வழிவகுக்கும் . பதிலாக முன்னதாகவே நிலையங்களுக்கான குறியீடுகளை அறிந்து வைத்துக்கொண்டு அதை மட்டும் உள்ளீடு செய்யவேண்டும். (உ.தா.) NAGERCOIL JUNCTION- NCJ , CHENNAI EGMORE- MS 

4) இப்போது பயண சீட்டு இருப்பு விபரங்கள் தெரிய வரும் BOOK  கொடுப்பதற்கு முன்பாக 10  மணி ஆகிவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் . 

5) பணப் பரிமாற்றத்திற்கு NET  BANKING  ஐ விட CREDIT CARD , DEBIT CARD உபயோகிப்பது நேரத்தை மிச்சப் படுத்தும். 

குறிப்பு: எக்காரணம் கொண்டும் SERVICE  UNAVAILABLE  ERROR  வந்தால் தவிர REFRESH  செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது தளத்திலிருந்து உங்களை வெளியேற்றிவிடும். மீண்டும் தளத்திற்குள் நுழைவது குதிரைக் கொம்பாகிவிடும். 

நான் இந்த முறையைத்தான்  பயன்படுத்துகிறேன் . இதை விட  சிறந்த வழிகள்  ஏதாவது இருப்பின் கருத்துரையில்  தெரிவியுங்கள் .

24 செப்டம்பர் 2012

வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.

 பல வருடங்களாகவே காடுகளை அழிப்பதால் மழை குறைந்துவிட்டது என்றும் , வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்றும் வாயாரப் பேசி வருகின்றோம். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காண பெரும்பாலானோர் முயற்சி செய்யாமலேயே இருக்கிறோம். நாம் ஒருவர் மட்டும் நினைத்தால் நாட்டை சோலைவனம் ஆக்கிவிட முடியுமா என்று எண்ணியே பலரும் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடுகிறோம். 


ஆனாலும்  ஆங்காங்கே சில பெரிய உள்ளங்கள் பசுமை உலகம் படைத்தது வருகின்றனர். அரசுப் பேருந்து நடத்துனராக இருக்கின்ற திரு யோகநாதன் அவர்கள் தனி மனிதராக 1  லட்சம் மரங்கள் நட்டு சாதனை படைத்திருக்கிறார். அவர் பற்றிய தகவல்களை ஏற்கெனவே ஒரு பதிவில் பகிர்ந்திருந்தேன். 

அழிந்து போன காடுகளை மீட்டிடும் நோக்கிலும் மறைந்து போன மழையை வரவழைக்கும் நோக்கத்திலும் பசுமை விடியல் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டு அமைப்பின் மூலம் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் நடப் பட்டு வருகின்றன. திருமண விழாக்கள் போன்ற விழாக்களிலும் மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்த்தலை ஊக்கப் படுத்தி வருகிறது இவ்வமைப்பு . 

இது போன்ற காரியங்களில் அக்கறையுள்ள ஒவ்வொருவரையும் பசுமை விடியல் அழைக்கிறது. நீங்கள் செய்யவேண்டியது மிகச் சிறிய விஷயம்தான் . சூழலுக்கு நன்மை விளைவிக்கும் ஏதேனும் ஒரு மரக் கன்றை வாங்கி அதை உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கு மரம் வளர்க்க ஏதுவான பகுதியிலோ நட்டு அதை மரம் நடுபவரோடு சேர்த்து புகைப் படம் எடுத்து பசுமை விடியலுக்கு அனுப்புங்கள். 

இது உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயப்பது மட்டுமன்றி பசுமைக்கு வித்திடும் பசுமை விடியல் அமைப்பாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும். 

உங்கள் புகைப் படங்களை விளக்கத்தோடு ( மரம் நடுபவரின் பெயர் மற்றும் முகவரி ) tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 

உங்கள் படம் பசுமை விடியல் தளத்தில் பிரசுரிக்கப் படும்.  

பசுமை விடியலின் தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள். 

