13 நவம்பர் 2011

கூடங்குளம் பிரச்சினை :முன்னாள் மத்திய அமைச்சர் பல்டி !

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன .கடந்த செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் தொடர்ந்து  கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது .அதில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர் .

அவ்வமயம் கலந்துகொண்ட தலைவர்களில் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் .இவர் கூடங்குளம் அமைந்திருந்த திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் 1988  ல் இத்திட்டம் துவங்கப் பட்டது .

போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திரு தனுஷ்கோடி ஆதித்தன் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் இத்திட்டம் துவங்கப் பட்டதாகவும் இத்திட்டத்தின் தீமைகள் அப்போது தனக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டார் .


இடிந்தகரை போராட்டத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் 

கடந்த செப்டம்பர் 14  ம் தேதி இவ்வாறு கூறிய அவர் இரு தினங்களுக்கு முன் கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார் .

இது போலத்தான் பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் திரு சரவணாபெருமாள் இடிந்தகரை போராட்டத்தில் கலந்துகொண்டார் .ஆனால் இக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் அணு மின் நிலையம் தேவை என்கிறார் .

இது போல இரட்டை வேடம் போடும் தலைவர்களிடமும் கட்சிகளிடமும் மக்கள் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் .

04 நவம்பர் 2011

கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல விஞ்ஞானிகள் !

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன .இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மத்திய அரசு போராட்டக் குழு மற்றும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த 15  பேர் கொண்ட குழுவை அமைத்தது .

அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6  பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது .

இந்நிலையில் தற்போது அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பாக 21 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப் பட்டுள்ளது .இக்குழுவில் பிரபல விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர் .போராட்டக் குழு சார்பில் அமைக்கப் பட்டுள்ள நிபுணர் குழு விபரம்.


1)திரு புத்தி கோட்டா சுப்பாராவ் (அணு சக்தி பொறியாளர்  மற்றும் இந்திய கப்பல் படை முன்னாள் கேப்டன் )

2)திரு பரமேஸ்வரன்(இந்தியாவின் முதல் அணுசக்தி விஞ்ஞானி )

3)திரு சிவாஜி ராவ் (விசாகப்பட்டினம் பல்கலைக் கழக சுற்றுசூழல் மைய  இயக்குனர் )

4)திரு பத்மநாபன் (கதிர் வீச்சு ஆபத்து குறித்த ஐரோப்பிய கமிட்டி உறுப்பினர் )

5)திரு அருணாச்சலம் (நெல்லை பல்கலை கழக பரமகல்யாணி சுற்றுசூழல் அறிவியல் ஆய்வு மைய  தலைவர் )

6)திருமதி சவும்யா  தத்தா (இந்திராகாந்தி சுற்றுசூழல் ஆய்வு மைய முன்னாள் தலைவர்)

7)திரு மெகர் எஞ்சினியர் (அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்பியல் வல்லுநர் )

8)திரு சுரேந்திரா கடேகர் (அணு சம்மந்தமான எழுத்தாளர்)

9)திரு அஜ்மல்கான் (அண்ணாமலை பல்கலை கழக கடல்சார் உயிரியல் துறை பேராசிரியர் )

10)திரு லால் மோகன் (இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய  முதுநிலை விஞ்ஞானி)

11)டாக்டர் புகழேந்தி (கல்பாக்கம் சுற்றுசூழல் ஆராய்ச்சி மேற்கொண்டவர்)

12)டாக்டர் ரமேஷ்(கூடங்குளம் புவி அமைப்பு ஆராச்சியாளர்)

13)திரு அனுமந்த  ராவ் (தமிழ்நாடு  மின்சார வாரிய  ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினர்)

14)திரு லஜபதி  ராய் (மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் )

15)திரு சுக்லாசென்  (கொல்கத்தா பிரபல பொறியாளர்)

16)திரு சிவக்குமார்(சென்னை பிரேசிடன்சி கல்லூரி முன்னாள் இயற்பியல் துறை தலைவர் )

17)திரு ஜேக்கப் ஜான் (பொருளியல் வல்லுநர்)


18)திரு சர்மா (முன்னாள் இந்திய நிதித்துறை செயலாளர் )

மற்றும்  மூன்று பேர்

இவர்கள் அனைவரும் இணைந்து கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தரவுள்ளனர் .

தமிழகத்தின் சுற்றுலா தலங்களின் முழு விபரம் அறிய ஒரு தளம் !

அனைவருக்கும் மனதை மகிழ வைப்பதிலும்  மன அழுத்தத்தை குறைக்க வைப்பதிலும் சுற்றுலா தலங்கள் முக்கிய  பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. அதே வேளையில் ஓர்  இன்பமான சுற்றுலா அனுபவம் கிடைக்க சிறந்த சுற்றுலா வழி காட்டுதல் அவசியம் .


இக்குறையை போக்கி வருவதுதான்  தமிழக சுற்றுலா துறையின் இணைய தளம் .

இத்தளத்தில் தமிழகத்தில்  ஒவ்வொரு  மாவட்டத்திலுமுள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் ,பூங்காக்கள்,  நினைவிடங்கள்,கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்கள்  பற்றிய முழு விபரமும் உள்ளது .

தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டுதலுக்கு இதைவிட சிறந்த தளங்கள் இல்லை எனலாம் .

தமிழக சுற்றுலா துறையின் தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும்.

03 நவம்பர் 2011

மடி கணினிக்கு பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் !

BatteryInfoView .

இது ஒரு இலவச மென்பொருள் .இது மடி கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதை மடி கணினியில் நிறுவி இயக்கினால் மடி கணினியில் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரி குறித்த அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும் .


மடி கணினியை தயாரித்த நிறுவனம் சீரியல்  நம்பர் போன்றவற்றை அறியலாம் அத்தோடு  பேட்டரியில் எத்தனை சதவீதம் சக்தி காலியாகியுள்ளது இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் போன்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியும் .மிகவும் பயனுள்ள இம்மென்பொருளின் அளவு மிகச்சிறியது. 

02 நவம்பர் 2011

உங்கள் பிளாக் வெவ்வேறு கணினி திரைகளில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறியவேண்டுமா?

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நமக்குப் பிடித்த  முறையில் நம் வலைப்பூவை வடிவமைப்போம் .வடிவமைக்கும்போது அது நமது கணினி திரையில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை மட்டுமே நாம்  அறிந்திருப்போம் .ஆனால் வெவ்வேறு ரெசொலூஷன் கொண்ட கணினித் திரைகளில் அது எப்படி தோற்றமளிக்கும் என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம் .


உதாரணமாக நமது கணினி திரையின் ரெசொலூஷன் 1600 x900  என்று வைத்துக் கொள்வோம் நமது பிளாக் 800x600  ரெசொலூஷன் கொண்ட கணினி திரையில் எப்படி தோற்றமளிக்கும் என்பதை நாம் அறிய முடியாது .அதை நாம் அறிந்துகொண்டால் அதற்கேற்ற முறையில் நமது வலைப்பூவை வடிவமைக்கலாம் .

http://resolutiontester.com/ இந்த தளத்திற்கு சென்று நமது வலைப்பூ முகவரியைக் கொடுத்தால் வெவ்வேறு ரெசொலூஷன்களில் நமது வலைப்பூ எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம் .

