20 ஜூன் 2012

ஆயிரம் பொய் சொல்லி அணு உலை கட்டவோ ?

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கி உலையை திறக்க மத்திய மாநில அரசுகள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டதாக ஒரு மாயத் தோற்றம், மீடியா பத்திரிகைகள் வழியே சில மாதங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அது பாதி உண்மைதான். முழு உண்மை அல்ல. பெருமளவில் போலீசையும் முப்படைகளையும் அந்தப் பகுதியில் குவித்து, அறவழியில் போராடிவரும் மக்கள் மீது உணவு முற்றுகை நடத்தி, நிரந்தரமாக 144 தடை உத்தரவு போட்டு, அரசுகள் செய்யமுடிந்ததெல்லாம் – அணு உலை வளாகத்திற்கு ஊழியர்களையும் ‘விஞ்ஞானிகளை’யும் வேலை செய்ய அனுப்ப முடிந்தது மட்டும்தான்.

மொத்தம் 55 ,795 பொதுமக்கள் மீது எஃப்.ஐ.ஆர் போட்டு, அதில் 680 பேர் மீது ராஜத் துரோக வழக்கு பதிவு செய்தும் கூட அரசுகளால் கூடங்குளம் இடிந்தகரை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் உறுதியைக் குலைக்க முடியவே இல்லை. பல முறை முயற்சித்தும் போராட்டக் குழு தலைவர்களான உதயகுமாரையும் புஷ்பராயனையும் கைது செய்ய முடியவில்லை. அற வழியில் போராடும் மக்களை எப்படியாவது வன்முறையில் ஈடுபடத் தூண்டும் அத்தனை முயற்சிகளும் தோற்றன.
 
தொடர்ந்து 300 நாட்களைக் கடந்து மக்கள் போராடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். உண்ணாவிரதம் மட்டும் அவர்களின் போராட்ட வழியல்ல. நீதிமன்றங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது.

இதனால் அடுத்தடுத்து அரசுகளின் பொய்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் மின்சார தட்டுப்பாட்டை கூடங்குளம் அணு உலை செயல்பட்டால்தான் போக்கமுடியும் என்றும் ஜூன் மாதத்தில் உலை செயல்படத் தொடங்கியதும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வந்துவிடும் என்றும் அமைச்சர் நாராயணசாமி இடைவிடாமல் பொய் சொல்லிவந்தார்.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு சற்றே ஜூன் மாதத்தில் குறைந்தது. ஆனல் காரணம் கூடங்குளம் அணு உலை அல்ல. காற்றாலைகள்தான் பெருமளவில் மின் தட்டுப்பாட்டை தணித்தன. கூடங்குளம் அணு உலை இன்னும் இயங்கவே தொடங்கவில்லை. ஆனால் அமைச்சரும் அணுசக்தி அதிகாரிகளும் பொய் சொல்வது மட்டும் தொடர்கிறது. இன்னும் 15 நாட்களில் அணு உலை இயங்கும் என்று நாராயணசாமி சொன்ன அதே நாளில், அணுசக்தித் தலைவர் ஆகஸ்ட் இறுதியில்தான் இயக்கமுடியும் என்று பேட்டி அளிக்கிறார்.

உலையை இயக்குவதில் பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நீதிமன்றங்கள் முன்னர் எழுப்பப்பட்டுள்ளன. சர்வதேச அணுசக்தி முகமை விதித்திருக்கும் விதிகளைப் பின்பற்றாமல், உலையை இயக்குவதற்கான அனுமதியை இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் வழங்க முடியாது.

எனவே விதிகளைப் பின்பற்றுவதாக பொய் சொல்வது, நாடகம் ஆடுவது என்ற நடவடிக்கைகளில் அணுசக்தித் துறையும் அரசுகளும் இறங்கியுள்ளன.

அணு உலையை சுற்றி 25 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு விபத்து ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய பயிற்சியை, ஒத்திகையை நடத்தி முடிக்காமல், அணு உலையில் எரிபொருளை நிரப்பமுடியாது என்பதே விதி. இந்த பேரிடர் மேலாண்மைப் பயிற்சியை அனைத்து கிராமங்களுக்கும் வழங்காமல் உலையை இயக்கக் கூடாது என்றுதான் மூன்று மாதமாக போராட்டக் குழுவினர் கேட்டு வருகின்றனர்.