பசுமை விடியலின் முகநூல் பக்கத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள். 

இப்பதிவிற்கு நீங்கள் ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை கமென்ட் போடாவிட்டாலும் பரவாயில்லை மரம் நட என்னால் இயலாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். 

வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.

17 செப்டம்பர் 2012

கூடங்குளத்தின் தற்போதைய நிலை - நேரடி தகவல்

ஒரு வருடத்திற்கும் மேலாக அமைதியான முறையில் நடைபெற்ற கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தமிழக அரசின் அடக்குமுறை காரணமாக கடந்த 10-9-2012 அன்று போர்க்களமாக மாறியது. கடற்கரையில் குழுமியிருந்து அணு உலைக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடியும் கண்ணீர் புகை குண்டும் வீசி பொதுமக்களை கலைந்தோட செய்தனர். 


தொடர்ந்து இடிந்தகரை ஊருக்குள்ளும் போலீஸ் படை  புகுந்தது. அதே வேளையில் கூடங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் கூடங்குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடி மறியலில் ஈடுபட்டனர் . உடனே இடிந்தகரைக்குள் சென்ற போலீசார் அனைவரும் கூடங்குளத்திற்கு திரும்பினர். 

போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே நடந்த சண்டையில் பொதுமக்கள் பலர் லத்தியாலும் , குண்டடிபட்டும் ரத்தக் காயமடைந்தனர். கண்ணீர் புகை குண்டுடன் ஆகாயத்தில்  சென்று வெடிக்கும் ஒரு வினோதமான குண்டும் போலீசாரால் உபயோகிக்கப் பட்டது. இந்த குண்டு பட்டதில் கூடங்குளம் கஸ்தூரி மருத்துவ மனை முகப்பு போர்டு சேதமடைந்தது. அடுத்ததாக 

11-9-2012 அன்றைய  தினத்தில்தான் கூடங்குளம் மக்கள் இது வரை காணாத ஒரு மோசமான தாக்குதலை எதிர்கொண்டனர். தனித்தனி குழுக்களாக வெவ்வேறு தெருக்களுக்கும் புகுந்த போலீஸ் படையினர் வழியில்  கண்டவர்கள் அனைவரையும் லத்தியால் தாக்கினர். சில குழந்தைகள், வயதுப்  பெண்களும் இத்தாக்குதலிலிருந்து தப்பவில்லை. 

நடுத்தர வயதுடைய ஆண்கள் பலர் கைது செய்யப் பட்டு திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட நீண்ட தூரத்திலுள்ள சிறைகளில் அடைக்கப் பட்டனர். இதன் காரணமாக நடுத்தர வயதுடைய ஆண்கள் பலரும் ஊரை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களை நாடி சென்றுவிட்டனர். 

தொடர்ந்து 10  - வது நாளாக கூடங்குளத்தில் கடைகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் இயக்கப் படவில்லை. தனியார் வாகன உரிமையாளர்களும் பயத்தின் காரணமாக வாகனங்களை இயக்கவில்லை. ஒருசில வயதான ஆண்களும், பெண்களும் மட்டுமே தெருக்களில் நடமாடுகின்றனர். 

144  தடை உத்தரவின் கீழ் பல மாதங்களாக சிக்கித் தவிக்கும் கூடங்குளம் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட இடம் போல் காட்சியளிக்கிறது.

09 செப்டம்பர் 2012

கூடங்குளம் அணு உலை அதிரடி முற்றுகை!

கூடங்குளம் அணு உலையை இன்று (09 -09 -2012 )முற்றுகையிடப் போவதாக கூடங்குளம் போராட்டக் குழு அறிவித்திருந்தது. 

எப்படியேனும் இதை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் சுமார் 5000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

போராட்டக் குழுவினர் கூடியிருந்த இடிந்தகரையிலிருந்து கூடங்குளத்திற்கு வரும் அதனை சாலைகளையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கூடங்குளம் மார்க்கத்தில் செல்லும் அத்தனை அரசுப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டன. 