பொதுவாக தற்போது உபயோகத்தில் உள்ள 95  சதவீத கணினி திரைகள் 1024x768  மற்றும் அதற்கு அதிகமான ரேசொலூஷனை கொண்டுள்ளன. இதற்கேற்ற முறையில்  நமது வலைப்பூ இருந்தால் அது வாசகர்களை கவரும் விதத்தில் அமையும் .

31 அக்டோபர் 2011

Rapidshare,Mediafire கோப்புகளை தேடுவதற்கான தளங்கள் !

Rapidshare,Mediafire  இந்த தளங்களை பற்றி அறியாதவர்கள் குறைவுதான். இத்தளங்களின் மூலமாக அளவில் பெரிய கோப்புகளை பிறரிடம் பகிரலாம் மேலும் பல்வேறு பயனுள்ள கோப்புகளை இவற்றின் மூலமாகப் பதிவிறக்கலாம்  .


மென்பொருட்களாக இருக்கட்டும் அல்லது மென்நூல்களாக இருக்கட்டும் அல்லது மூவியாக இருக்கட்டும் இப்படி நமக்கு பயனுள்ள பலவற்றை இத்தளங்களின் மூலமாக தரவிரக்கிகொள்ள முடியும் .

ஆனால் ஒரு குறை இத்தளங்களில் தேடு பொறி கிடையாது .அதன் காரணமாக இத்தளங்களில் என்னென்ன கிடைக்கும் என்பதை நாம் அறிய முடியாது. இக்குறையைப் போக்குவதற்காக இரண்டு தளங்கள் உள்ளன .

mediafire.pro.tc  என்ற இத்தளம் மூலமாக mediafire  தளத்திலுள்ள கோப்புகளை கூகுளில் தேடுவதைப் போல தேடித் பெறலாம் .

அது போல rapidlibrary.com என்ற இத்தளம் மூலமாக rapidshare  தளத்திலுள்ள கோப்புகளைத் தேடலாம் .

அப்படீன்னா இனிமேல் டவுன் லோடிங் ஜாலிதான் .

30 அக்டோபர் 2011

உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!

நன்றி :huffingtonpost 

இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் தேவையானது அதிவேக இணைய இணைப்பு .மந்தமான இணைய வேகம் இணைய பாவனையாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கக்கூடியது .இப்போது உலகிலேயே அதிவேக இன்டர்நெட் இணைப்புகளைக் கொண்ட 9  நாடுகளைப் பார்க்கலாம் .

9  வது இடம் : பெல்ஜியம் 

இணைய வேகத்தில்    பெல்ஜியம் நாடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .4  Mbps.


8  வது இடம் : ருமேனியா

இணைய வேகத்தில்    ருமேனியா  நாடு எட்டாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .8  Mbps.

7  வது இடம் : சுவிட்சர்லாந்து 
 
இணைய வேகத்தில்    சுவிட்சர்லாந்து  நாடு ஏழாவது  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .3  Mbps.

6  வது இடம் : செக் குடியரசு 
இணைய வேகத்தில்    செக் குடியரசு  நாடு ஆறாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .4  Mbps.


5  வது இடம் : லாட்வியா 

இணைய  வேகத்தில்     லாட்வியா   நாடு  ஐந்தாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .2  Mbps.


4  வது இடம் : நெதர்லாந்து 

இணைய வேகத்தில்    நெதர்லாந்து  நாடு நான்காவது  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .5  Mbps.

3  வது இடம் : ஜப்பான்
 
இணைய  வேகத்தில்     ஜப்பான்  நாடு  மூன்றாவது   இடத்தைப்   பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .9  Mbps.

2  வது இடம் : ஹாங்காங் 
இணைய வேகத்தில்    ஹாங்காங் நாடு இரண்டாவது  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 10 .3  Mbps.

1  வது இடம் : தென் கொரியா 

இணைய வேகத்தில்    தென் கொரியா  முதல்  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள     மொத்த   இன்டர்நெட்  இணைப்புகளின்  சராசரி  வேகம்           13.8  Mbps.



நீங்கள் மனதிற்குள் ஏதோ ஒன்று நினைப்பது தெரிகிறது .இந்தியா இதில் எத்தனையாவது இடம் என்றுதானே .ராஜா வெளியே வரட்டும் கேட்கலாம்.

29 அக்டோபர் 2011

உலகின் மிகப் பெரி .....ய்ய்ய சுனாமி

இயற்கை சீற்றங்களில் தற்போது மக்களை மிகவும் அச்சுறுத்தி வருவது சுனாமி என்றழைக்கப் படும் ஆழிப் பேரலை .உலகில் பல்வேறு பகுதிகளை தாக்கிய சுனாமிகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றை பார்ப்போம் 

1 ) ஜப்பான் 

1983 ல் ஜப்பானின் நோஷிரோ கரையை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 10  மீட்டர் வரை இருந்தது . 

2 ) சாலமன் தீவு  

2007 ல்  சாலமன் தீவுகளை  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 12  மீட்டர் வரை இருந்தது .

3 ) சாமொவா தீவு  

2009 ல் சாமொவா தீவை  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 14  மீட்டர் வரை இருந்தது

4 ) பாப்புவா நியூ கினியா   

1998 ல் பாப்புவா நியூ கினியாவை  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 15  மீட்டர் வரை இருந்தது.

5 ) சிலி    

1960 ல் சிலி நாட்டிலுள்ள வால்டிவியா என்னுமிடத்தை   சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 25  மீட்டர் வரை இருந்தது.

6 ) அமெரிக்கா    

1964 ல் அமெரிக்காவின் அலாஸ்க்காவை   சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 30  மீட்டர் வரை இருந்தது.

7 ) இந்தோனேஷியா     

2004 ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 30  மீட்டர் வரை இருந்தது.இது வரை தாக்கிய சுனாமிகளில் அதிக உயிர்களை பலி கொண்ட சுனாமி இதுதான் .

8 ) ஜப்பான்    

11 -3 -2011 ல் ஜப்பானை    சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 30  மீட்டர் வரை இருந்தது.

9 ) ஜப்பான்    

1993 ல் ஜப்பானின் ஹோக்கைடோவை     சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 31  மீட்டர் வரை இருந்தது.

10 ) அமெரிக்கா     

1958 ல் அமெரிக்காவிலுள்ள லித்துயா கடலில் சுனாமி உருவானது .   உலகிலேயே மிகப் பெரிய்ய சுனாமி இதுதான் .இதனால் உருவான அலைகள்  520  மீட்டர் உயரம் வரை இருந்தன .நல்ல வேளையாக  இந்த சுனாமி தாகிய இடத்தில் அதிகம் மக்கள்  வசிக்கவில்லை .இந்த சுனாமி காரணமாக இரண்டுபேர் உயிரிழந்தனர் .