விபத்து ஏற்பட்டால், மக்களை இடம்பெயர்க்கவும், தயார்ப்படுத்தவும் செய்யவேண்டிய வழிமுறைகளுக்கென்று ஒரு கையேடு (மேனுவல்) இருக்கவேண்டும். அதை அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியமும் மாவட்ட நிர்வாகமும் ஜூன் 2011லேயே படித்து ஒப்புதல் கொடுத்துவிட்டதாக வாரியத் தலைவர் பட்டாச்சார்யா இப்போது ஏப்ரல் 17 அன்று எழுதிய கடிதத்தில் சொல்கிறார்.
ஆனால் இந்த மேனுவலின் பிரதியை அளிக்கும்படி உதயகுமார், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கலெக்டருக்கும் அணு உலை நிர்வாகத்துக்கும் விண்ணப்பித்தும் மேனுவல் தரப்படவே இல்லை.

ஆனால் இந்த ஜூன் 9 அன்று அணு உலைக்கருகே இருக்கும் கிராமத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியும் ஒத்திகையும் நடத்தப்பட்டுவிட்டதாக அணுசக்தி துறை அறிவித்திருக்கிறது. அணு உலைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது இடிந்தகரை. அடுத்த ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவை கூடங்குளம், வைராவிகிணறு, செட்டிகுளம், ஸ்ரீரங்கநாராயாணபுரம் , பெருமணல், கூத்தப்புளி ஆகியவை. இந்த எந்த கிராமத்திலும் ஒத்திகை நடத்தப்படவில்லை.
 
உலையிலிருந்து ஏழு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் நக்கநேரி என்ற கிராமத்துக்கு மாவட்ட அதிகாரிகளும், அணு உலை அதிகாரிகளும் வருகிறார்கள். ஊரில் பெரும்பாலோர் வேலைக்குப் போயாகிவிட்டது. எஞ்சியிருப்பது எழுத்தறிவற்ற கொஞ்சம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே. இவர்களுடன் ஒரு மணி நேரம் பேசிவிட்டு. அதிகாரிகள் படை கார்களில் ஏறி போய்விட்டது. இதுதான் பயிற்சி , ஒத்திகை நடந்த லட்சணம்.

என்ன பேசப்பட்டது ? அணு உலையில் விபத்து ஏற்பட்டால் எப்படியெப்படி தப்பித்து ஓட வேண்டும் என்று பேசியதாக மக்கள் சொல்லவில்லை. டெங்கு காய்ச்சல் பற்றி விசாரித்தார்கள். உங்கள் பஞ்சாயத்துக்கு என்ன திட்டம் வேண்டும் என்று விசாரித்தார்கள் என்று அந்த பஞ்சாயத்து தலைவரே சொல்லியிருக்கிறார். கொஞ்சம் அயோடின் மாத்திரைகளை சாப்பிட்டால் கதிர் வீச்சு எதுவும் செய்யாது என்று சொன்னார்கள் என்ற அளவில்தான் நக்கநேரியில் அப்போது இருந்த சுமார் 100 பேரிடம் விசாரித்ததில் தெரியவந்துள்ளது.

இந்த பயிற்சியில் மூன்று கட்ட நடவடிக்கையாக எப்படி பேரிடரை சமாளிப்பது என்று மக்களுக்கு சொல்லப்பட்டதாக அணு உலை நிர்வாகமும் மாவட்ட கலெக்டரும் சொல்கிறார்கள்.ஓர் அணு உலை விபத்து ஏற்பட்டால் உடனே என்னென்ன செய்யவேண்டும் என்பது பிரும்மாண்டமான விஷயம். மக்களை பல கிலோமீட்டர் தொலைவுக்கு அழைத்துச் செல்ல பஸ்களை ஏற்பாடு செய்யவேண்டும். மிகக் குறைந்த நேரத்தில் அவை வந்து சேரவேண்டும். மத்திய கண்ட்ரோல் செண்ட்டர் அமைக்கப்பட்டு அங்கிருந்து மாவட்டம் முழுவதும் போலீஸ், வருவாய்த் துறை ஊழியர்களுடன் ஹாட் லைனில் தொடர்பில் இருக்க வேண்டும். வீட்டைவிட்டு ஓடும்போது என்னென்ன எடுத்துக் கொள்ளவேண்டும் எதையெல்லாம் எடுக்கத் தேவையில்லை என்ற பட்டியலை மக்களுக்கு சொல்லித் தரவேண்டும். இப்படி பல அம்சங்கள் உள்ளன. இது எதையும் செய்யாமல், பயிற்சியும் ஒத்திகையும் செய்யப்பட்டுவிட்டதாக அரசுகள் கூசாமல் பொய் சொல்லியிருக்கின்றன. (சுமார் 10 வருடம் முன்பு கல்பாக்கத்தில் இப்படி ஒரு ஒத்திகை நடத்தப்பட்டபோது பஸ் பிரேக் டவுன் ஆகிவிட்டது. எம்ர்ஜென்சி டிரில் நடப்பதே தனக்குத் தெரியாது என்று ஓர் மாவட்ட அதிகாரி சொன்னார். கண்ட்ரோல் ரூமில் போன் வேலை செய்யவில்லை. இப்போது நடத்தப்பட்ட ஒத்திகை அந்த அளவுக்குக் கூட இல்லை.)

