19 செப்டம்பர் 2013

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா?

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அரசிடம் பெற்ற  மோசமான அனுபவங்கள் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணத்திற்கு பெரும்பாலான மக்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சமூக தளங்களில் இக்கருத்து மேலோங்கி இருப்பதை காண முடிகிறது. 


ஆட்சி மாற்றம் வேண்டுமானால் அதற்கு நரேந்திர மோடியை பிரதமராக்குவதுதான் ஒரே வழி என்று ஒரு தரப்பினரும், ஆட்சி மாற்றம் வேண்டும்தான் ஆனால் அதற்காக நரேந்திர மோடியை பிரதமராக்கினால் நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர். 

நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் கூறும் காரணம், குஜராத்தில் மோடியின் அபார நிர்வாகத் திறமையால் அம்மாநிலம் அபார வளர்ச்சியடைந்துள்ளது அவரை பிரதமராக்கினால் இந்தியா முழுமையும் அதே நிலைமையை எட்டும் என்பது. 

மோடியை எதிர்ப்பவர்கள் கூறும் காரணம் குஜராத்தில் வளர்ச்சி என்று ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றன என்றும் குஜராத் கலவரம் மன்னிக்கமுடியாதது என்றும் கூறுகின்றனர். மூன்றாவது அணி மூலமாகத்தான் இந்தியாவிற்கு நல்லாட்சி கொடுக்க முடியும் என்பதும் இவர்களின் கருத்து. 

காங்கிரசுக்கு எதிரானவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு காங்கிரசுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

காரணம் பாஜக வை தவிர வேறு எந்த கட்சியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற தைரியம் காங்கிரசுக்கு உண்டு. 

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றதில் கொண்டுவரும் தீர்மானங்களை தொடக்கத்தில் தீவிரமாக எதிர்க்கும்  மாநிலக்கட்சிகள் ஓட்டெடுப்பு என்று வரும்போது காங்கிரசுக்கு ஆதரவாக சென்றுள்ளதைப் பார்த்திருக்கிறோம். 

இதன்மூலம் காங்கிரசைப் போன்றே பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மாநிலக் கட்சிகள் பலவற்றை காண முடியும். 

எனவே இந்த சுயநல மாநில கட்சிகளுக்கு ஓட்டளிப்பதும் காங்கிரசுக்கு ஓட்டளிப்பதும் ஒன்றுதான். 

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா? என்று என்னிடம் கேட்டால் அதற்கு நான் கூறும் பதில் "நாயகன் கமல்" கூறும் பதில்தான்.