தகவல்கள் : விக்கிபீடியாவிலிருந்து 
படங்கள்  : கூகுளிலிருந்து

பிற்சேர்க்கை : 

அணுமின் நிலையங்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பவை சுனாமி அலைகள்தான் .தமிழ் நாட்டிலுள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7  மீட்டர் உயரத்திலும் கூடங்குளம் அணு மின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 8  மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைந்துள்ளன .

28 அக்டோபர் 2011

உலக மக்களே ....இக்குழந்தைகளுக்கு ஒரு உதவி...

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நெல்லை ,குமரி,தூத்துக்குடி மாவட்ட மக்கள் இரு மாதமாக மிகத் தீவிரமாக போராடி வருகின்றனர் .அதிலும் இப்பகுதி பள்ளிக் குழந்தைகளிடையே போராட்ட ஆர்வம் மிகுதியாக உள்ளது .தற்போது இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடை பெற்று வருகிறது .

இந்நிலையில் இடிந்தகரை குழந்தைகள் உலக மக்களுக்கு அதிலும் குறிப்பாக இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொண்டு வரும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு கடல் வழியாக கடிதங்கள் அனுப்பியுள்ளனர் .



அக்கடிதத்தில் அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் அணுமின் நிலையங்களை மூடிவருகின்றன ஆனால் வியாபார நிமித்தமாக உங்கள் அரசு இந்தியாவிடம் அணு சக்தி ஒப்பந்தம் செய்து எங்களை அழிக்கப் பார்க்கிறது .எனவே நீங்கள் இதுபோன்ற ஒப்பந்தங்கள் வேண்டாம் என்று உங்கள் நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்துங்கள் என்பது போன்ற கருத்துக்களை எழுதியுள்ளனர் .

கடிதங்கள் பாதுகாப்பாக மரப் பெட்டியில் வைத்து அடைக்கப் பட்டு கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை விசைப் படகின் வாயிலாக கடலினுள் சென்று குழந்தைகள் மூலமாக மிதக்க விடப் பட்டன .

கடிதங்கள் தாங்கிய பெட்டிகள் நீங்கள் வசிக்கும் பகுதியை வந்தடைந்தாலும் அது சேரவேண்டிய இடத்திற்கு கடல்வழியாக அனுப்புங்கள் .இதுதான் நீங்கள் இக்குழந்தைகளுக்கு செய்யவேண்டிய உதவி .

25 அக்டோபர் 2011

மனத்தைக் கவரும் தீபாவளி வாழ்த்து அனுப்ப ஒரு சிறந்த தளம் !

நாளை தீபாவளி .

நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி  செய்தி வாயிலாகவும் வாழ்த்துக்கள் அனுப்புவதில் மும்முரமாக இருப்பீர்கள் .

உங்கள் வாழ்த்து அனுப்பும் பணியை எளிதாகவும் சிறப்பானதாகவும் ஆக்க ஒரு அருமையான தளம் உள்ளது .சிறந்த முறையில்  அனிமேஷன் செய்யப்பட்ட வித விதமான வாழ்த்து மாதிரிகள் இங்கு உள்ளன .

நீங்கள் விரும்பும் வாழ்த்து  மாதிரியை மேற்படி தளத்திலிருந்தே நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அலைப் பேசிக்கோ நேரடியாக அனுப்பிவிடலாம் .

இது முற்றிலும் இலவசமான சேவை .

தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்கவும் .

பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும் இத்தீபாவளி  மகிழ்ச்சியானதாக  அமைய இறைவனை வேண்டுகிறேன் .

24 அக்டோபர் 2011

அணு உலை வெடிக்கவில்லை ....தீபாவளி பட்டாசுதான் வெடித்தது -காமெடியோ காமெடி

கடந்த 21  ம் தேதி ஒரு தமிழ் தின நாளிதழில் இந்திய அணு மின் கழகம் ஓர் அறிக்கை கொடுத்துள்ளது .அதில் உலகின் மிக மோசமான அணு விபத்துக்கள் பற்றி விளக்கம்  கொடுத்துள்ளது .
 
இந்திய  அணு மின்  கழகம் : 1979  ல் அமெரிக்காவிலுள்ள  திரீ மைல் தீவில்  ஏற்பட்ட அணு விபத்தில்  கதிர்  வீச்சு ஏற்படவில்லை .
 
இப்ப நாம கேக்குறது   : திரீ மைல் தீவில்  ஏற்பட்ட அணு விபத்தில்  கதிர்  வீச்சு கலந்த  40000   கேலோன்  நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது  .அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த 1  லட்சத்து 40  ஆயிரம்  பேர் வெளியேற்றப் பட்டுள்ளார்கள் .இவ்விபத்தை தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்க அணுசக்தி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .( visit -http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident) .உங்கள் கருத்தை அமெரிக்க அரசாங்கத்திடம் கூறி அவர்கள் அச்சத்தை அகற்றுங்கள் .
 
இந்திய  அணு மின்  கழகம் : செர்நோபில்   அணு விபத்தால்   56  தீயணைப்பு வீரர்கள் மட்டுமே இறந்தனர் .விபத்தால் மறைமுகமாக கேன்சர் ஏற்பட்டுள்ளது.இது அனல் மின் நிலையங்களால் ஏற்படும்  பாதிப்பை   விட குறைவுதான் .
 
இப்ப நாம கேக்குறது   : செர்நோபில் விபத்தால் 4000  பேர் இறந்ததாகவும் லட்சக் கணக்கானோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது (visit:http://www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/index.html).என்ன  சார்    பூசணிக்காய்   தோட்டத்தையே சோத்துக்குள்ள மறைக்கிறீங்க . 
 
இந்திய  அணு மின்  கழகம் : சுனாமியின்  போது ஜப்பான் அணுமின் நிலையத்தில்  ஏற்பட்ட விபத்தில் தொழில் நுட்ப பிரச்சினையில் வேதியல்  கோளாறு ஏற்பட்டதே தவிர அணு உலை வெடிக்கவில்லை . 
 
இப்ப நாம கேக்குறது   : அப்படீன்னா  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜப்பான் விபத்து கிராபிக்ஸா .
 
கடைசியாக நாம் கூறிக்கொள்வது என்னவென்றால் இப்படி புளுகு மூட்டைகளை    அவிழ்த்து விடும் இந்திய அணுமின் கழகம் இந்தியாவில் அணு உலை வெடித்தால் அணு உலை வெடிக்கவில்லை தீபாவளிப் பட்டாசுதான் வெடித்தது என்று நம்மை ஏமாற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம் .
 
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

23 அக்டோபர் 2011

அணு உலை அரக்கனின் கொடூரம் :வீடியோ

ஜப்பானில் கடந்த 11-3-2011 அன்று நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணு உலைகள் கடும்   சேதமடைந்து  கதிரியக்கத்தை வெளியிட ஆரம்பித்தது .
அதை தொடர்ந்து அணு உலையை சுற்றி 30 கிலோமீட்டருக்குள் வசித்த மக்கள் உடனடியாக  வெளியேற்றப்பட்டனர் .