இனி அடுத்த பயிற்சியும் ஒத்திகையும் 2014ல் நடத்தப்படும் என்று வேறு அணு உலை இயக்குநர் அறிவித்திருக்கிறார். அணு உலையை சுற்றி வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு எந்த பயிற்சியும் தராமலே உலையை இயக்க அவசரப்படுகிறது அரசு.
 
அரசின் பொய்கள் தொடர்கின்றன.

தகவல் அறியும் உரிமை ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் போராடிப் போராடி கடைசியில் சைட் எவால்யுவேஷன் ரிப்போர்ட் எனப்படும் இட மதிப்பீட்டு அறிக்கையை அரசு தமக்கு தரவைத்திருக்கிறது போராட்டக் குழு. அணு உலைக்காக இடம் தேர்வு செய்த அடிப்படை என்ன என்பதற்கான அறிக்கை இது. ஆனால் இது ரஷ்ய கம்பெனிக்கு சொந்தமானது என்றும் அதை வெளியிட முடியாது என்றும் அரசு கூறி வந்தது.

கடைசியில் அரசு கொடுத்த அறிக்கை வெறும் 12 பக்கங்கள். அதிலும் நடுவே மூன்று பக்கங்கள் மிஸ்சிங். அறிக்கை தயாரிக்கப்பட்டது எண்பதுகளில். அறிக்கையை யார் எழுதினார்கள் என்ற பெயர்கள் விவரங்கள் எதுவும் கிடையாது. இந்த அறிக்கைப் படி உலைக்கு பத்து கிலோமீட்டர் சுற்றளவில் பத்தாயிரம் பேர் வசிக்கும் எந்த ஊரும் இல்லை என்று ஒரு பெரிய பொய் சொல்லப்பட்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து இரு குழாய்கள் வழியே உலைக்கு நீர் எடுக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. கழிவுகள் கடலில் விடப்படும் என்றும் சொல்கிறது.

முழுமையான தகவல்கள் எதுவும் இல்லாமல், ஒப்புக்கு ஒரு அறிக்கையை அளித்திருக்கிறது அரசு. மக்களை ஏமாற்றுவது, நீதிமன்றத்துக்கு சென்றால், அதையும் ஏமாற்ற பெயரளவில் ஆவணங்களைக் காட்டி ஏமாற்றுவது, சர்வதேச அணுசக்தி முகமையை ஏமாற்ற ஒப்புக்கு ஒத்திகை நடத்துவது என்று எல்லாரையும் எப்படியாவது ஏமாற்ற தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறது மத்திய அரசு. அதற்கு உடந்தையாக இருக்கிறது மாநில அரசு.

மிக ஆபத்தான ஒரு தொழில்நுட்பத்தோடு விளையாடுகிறோம்; மக்களின் உயிரோடு விளையாடுகிறோம் என்ற எச்சரிக்கை உணர்ச்சி அரசுக்கும் அனுசக்தி அதிகாரிகளுக்கும் இருப்பதாகவே தெரியவில்லை. கூடங்குளத்தில் நிறுவப்படும் உலைகளின் அமைப்பு பற்றியே இப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ரியாக்டர் பிரஷர் வெஸ்சல் எனப்படும் அணு உலை அழுத்தக் கொள்கலனில் நடுவே எந்த வெல்டிங்கும் இருக்காது என்று 2006ல் ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்த ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் கொள்கலனில் இரு இடங்களில் வெல்டிங் உள்ளதாக சொல்கிறது. இப்படி வெல்டிங் செய்யப்படும் இடங்களில் வெல்டிங் பொருட்கள் பலவீனமானவை என்பதால் பெரும் விபத்துக்கு வாய்ப்பிருப்பதாக முன்னர் கருதப்பட்டு, புதிய உலை வடிவமைப்புகளில் வெல்டிங் இல்லாத கொள்கலன்கள் உருவாக்கப்பட்டன. கூடங்குளத்துக்கு வழங்கப்படுவது அதி நவீன உலை என்று சொல்லப்பட்டது. ஆனால் பழைய மாதிரி வெல்டிங் உள்ள கலன்களே நிறுவப்பட்டுள்ளன. இதை பரிசோதித்துப் பார்த்து பழைய டிசைன் என்றால் மாற்றச் சொல்ல வேண்டும். ஆனால் எரிபொருள் நிரப்பி உலை இயங்க ஆரம்பித்துவிட்டால், கலனை எடுத்து சோதிக்கவே முடியாது.விபத்துகள் ஏற்பட்டால், ரஷ்ய கம்பெனிக்கு அதில் பொறுப்பு எதுவும் இல்லை என்ற பிரச்சினை வேறு தீர்க்கப்படாமலே இருக்கிறது.