ஆனால் காவல் துறையினர் சற்றும் எதிர் பாரத வகையில் போராட்டக் காரர்கள் சுமார் 10000  பேர்   கடற்கரை வழியாக சென்று பகல் 12  மணியளவில் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

இதை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறையினரும் , கலெக்டர் உள்ளிட்டோரும் கால் நடையாக சென்று போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டுள்ள பகுதிக்கு சென்றனர் ( முற்றுகை பகுதிக்குள் எந்த வாகனமும் நுழைய முடியாது).  


போராட்டக் குழுவினருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. முற்றுகை நீடிக்கிறது.

07 செப்டம்பர் 2012

அணு உலையை முற்றுகையிட அழைப்பு.

கூடங்குளம் அணு மின் திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த 1  ஆண்டாக இடைவிடாது அறவழிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன . ஆனால் மத்திய, மாநில அரசுகள் போராட்டத்திற்கு சற்றும் மதிப்பளிக்காமல் அணு உலையை இயக்க தீவிரமாக முயன்று வருகின்றன. 

கூடங்குளத்திலிருந்து  7  கிலோமீட்டர் சுற்றளவுப் பகுதி தொடர்ந்து 6  மாதமாக 144  தடை உத்தரவின் கீழ் உள்ளது. இந்தியாவில் வேறெங்கிலும் இது போன்றதொரு மனித உரிமை மீறல் நடந்திருக்குமா என்பது தெரியவில்லை. 

இதன் காரணமாக போராட்டத்தை அதி தீவிரப் படுத்தும் விதமாக கூடங்குளம் அணு உலையை முற்றுகையிட ஒன்று சேருமாறு பல்வேறு இயக்கங்களுக்கும் ,மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. 


நேற்று மாலை பல்வேறு ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இடிந்தகரை வரத் தொடங்கினர் .அவர்களை போலீசார் இடிந்தகரை செல்ல விடாமல் தடுத்தனர். உடனடியாக இடிந்தகரையிலிருந்து சுமார் 5000  பேர் போலீசார் தடுத்த இடத்திற்கு வந்தனர். உடனே போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். போலீசார் சாலையில் வைத்திருந்த தடுப்புகளை பொதுமகள் அகற்றினர் .

03 செப்டம்பர் 2012

பள்ளி குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளால் ஆபத்து!

      சமீப காலமாக பள்ளிக் குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் தடுக்கவேண்டுமானால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். 
      
     
    இரண்டு நாட்களுக்கு முன்பாக தொழில் நிமித்தம் நான் நாகர்கோவில் சென்றுவிட்டு வரும் வழியில் கன்னியாகுமரி அருகிலுள்ள அஞ்சுகிராமம் என்ற ஊரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து நின்றேன். அப்போது மாலை சுமார் 5 மணியளவில்  ஒரு நகரப் பேருந்து, பேருந்து நிலையத்தினுள் நுழைந்தது. பேருந்து உள்ளே நுழையவும் சுமார் 30  மாணவர்கள் வேகமாக ஓடிச் சென்று கும்பலாக பேருந்தினுள் ஏற முற்பட்டனர். இத்தனைக்கும் அப்போது பேருந்து முழுமையாக நிறுத்தப் படவில்லை. பேருந்தில் ஏற முற்பட்ட மாணவர்களும் 5  ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயில்பவர்கள் போல் தோற்றமளித்தனர். அவர்கள் முட்டி மோதிக்கொண்டு பேருந்தினுள் ஏற முற்பட்டபோது ஒரு கணம் எனது நெஞ்சு பட படவென அடித்துக்கொண்டது. நெரிசலில் ஏதாவது ஒரு மாணவன் தவறி வண்டி சக்கரத்தில் சிக்கினால் என்னவாகும். 

     எனவே பள்ளிப் பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் மீது கவனம் செலுத்துவது போல் இதர வாகனங்கள் மூலமாக பயணம் செய்யும்  மாணவர்களும் பாதுகாப்பாக பயணிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். 

வந்தபின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்ததல்லவா.