கதிர்வீச்சிலிருந்து தங்களை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக மக்கள் அனைவரும் பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மட்டும்  கையிலெடுத்துக்கொண்டு  மீதமுள்ள உடைமைகள்  அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேறினார்கள் .ஆனால் இந்த அவசரத்தில் தாங்கள் வளர்த்த செல்லப் பிராணிகள் மற்றும் கால் நடைகளை அவர்களுடன் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது .

கீழே காணப்போகும் வீடியோ புகுஷிமாவிலிருந்து 30 கிலோமீட்டருக்குள் இருந்த ஒரு கால்நடைப் பண்ணை .இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் நடைகள் வளர்க்கப் பட்டு வந்தன .பசுவின் பாலில் கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால்  பண்ணையின் உரிமையாளர்கள் அவற்றை  அடைத்துப்  போட்டுவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டார்கள் .பசுக்களுக்கு உணவில்லாததாலும் ,வெளியேற முடியாததாலும் அவை ஒவ்வொன்றாக மடியும் காட்சிதான் இது .





இது போல மேலும் பல இடங்களில் பல்லாயிரக் கணக்கான வீட்டு விலங்குகள் மடிந்துள்ளன .

இது போன்ற சம்பவங்களால்தான் மனம் மாறிய ஜப்பான் அரசு அணு உலைகளை மூட முடிவெடுத்துள்ளது .


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

20 அக்டோபர் 2011

அணு உலைகள் -மறைக்கப்படும் உண்மைகள் -விஞ்ஞானி தகவல்

இந்தியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் மூடக் கோரி விரைவில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவிருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் .

இப்போராட்டங்களில் கலந்துகொள்ள மேலும் பல விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார் .

அணு பொறியியலில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான் .

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த  அவர் மின் தேவைக்கு அணுசக்தி சிறந்த வழி கிடையாது என 1975  ல் அங்கிருந்து விலகினார் .அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை எனவும் அவை அனைத்தும் மூடப்படவேண்டியவை என்றும் கூறும் அவர் இந்திய அணுமின் நிலையங்கள் குறித்த பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன என்றும் கூறுகிறார் .

1974  முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலுள்ள அணு விஞ்ஞானிகள் அணு உலைகளுக்கு எதிராக போராட்டம்  நடத்தியதையும் அதனை ஏற்று 1977 க்கு பிறகு அங்கு அணு உலைகள் புதிதாக கட்டப் படாததையும் நினைவுகூரும் அவர் அமெரிக்காவிலுள்ள பழைய அணுமின் நிலையங்கள் பல ஆபத்து கருதி அனல்மின் நிலையங்களாக மாற்றப்பட்டதாகவும் கூறுகிறார் .

எந்த அணு உலையுமே பாதுகாப்பானவை என்பதற்கு  உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் .அணுமின் நிலையங்கள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மலிவானது என்று சாதாரண மக்கள்  ஏமாற்றப் படுகிறார்கள்  என்றும்   அணு உலைகளில் கழிவுகளை பராமரிக்க எவ்வளவு செலவாகிறது போன்ற தகவல்கள் ரகசியமாகவே உள்ளன என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .

இந்திய அணு உலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முற்றிலும் மீறப்படுவதாகவும் அணு உலைகளில் விபத்து நிகழ்ந்தால் 30  கிலோமீட்டருக்குள் வசிக்கும் மக்களை வெளியேற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும் அணு உலையைக் குளிர்வித்து கடலில் கலக்கும் நீரிலுள்ள மாசுகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார் .

இந்திய அணுமின் கழகம் NPCIL  2030  க்குள் நாட்டில் மொத்த மின்தேவையில் 8  சதவீதத்தை பூர்த்தி போவதாகக் கூறுகிறது  .இந்திய அணு சக்தியின் தந்தை டாக்டர் ஹோமி பாபா 2000  ஆவது ஆண்டுக்குள் இந்தியாவில் அணுசக்தி மூலம் 140000  மெகாவாட் மின்சாரம் தயாராகும் என்று கூறினார் .ஆனால் இன்று வரை வெறும் 4500  மெகாவாட்டைதான் கடக்க முடிந்துள்ளது என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .

அணு உலையைக் கட்ட பத்து வருடங்கள் ஆகிறது என்றும் அணு உலையின் செயல்பாட்டை நிறுத்த அணு உலையை கட்ட ஆகும் அதே அளவு செலவு ஆகும் .மேலும் இதற்கான தொழில் நுட்பமும்  இந்தியாவிடம் கிடையாது என்பதால் வேறு வழியின்றி அணு உலைகளின் ஆயுட்காலத்தை சில ஆண்டுகள் நீட்டிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர் .

சமீபத்தில் விபத்து நிகழ்ந்த புகுஷிமா அணு மின் நிலையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய திருவனந்தபுரத்தை சார்ந்த டாக்டர் யமுனா அணு உலையைக் குளிர்விக்க பயன்படுத்தப் பட்ட கடல் நீர் அப்பகுதியிலுள்ள மொத்த கடல் வளத்தையும் அழிக்கக்கூடியது என்கிறார்.அண்ணாமலை பல்கலை கழகத்தில் கடல் உயிரியல் பேராசிரியராக விளங்கும் டாக்டர் அஜித் குமாரும்  இதே கருத்தை கூறுகிறார் .

நன்றி : டி என் எ  இந்தியா

19 அக்டோபர் 2011

கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் உண்ணாவிரதம் .

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று (18-10-2011) 12  மணி நேரம் அடையாள உண்ணாவிரதமும் ,ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது .கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் எதிரில் அமைந்துள்ள கல்லூரி சதுக்கத்தில் உண்ணாவிரதம் நடை பெற்றது .

உண்ணாவிரதத்தில் அறிவியல் அறிஞர்கள் சுஜை பாசு ,சமர் பாக்சி மற்றும் மனோதத்துவ நிபுணர் மேகார் எஞ்சினியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர் .

இடிந்தகரை உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மூன்று மொழிகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன .


மேலும் அணு உலைக்கு எதிராக பலரிடம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்பப் பட்டது .கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கூடங்குளம் நோக்கி  யாத்திரை நடத்தவும் பலர் விருப்பம் தெரிவித்தனர் .

Thanks : dianuke.org

18 அக்டோபர் 2011

கல்பாக்கம் அணு உலை பணியாளர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு :NPCIL

இந்தியாவுக்கு அணு உலைகள் வேண்டுமா வேண்டாமா என்ற ஒரு பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் சமீபத்தில் கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர்கள் சிலருக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .

அணு உலையில் பணி புரியும் சில பராமரிப்பு பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட சற்று அதிகமாக டிரிடியம் கதிர் வீச்சு பாதிப்பு இருப்பதாக இந்திய அணுமின் கழகம் (NPCIL ) தெரிவித்துள்ளது .

