22 ஜூன் 2013

Gmail - அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ?

சில வேளைகளில் நாம் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை தவறுதலான முகவரிக்கு அனுப்பிவிட்டதாகவோ அல்லது அதை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை எனவோ  அனுப்பியபின்னர் உணரக்கூடும். 

இது போன்ற சூழ்நிலைகளில் அனுப்பிய மெயிலை ரத்து (UNDO ) செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

முதலில் உங்கள் Gmail அக்கவுண்டை திறந்துகொள்ளுங்கள். பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு Settings பகுதிக்கு செல்லுங்கள் .



இப்போது வரும் பக்கத்தில் LABS எனும் Tab ஐ தேர்வு செய்யவும். 


இப்போது படத்தில் கண்டவாறு Undo Send என்பதை Enable செய்யுங்கள்.


இனி மாற்றங்களை சேமித்து வெளியேறுங்கள். 

இப்போது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை Undo செய்யும் வசதி கிடைத்திருப்பதை காணமுடியும்.

14 ஜூன் 2013

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி !

நன்றி: ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.


எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும். பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி செய்யும்போது உள்ளங்கைகளை எடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. 

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

05 ஜூன் 2013

நம் சந்ததிகளை காக்க நாம் உடனடியாக செய்யவேண்டிய 10!

கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதுமே ஒரு வேகமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன இவைகள் நம் அன்றாட பணிகளை எளிதாக்கி வருகின்றன. 

ஆனால் மிக முக்கியமான ஒன்றில் உலக மக்கள் கவனம் செலுத்த தவறி வருகின்றனர். 


அதுதான் சுற்றுசூழல் பாதுகாப்பு. 

சுற்று சூழலுக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் நம் எதிர்கால சந்ததிகள் உயிருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.எனவே உலக சுற்றுசூழல் தினமான இன்று சுற்றுசூழலை பாதுகாக்க நம்மாலியன்ற இந்த சிறு சிறு செயல்களை செய்ய உறுதியேற்போம்.

1) இன்று காற்று மாசுபடுவதற்கும் மழைவளம் குறைவதற்கும் மரங்கள் வெட்டப்படுவதுதான் முக்கிய காரணியாக உள்ளது. எனவே மரங்களை வெட்டுவதை குறைத்துவிட்டு மரங்களை நடுவதில் ஆர்வம் செலுத்த வேண்டும். பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியும் மரங்களை நட்டும் வருகின்றன. அவர்களுக்கு நம்மாலியன்ற ஒத்துழைப்பை அளிக்கவேண்டும்.

2) புவி வெப்பமயமாதலுக்கும், பல்வேறு நோய்களுக்கும் காரணமாக விளங்கும் மறு உபயோகம் செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்கவேண்டும்.

3) கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தவேண்டும்.

4) கழிவுநீரை முறையாக வடிகால் அமைத்து அகற்றவேண்டும். கண்ட கண்ட இடங்களில் கழிவு நீரை தேங்க விடக்கூடாது.

5) மிகவும் அவசியப்பட்டாலன்றி கார், மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

6) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.  மிகவும் அவசியப்பட்டாலன்றி AC மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

7)  நிலத்தடி நீரை பாதுகாக்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க மழை  நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்கவேண்டும்.

8) மின்னணு சாதனங்கள் பழுதானால் உடனடியாக அதை தூக்கி எரிவதை விட்டுவிட்டு அதை சரி செய்யவோ அல்லது மறு உபயோகம் செய்யவோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கவோ செய்யலாம்.

9) மின்சாரத்தை உறிஞ்சி வெப்பத்தை அதிகமாக வெளியிடும் குண்டு பல்புகளை தவிர்த்துவிட்டு CFL அல்லது LED  பல்புகளை பயன்படுத்தவேண்டும்.

10) சுற்றுசூழலுக்கு சற்றும் தீங்கு விளைவிக்காத சூரிய மின்சக்தி அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும்.

இவைகளையெல்லாம் நாம் செய்யத் தவறுவோமானால் அது நம்  எதிர்கால சந்திதிகளின் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பதை உணர்வோமாக.