ஆனால் ஏதாவது பொய் சொல்லி அணு உலையை நிறுவியே தீருவது என்று இருக்கும் அரசு இன்னொரு பக்கம், இந்த அணு உலைகளை எதிர்க்கும் மக்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகக் கருதுகிறது. அறவழியில் 300 நாட்களாக ஆயிரக்கணக்கானோர் போராடுவது பைத்தியக்காரத்தனம்தான் என்று அரசு நினைப்பதில் ஆச்சரியமே இல்லை.
 
எனவே பெங்களூருவில் இருக்கும் நிம்ஹான்ஸ் எனப்படும் மனநோய் ஆய்வு நிலைய மருத்துவர்களை இடிந்தகரைக்கு அரசு அனுப்பியிருக்கிறது. மக்கள் இப்படி பிடிவாதமாகப் போராடுவதன் உளவியல் என்ன என்று ஆராய்ந்து அதை ‘குணமாக்க’ (உடைக்க) வழிகள் என்ன என்று சொல்லும்படி மருத்துவர்கள் கோரப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஒரு ஆத்திக நண்பர் பேஸ்புக்கில் ஒரு குறிப்பு எழுதினார் – பெரியாரோ பகுத்தறிவு இயக்கங்களோ என்னை நாத்திகனாக்கவில்லை. ஆனால் நித்தி, மதுரை ஆதீனம் போன்றோர் அதை நோக்கி என்னைத் துரத்துகிறார்கள் என்று. எனக்கு இப்படி சொல்லத் தோன்றுகிறது : எந்த ஆன்மிக குருவாலும், கோயிலாலும் என்னை ஆத்திகன் ஆக்கமுடியவில்லை. ஆனால் அணு உலையை அமைத்து மனித குல அழிவை விரைவுபடுத்தியே தீருவோம் என்று முரட்டுப் பிடிவாதத்தோடு இயங்கும் இந்திய அரசுகள் என்னைக் கடவுளை நோக்கித் தள்ளுகின்றன. என்னை, இடிந்தகரை மக்களை, ஜெயலலிதாவை, மன்மோகனை எல்லாரையும் அணு அழிவிலிருந்து அந்தக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவேனோ ?!

 நன்றி : திரு.ஞானி  கல்கி வார இதழ் 16.6.2012

15 ஜூன் 2012

மரம் வளர்ப்போம் -ஆயுள் வளர்ப்போம்

    உலகிலுள்ள உயிரினங்களுக்கு எந்த ஒரு பிரதிபலனும் பாராது உதவி செய்யும் நண்பர்கள் யாரென்றால் அவை மரங்கள்தான்.மரங்கள் நமக்கு செய்யும் நன்மைகளை சற்று புள்ளி விபரமாகத் தெரிந்துகொண்டால் அனைவருக்கும் மரம் வளர்க்கும் ஆர்வம் மேலோங்கும்.


  • ஒரு மரம் வருடத்திற்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.

  •    ஒரு ஏக்கரில் உள்ள மரங்களிலிருந்து ஒரு வருடத்திற்கு வெளியிடப்படும் ஆக்சிஜன் 18 பேர் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது .
  • ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் ஒரு வருடத்தில் 2.5 டன் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக்கொள்கின்றன. 
  • நிழல் தரும் ஒரு மரம் வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெப்பத்தைக் குறைக்கின்றன.