சேதன் கோதாரி என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட  விளக்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவம் மூலம் இந்திய அணு உலைகள் பாதுகாப்பாக இயங்குகின்றன என்று கூறிவரும் மத்திய அரசின் முக மூடி கிழிந்துள்ளது


17 அக்டோபர் 2011

பணிகளைத் தொடர்ந்தால் மீண்டும் அணு மின் நிலையம் முற்றுகை

கூடங்குளம் அணு உலையை மூட  வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக கூடங்குளம்  பகுதியில்  தொடர்   போராட்டங்கள்   நடைபெற்று      வருகின்றன.
கடந்த ஒரு வாரமாக இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதமும் கூடங்குளம் அணு மின் நிலையம் முற்றுகைப் போராட்டமும் நடந்தது .


ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு வாரமாக இரவு பகலாக அணு மின் நிலையத்தை  முற்றுகையிட்டிருந்ததால் பணியாளர்கள் யாரும் அணுமின் நிலையத்திற்குள் நுழைய முடியவில்லை .

அதனைத் தொடர்ந்து இனியும் இங்கிருந்தால் வேலைக்காகாதென்று எண்ணி அணு மின் நிலையத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான வெளிமாநில ஒப்பந்தப் பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர் .

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு இடிந்தகரையில் 8 வது நாளாக நடைபெற்று வந்த 106 பேரின்  காலவரையற்ற உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டு வரப் பட்டது .அணு உலை முற்றுகைப் போராட்டமும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டது .எனினும் 

நாளையிலிருந்து இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது .மேலும் இனிமேலும் அணு உலையில் பணிகளைத் தொடர பணியாளர்கள் உள்ளே  நுழைந்தால் மீண்டும்  அணு உலையை முற்றுகையிடவும் தீர்மானிக்கப்ப்பட்டுள்ளது. 

மேற்படி முடிவுகள் நேற்று கூடங்குளத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன .

இதனிடையே இன்று தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு பழ நெடுமாறன் அவர்கள் இடிந்தகரை வந்து பொதுமக்களை சந்தித்து போராட்டத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார் .

16 அக்டோபர் 2011

அணுமின் நிலையங்கள் வேண்டாம் பிரபலங்கள் வழக்கு

நன்றி : BBC

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று போராட்டம் தொடரும் நிலையில், நாட்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அணுமின் நிலையங்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, முன்னாள் அதிகாரிகள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.

பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் பொதுநல வழக்குகளுக்கான மையம், முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ் உள்பட 14 பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

கோரிக்கைகள்

அரசு மற்றும் அணுசக்தி அமைப்பு சாராத சுயாதீன நிபுணர் குழுவை அமைத்து, தற்போதுள்ள மற்றும் உத்தேச அணுசக்தி நிலையங்கள், யுரேனிய சுரங்க வசதிகள் மற்றும் பிற அணுசக்தி எரிபொருள் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரம், பாதுகாப்பு குறித்தும், மாற்று எரிசக்தியுடன் ஒப்பிடுகையில் அணுசக்தி மின்சாரத்தின் சிக்கனத் தன்மை குறித்தும் ஆய்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆய்வுகள், சிக்கனத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் முடியும் வரை, உத்தேச அணுமின் நிலையங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரி்க்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, சுயாதீன அணுசக்தி நிபுணர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி்க்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய நலனுக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக உள்ள சிவில் அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டம் 2010-ஐ சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அணு விபத்து நடந்தால், அணுசக்தி நிலையங்களை நடத்துவோர் மற்றும் விநியோகஸ்தர்களை முழுமையாகப் பொறுப்பாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே நடந்துள்ள ஒப்பந்தங்களை வெளிப்படையாக அறிவிப்பதுடன், எதிர்காலத்தில் நடக்கும் அணுசக்தி உலைகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களையும், அது தொடர்பான தொழில்நுட்பங்களையும் வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்துக்குப் பிறகு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் அணுமின்சக்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், இந்திய அணுமின் நிலையங்கள் 101 சதம் பாதுகாப்பானதாக உள்ளதாக அணுசக்தித் துறை செயலர் அறிவித்திருப்பது மக்களை திசை திருப்பும் செயல் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடங்குளத்தை காலிசெய்யும் அணு உலை பணியாளர்கள் 

போராட்டம் எதிரொலி : ஊரை காலி செய்கின்றனர் அணுமின் நிலைய தொழிலாளர்கள்

கூடங்குளம்  அணு உலைக்கெதிரான  போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது .இடிந்தகரையில்  இரண்டாவது கட்டமாக 106 பேர்  எட்டாவது நாளாக  காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் அதே வேளையில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் அணு மின் நிலையம் அருகில்  பந்தலமைத்து இரவுபகலாக தங்கியிருந்து அணு உலைக்கு வேலைக்கு  செல்பவர்களை தடுத்து வருகின்றனர் .

தொடர் போராட்டங்கள்  காரணமாக பீகார் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை உதறிவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர் .

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வெளி மாநில தொழிலாளர் ஒருவர் கூறுகையில் தொடர்ந்து போராட்டம் நடை பெறுவதால் எங்களுக்கு போதிய வருமானமில்லை மேலும் கூடங்குளத்தில்  தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டு வருவதால் எங்களுக்கு சாப்பிட ,குடிக்க உணவுகள் கிடைக்கவில்லை எனவே இனிமேலும் இங்கிருக்க விரும்பவில்லை என்று கூறினார் .
ஊரை காலி செய்கின்றனர் அணுமின் நிலைய  தொழிலாளர்கள்

நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2000  வெளி மாநிலத்தவர்கள் ஊர் திரும்பியுள்ளனர் .மேலும் எஞ்சியுள்ளவர்களும் விரைவில் வெளியேறிவிடுவார்கள் என்றே தெரிகிறது .

சமீபத்தில் டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தையின் போது அணு மின் நிலையத்தில் பெரிய அளவிலான வேலைகள் எதுவும் நடக்கவில்லை சில பராமரிப்பு பணிகள் மட்டுமே நடப்பதாக போராட்டக்குழுவினரிடம் பிரதமர்  கூறியிருந்தார் .ஆனால் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்தப்பணியாளர்கள் வேலை செய்து வந்தது இப்போது தெரிய வருகிறது .

போலீஸ் வாகனத்தை சோதனையிட்ட பொதுமக்கள் 

அணு மின் நிலையத்திற்கு தொழிலாளர்கள் யாரும்  செல்லாததால் அணுமின் நிலையத்தினுள் வைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை பாதுகாக்கும் பொருட்டு ஒரு பெரிய போலீஸ் படை நேற்று முன்தினம் கூடங்குளம் வந்தது .ஆனால் அனைத்து சாலைகளும் அடைக்கப் பட்டிருந்ததால் அணு மின் நிலையத்திற்குள் செல்ல முடியவில்லை .அதைத் தொடர்ந்து அதிகாரிகள் போலீஸ் படை வந்ததற்கான காரணத்தைக் கூறி தங்களுக்கு வழி விடவேண்டும் என கோரினர் .அதற்கு பொது  மக்கள் போலீஸ் வாகனத்தில் தொழிலாளர்களை உள்ளே அழைத்து செல்ல வாய்பிருப்பதாகக் கூறி வழி விட மறுத்தனர் .

கூடங்குளம்  பைபாஸ் ரோட்டில்   பொதுமக்கள்  ஏற்படுத்தியுள்ள  தடுப்பு  

அதற்கு  அதிகாரிகள் எங்கள்  வாகனங்களில் தொழிலாளர்கள் யாருமில்லை வேண்டுமானால்  நீங்கள்  வந்து  சோதனை  செய்து பாருங்கள்  என்று கூறினார்கள்  .அதன்படி  பொதுமக்களில்  சிலர் வாகனங்களை சோதனையிட்டனர் .அதிகாரிகள் கூறிய படி தொழிலாளர்கள் யாருமில்லாததால் வாகனங்கள்  செல்ல அனுமதிக்கப்பட்டன .

போலீஸ் தாக்கியதால் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் மாற்றுத் திறனாளி மணிகண்டன் .

15 அக்டோபர் 2011

கூடங்குளம் பிரச்சனை :நடுநிலை தவறும் ஊடகங்கள்

தங்கள் வாழ்வாதாரமும் சந்ததிகளும்  பாதிக்கப்படும் என்பதற்காக கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக போராடி வருகிறார்கள் .அவர்கள்  போராட்டத்திற்கு  பல்வேறு  அரசியல்  கட்சிகள் ,சமூக  இயக்கங்கள் மட்டுமன்றி சமீபத்தில் தமிழக முதல்வரே ஆதரவு  தெரிவித்துள்ளார் .ஆனால் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது .
 
மத்திய அரசு எப்படிப்பட்ட அரசு என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.ஆனால் சில தமிழ் ஊடகங்களின் நடவடிக்கைதான் இவர்களுமா இப்படி என சிந்திக்க வைக்கிறது .
 
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இப்போராட்டத்தில் ஒருநாள் கூட தலை காட்டாத ஒரு நபர்  போராட்டக்குழுவின்  நடவடிக்கைகள்  சரியில்லை  யாருடைய  தூண்டுதலின்  பேரிலோதான் செயல்படுகிறது என பேட்டியளித்தார் .இந்த பேட்டியை பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டன .போராட்டக்குளுவில் பிளவு போராட்டக்குளுவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது என்றெல்லாம் செய்தி வெளியிட்டு போராட்டத்தை குழப்பி விடப் பார்த்தன .
 
ஆனால் இது உண்மையிலேயே மக்கள் போராட்டம் என்பதால் ஊடகங்களின் பொய்யுரை போராட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை .
 
அனைத்து ஊடக நிருபர்களும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு தினமும் வருகிறார்கள் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும் ,மர்ம நபர்கள் தூண்டுகிறார்கள் என்றால் யார் யாரெல்லாம் தூண்டுகிறார்கள் என்பதை ஊடகங்கள் கண்டுபிடித்து வெளியிடலாமே .ஏன் தேவையில்லாமால் வதந்தி பரப்புகின்றன .
 
இதற்கும் ஒரு படி மேலே சென்றது நேற்று ஒரு தொலைகாட்சி சானல் .
 
நேற்று ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் திரு கோபால் சாமி அவர்கள் உச்ச நீதி மன்றத்தில் அணு உலைகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது  .இந்த சானல் இந்த செய்தியை எப்படி கூறியது என்றால் விபரமானவர்களே இப்படி செய்யலாமா என்று .
 
எந்த ஒரு மனிதனும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது குற்றம் என்று எந்த சட்டத்திலாவது சொல்லப்பட்டுள்ளதா ? அப்படி இருக்கையில் ஊடகம் இப்படி செய்தி வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் ..இந்த ஊடகங்களை விட  அரசியல்வாதிகள் பரவாயில்லை என்று எண்ணுமளவிற்கு ஊடகங்களின் நடவடிக்கைகள் உள்ளன ..
 
நல்ல வேளை... இந்திய சுதந்திரப் போராட்டத்தின்  போது இதுபோன்ற ஊடகங்கள் இல்லை .இருந்திருந்தால் சுதந்திரம் கிடைக்கவிடாமல் ஆக்கியிருப்பார்கள் .
 
எனினும் கூடங்குளம் மக்கள் போராட்டம் வெல்லும் .

14 அக்டோபர் 2011

அணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கூடங்குளம் அணு உலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார  ஊர்களில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

தமிழக அரசும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது .எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அணு உலையை செயல்பட வைக்க முனைப்பு  காட்டி வந்தது .

இந்நிலையில் இன்று திடீரென மக்கள்  வெகுண்டெழுந்து அணு உலைப் பணிகளை இனி தாங்களே நிறுத்துவது என முடிவெடுத்தனர் .
 

13 அக்டோபர் 2011

அணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கூடங்குளம் அணு உலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார  ஊர்களில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

தமிழக அரசும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது .எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அணு உலையை செயல்பட வைக்க முனைப்பு  காட்டி வந்தது .

இந்நிலையில் இன்று திடீரென மக்கள்  வெகுண்டெழுந்து அணு உலைப் பணிகளை இனி தாங்களே நிறுத்துவது என முடிவெடுத்தனர் .

அதன் படி இன்று காலை சுமார் 9  மணியளவில் ஆயிரக்கணக்கானோர் அணு மின் நிலையம் முன்பு திரண்டனர் .அனைவரும் இணைந்து அணு உலைக்கு பணியாளர்கள் வரும் வாகனங்களை  திருப்பி அனுப்பினர் .

மேலும்  இரு சக்கர வாகனகளில் வருபவர்களையும் தடுத்து நிறுத்தி அணு உலையால் நம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் இனி நீங்கள் அணுமின் நிலைய வேலைகளை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு செல்லுங்கள் என்று அறிவுரை  கூறி அனுப்பி  வைத்தனர் .

இதன்காரணமாக அணு உலைப் பணிகள் முற்றிலும் தடை பட்டுள்ளது .

இதனிடையே இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொட முதல்வர் போராடும் மக்களில் தன்னையும் ஒருத்தியாக இணைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் .இது மக்களுக்கு  மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது .

அணு உலையை மூடிவிட்டுத்தான் வீடு திரும்புவோம்  என்று அணு மின் நிலையத்திற்கு அருகில் தங்கியுள்ள மக்கள் 

எனினும் மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வரும் வரையில்  அணு உலை அருகிலிருந்து அகலப் போவதில்லை என்று கூறி பெரிய பந்தல் அமைத்து சுமார் 3000 பெண்கள் உட்பட சுமார் 5000 அங்கேயே தங்கியுள்ளனர் .

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உணவு தயாராகிறது 

இதன் காரணமாக அணு உலைப் பணிகளை நிறுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது  .

மக்களின் இந்த  நியாயமான போராட்டம் வெற்றி பெற அனைவரும் உதவுங்கள் .

12 அக்டோபர் 2011

அணுஉலை : மக்களின் அச்சத்தை போக்க எளிய வழி !

கூடங்குளம் அணு மின் நிலையத்தை     மூடவேண்டும் என்று கோரி நெல்லை ,
குமரி,தூத்துக்குடி மாவட்ட மக்கள்          மிகத்தீவிரமாக போராடி வருகிறார்கள் .
ஆனால்     அரசோ       மக்களின்    அச்சத்தை    போக்குவோம் என்று கூறுகிறது .
ஆனாலும் எவ்வாறு அச்சத்தை போக்குவது என்று அரசு முடிவெடுக்கத் திணறி வருகிறது .

ஏதோ என்னால் இயன்ற வரையில் அச்சத்தை போக்குவதற்குரிய சில வழிகளை சொல்கிறேன் .

அச்சம் 1 :அணு உலை செயல்பட ஆரம்பித்தால் அருகில் வசிக்கும் மக்களுக்கு  புற்று  நோய் வரும் .

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்திலிருந்து 10  கிலோமீட்டருக்கு அப்பால் கட்டப்பட்டிருக்கும் ஊழியர் குடியிருப்பை 3  கிலோமீட்டருக்குள் கொண்டுவரவேண்டும் .பயத்தை போக்க விரும்பும் அதிகாரிகள் நிரந்தரமாக கூடங்குளம் பகுதியிலேயே குடியேறவேண்டும் .

அச்சம் 2 :மீன்களுக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள் .

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்தில் பணிபுரிவோர் அனைவரும் இப்பகுதியிலிருந்து பிடிக்கப்படும் மீன்களையே வாங்கி உண்ணவேண்டும் .வியாபாரிகள் மீன்களை வாங்க மறுத்தால் அரசே மீன்களை கொள்முதல் செய்துவிட்டு அதற்குரிய விலையை மீனவர்களுக்கு வழங்கவேண்டும் .

அச்சம் 3 : அணு உலை வெடித்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் 

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்திலிருந்து 50  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் சுமார் 18 லட்சம் மக்களை 24  மணி நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றியும் உடனடியாக இவர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் .இதை மூன்று முறை ஒத்திகையாக நிகழ்த்தி காண்பிக்கவேண்டும் .

இதுபோல இன்னும் சில அச்சங்களும் அதற்கு தீர்வுகளும் உள்ளன .

ஆனால் இந்த எல்லா அச்சங்களையும் எளிதாக போக்க ஒரு சிறந்த வழி உள்ளது .அது அணு உலையை உடனடியாக மூடிவிடுவதுதான் .

விஸ்வாமித்திரர் யாகம் செய்த இடத்தில் மீண்டும் யாகம் !

ராஜரிஷி பட்டம் பெறுவதற்காக விஸ்வாமித்திரர் யாகம் செய்ததாகவும் அதற்கு ராமரும் ,லக்ஷ்மணரும் காவல் புரிந்ததாகவும் அதற்கு இடையூறு செய்த தாடகையை ராமர் வதம் செய்ததாகவும் புராணங்கள் வாயிலாக தெரிய வருகின்றன .

அவ்வாறு யாகம் செய்ததாக கூறப்படும் இடம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி  அருகிலுள்ள தில்லை வனம் தோப்பில் அமைந்துள்ளது .உலகிலேயே விஸ்வாமித்திரருக்கு இங்கு மட்டும்தான் ஆலயம் அமைந்துள்ளது .

இவ்வாலயத்தில் நேற்று (11-10-2011)  ஒரு யாகம் நடத்தப்பட்டது .

யாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக .

யாகத்தை கோயில் அர்ச்சகர் முத்துப்பட்டர் நடத்தினார் .கூடங்குளம் பகுதி மக்கள் பலர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர் .சர்வமதத்தினரும் இதில் கலந்துகொண்டனர் .

 இவ்வாலயம் அணுமின் நிலையத்திலிருந்து 5  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

11 அக்டோபர் 2011

கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது .இருப்பினும் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு சாதகமாக உறுதியான பதில்கள் கிடைக்காததால் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது .

இது மக்கள் போராட்டமாக இருந்தாலும் சில ஊடகங்களும் ,அணு உலை ஆதரவாளர்களும் இப்போராட்டம் மர்ம நபர்களால் தூண்டி விடப் படுகிறது என்று நடுநிலையாளர்களை திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றார்கள் .இப்போராட்டத்தில் கலந்துகொண்டவன் என்ற முறையில் உண்மை நிலவரத்தை உங்களுக்கு தருகின்றேன் .

கடந்த 11-9-2011 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது .உண்ணாவிரதம் தொடங்கி 5  நாட்கள் கடந்த நிலையில் போராட்ட குழுவில் முக்கிய அங்கம் வகிக்கும் திரு உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டனர் .அத்திட்டத்தை உண்ணாவிரதமிருந்த 127  பேரிடமும் நாசூக்காக தெரிவித்தனர்.

ஆனால் அக்கணமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோர் போராட்டக் குழுவினரிடம் அணு உலையை மூடுவதற்கு முன்பாக எக்காரணம் கொண்டும் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என்று மிகவும் கண்டிப்பாக கூறிவிட்டனர் .

அன்றைய தினம் தமிழக அமைச்சரவைக் குழுவும் போராட்டக் குழுவினரை சந்திக்க தாலுகா தலை நகருக்கு வந்திருந்தனர் .அதே வேளையில் அமைச்சர் குழுவை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்வதற்கு போராட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கானோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர் .அதற்கு காரணம் சரியான முடிவு கிடைக்காமல் போராட்டக்குழுவினர் போராட்டத்தை முடித்துவிடக்கூடாது என்பதால்தான் .

அணு உலையை மூட அமைச்சர் குழு உறுதி கூறாவிட்டால் பேச்சு வார்த்தையை நிராகரித்துவிடுவோம் என்று போராட்டக்குழுவினர் பொதுமக்களிடம் உருதியளித்தபின்புதான் பேச்சு வார்த்தைக்கு பொது மக்களும் ,உண்ணாவிரதத்தில் ஈடு பட்டிருந்தோரும் அனுமதித்தனர் .

பலரும் நினைப்பது போல் உதயகுமாரோ ,அல்லது ஆயர்களோ போராட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது .இதற்கு காரணம் அணு உலையை மூடுவதற்காக எதையும் இழக்கத் துணிந்துள்ள பல்லாயிரக்கணக்கான கூடங்குளம் பகுதி மக்கள்தான் .

இவர்களை மீறி போராட்டக்குழுவினர் ஒரு பாதகமான முடிவை எடுத்தால் அது அவர்களுக்கே பெரிய பாதகமாக முடியலாம் .இதன் காரணமாகத்தான் தற்போது மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது .

தற்போது இப்பகுதி மக்களின் மன நிலை அணு உலையை மூடுவதற்கு முன்பாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கூடாது என்பதுதான் .

டிஸ்கி : கடந்த மாதம் நடை பெற்ற 11 நாள்  உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதால் எனது உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளானதால் மருத்துவர் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறேன் .

27 செப்டம்பர் 2011

மீண்டு (ம்) வருவேன் ....

11  நாள் உண்ணாவிரதத்தின் பின் விளைவுகளிலிருந்து மீண்டு (ம்) வருவேன் ....

நம்பிக்கையுடன் 
கூடல் பாலா

22 செப்டம்பர் 2011

காலவரையற்ற உண்ணாவிரதம் நிறைவு -போராட்டம் தொடர்கிறது

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நடைபெற்று வந்த 127  பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று காலை 11  மணியளவில் நிறைவு பெற்றது .எனினும் சாதகமான சூழ்நிலை வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது .

கடந்த 11  நாட்களாக இடிந்தகரையில் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தோம் .நேற்று முதல்வருடன் நடந்த பேச்சு வார்த்தையில் அணு உலைக்கெதிராக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழு அறிவித்தது .

அதன்படி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 127  பேரின் உண்ணாவிரதத்தை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் திரு இவான் அம்புரோஸ் அவர்கள் பழச்சாறு கொடுத்து நிறைவு செய்தார் .எனினும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தை தொடர்கின்றனர் .

இப்போதிலிருந்து நடைபெறுகின்ற போராட்டங்கள் முற்றிலும் மத்திய அரசுக்கெதிராக அணு உலையை மூடக்கோரும் போராட்டமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

எனது உடல்நிலை சாதாரணமாகவே உள்ளது .

அணு உலையை மூடும் வரையில் தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம் .

21 செப்டம்பர் 2011

வெற்றி : விரைவில் முடிவுக்கு வருகிறது உண்ணாவிரதம்

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 11 வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று போராட்டக்குழுவினர் நேற்று இரவு சென்னைக்கு பேச்சு வார்த்தைக்கு புறப்பட்டுச் சென்றனர் .

இன்று முதல்வருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது .அப்போது அணு உலையை தற்காலிகமாக மூட நாளை அமைச்சரவையைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் முடிவு செய்துள்ளார் .மேலும் நிரந்தரமாக மூட மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கப்போவதில்லை எனவும் முதல்வர் உறுதியளித்துள்ளார் .

எனவே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.

கூடிய விரைவில் உண்ணாவிரதம் முறைப்படி முடிவுக்கு வரும் . 

போராட்டம் வெற்றி பெற உழைத்த மக்களுக்கும் உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பதிவுலக சொந்தங்களுக்கும் மிக்க நன்றி !

20 செப்டம்பர் 2011

அணு உலை போராட்டக்குழு அலைக்கழிப்பு -பேச்சு வார்த்தைகள் ரத்து

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 127 பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று பத்தாவது நாளாக நடைபெறுகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக நெல்லை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தி வணிகர்கள் ஆதரவளித்தனர் .
இந்நிலையில் போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்த இடிந்தகரை வருவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார் .ஆனால் இன்று மாலை வரை வரவில்லை .

திடீரென மாலை 4 -25 மணிக்கு ராதாபுரம் தாலுகா அலுவலகத்திலுள்ள தலையாரி இடிந்தகரை வந்து 4 -30 மணிக்கு அமைச்சரை சந்திக்க வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் .இடிந்தகரையில் இருந்து ராதாபுரம் செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகும் அப்படியிருக்கையில் இந்த அழைப்பு போராட்டக் குழுவினரை அவமதிக்கும் செயல் எனக் கருதப் பட்டதால் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த 15 000 க்கும் அதிகமான மக்கள் அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .

இந்நிலையில் 16 பேர் கொண்ட குழு நாளை தமிழக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யபட்டிருந்தது .ஆனால் முதல்வர் அலுவலகத்தால் இப்பட்டியல் திருத்தியமைக்கப் பட்டது .பட்டியலிலிருந்து போராட்டத்திற்கு பேராதரவு அளித்து வரும் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் பெயர் நீக்கப்பட்டது .குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் 10 ஆக குறைக்க கேட்டுக்கொள்ள பட்டது .இதற்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதன் காரணமாக முதலமைச்சருடனான பேச்சு வார்த்தையும் ரத்து செய்யப்பட்டது .


இன்று உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள்

மேலும் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை விடப்பட்டுள்ளது .அதில் அணு உலை பிரச்சினையில் நேற்று முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அதே நேரத்தில் அமைச்சரவையைக்கூட்டி கூடங்குளம் அணு உலைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினால் போராட்டம் கைவிடப்படும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது .

போராட்டம் 11 நாளை நோக்கி .....
-------------------------------------------------------------------------------------------------------
சற்று முன் : மத்திய அமைச்சர் நாராயண சாமி தற்போது உண்ணாவிரதத்தை பார்வையிட்டு சென்றார் .பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை .

இது நாட்டை காக்கும் போராட்டம் :மேதா பட்கர்

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 10  வது நாளாக 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறோம் .

கூடங்குளம் பகுதியைச் சார்ந்த பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர் .வியாபாரிகள் தொடர்ந்து கடையடைப்பு நடத்தி வருகின்றனர் .தினமும் பத்தாயிரக் கணக்கான மக்கள் உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்து வருகிறார்கள் .

இந்த மாபெரும் போராட்டத்தை மீனவர்களின் போராட்டம் என சிலர் திசை திருப்ப முயன்றனர் .ஆனால் அது முறியடிக்கப் பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் இது தமிழகத்திற்கான போராட்டம் என்றுணர்ந்து தங்கள் ஆதரவை இப்போராட்டத்திற்கு வழங்கி வருகிறார்கள் .

நேற்று உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட மக்கள்  

இந்நிலையில் நேற்று இப்போராட்டத்தில் நேரில் கலந்துகொண்ட மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேதா பட்கர் இப்போராட்டம் மீனவர்களுக்கு மட்டுமோ அல்லது தமிழகத்திற்கு மட்டுமோ அல்ல ,இது நம் தேசத்தை காக்கும் போராட்டம் என உணர்ச்சி பொங்க கூறினார் .

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டாலும் அதன் கதிரியக்கத்தை யாராலும் தடுக்க முடியாது .இதிலிருந்து மக்களைக் காக்க அரசுகள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை .மக்கள் எழுச்சி மூலமாகத்தான் இதைத் தடுக்க முடியும் .அதுதான் இங்கே நடக்கிறது என்றும் அவர் கூறினார்.

காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் 127 பேரில் இது வரை 40  பேருக்கும் மேலானோர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது .இவர்களுக்கு மருத்துவ வசதியை போராட்டக் குழுவே செய்து வருகிறது .

இன்று மத்திய அமைச்சர் நாராயண சாமி எங்களை சந்திக்க வருவதாக தகவல் வந்துள்ளது .
எனக்கு கைகொடுத்த சமூக சேவகி மேதா பட்கர்
எனது உடல்நிலை சீராக இருந்து வருகிறது .எடை மட்டும் ஏழு கிலோ குறைந்துள்ளது .

தொடர்ந்து பதிவின் வாயிலாகவும் ,தொலைப்பேசி வாயிலாகவும் ஆதரவு தெரிவித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி !

19 செப்டம்பர் 2011

கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தவேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதாகடிதம்

கூடங்குளம் பிரச்னை தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகள் தொடரக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.


இப்பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கடுமையான போராட்டம் ஏன்? : நேரடி ரிப்போர்ட்


உண்ணாவிரதத்தின் முதல் நாளில் நான் (ஆரஞ்சு T-SHIRT)

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 127  பேர் இடிந்தகரையில் இன்று 9  வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளோம் .