   இத்தனை நன்மைகள் தரும் மரங்களை நாம் எவ்வளவுக்கெவ்வளவு வளர்த்து பராமரிக்கின்றோமோ அது நாம் நமது சந்ததிகளுக்கு செய்யும் மிகப் பெரும் புண்ணியமாக அமையும் .

11 ஜூன் 2012

பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் ஒரு பெரிய கேலிக்கூத்து!

பேரிடர் மேலாண்மையில் மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலைத் தேர்வு செய்தால் அதில் இந்தியாவுக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு.

போபால் விஷ வாயுக் கசிவின் போதும்  சரி 2004  ம் ஆண்டு நடந்த சுனாமித் தாக்குதலின் போதும் சரி  பேரிடர் மேலாண்மை சரியாக இல்லாததால்தான்  பெரும் உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது.

போபால் விஷ வாயுத் தாக்குதலின் போது மக்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு விபத்திற்கு காரணமான வாரன் ஆண்டர்சனை பத்திரமாக தனது நாட்டுக்கு அனுப்பி வைத்தது அன்றைய காங்கிரஸ் அரசு.

ஏற்கெனவே பல்வேறு பேரிடர்களிலிருந்து  பாடம் கற்பதை விட்டுவிட்டு தொடர்ந்து தவறு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன நம் அரசுகள். 

சமீபத்தில் ஜப்பானில் ஒரு மிகப் பெரிய அணு உலை விபத்து நிகழ்ந்தது.அந்த நாடு பேரிடர் மேலாண்மையில் கொண்டிருந்த திறமையால் லட்சக்கணக்கான மக்கள் கதிர் வீச்சுத்  தாக்குதலில் இருந்து தப்பித்தனர்.


தற்போது மத்திய  அரசு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு அணு உலைகளை செயல் படுத்தத் தயாராகி வருகிறது. அணு உலை எரி  பொருள் நிரப்புவதற்கு முன்னதாக இந்திய அணு சக்தி  ஒழுங்கு முறை ஆணையத்தின் விதி முறைகளின் படி அணு உலை அமைந்துள்ள பகுதி மக்கள் அனைவருக்கும் பேரிடர் பயிற்சி வழங்கவேண்டும் .

கூடங்குளம் அணு உலையை சுற்றி 30 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்   10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ஆனார் இவர்களில் எவர் ஒருவருக்கும் தெரியாதபடி பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடந்துள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த 9-6-2012   அன்று கூடங்குளம் அருகிலுள்ள 300 பேர் மட்டுமே வசிக்கும் நக்கநேரி  என்ற குக்கிராமத்திற்கு பேரிடர்    மேலாண்மை குழுவினர் சென்றுள்ளனர் அப்போது அங்கே பெரும்பாலானோர் கூலி வேலைகளுக்கு சென்றுவிட்டபடியால் சுமார் 100 பேர் மட்டுமே அவ்வூரில் இருந்துள்ளனர் . சேரன்மாதேவி உதவி ஆட்சியர் தலைமையில் போலிஸ் படையினருடன் சென்ற குழுவினர் அங்குள்ள மக்களிடம் மருத்துவ முகாம் நடத்த வந்திருப்பதாக கூறியுள்ளனர். அந்த பாமர மக்களுக்கு எதுவுமே விளங்காமல் இருந்திருக்கிறது.

இறுதியாக பலரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். இச்செயல்கள் முடிந்ததும் கூடங்குளத்தில் பேரிடர் பயிற்சி வெற்றிகரமாக நடத்தப் பட்டுவிட்டதாகவும் , இனி யுரேனியம் நிரப்ப அனுமதி கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளனர் அதிகாரிகள்.

கடந்த இரு மாதங்களுக்கு மேல் 144 தடை உத்தரவிற்குள் சிக்கித் தவிக்கும் கூடங்குளம் பகுதி மக்கள் மத்திய மாநில அரசுகள் கைகோர்த்தி செய்யும் இந்த அநியாயங்களை யாரிடம் முறையிடுவது என்று அறியாமல் திகைத்து வருகின்றனர்.

கூடங்குளத்துல விபத்து நடந்தா அவ்ளோதானா?

05 ஜூன் 2012

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பத்திரமாக்க பத்து வழிகள்!

திருமணமானபின்பு  பெரும்பாலோனோரின் கவலை அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும் .அதனால் வாழ்வின் பெரும்பகுதியை அவர்களுக்காகவே செலவழிக்கிறார்கள் . 

குழந்தைகளை படிக்க வைக்க சிரமப் படுகின்றார்கள், அவர்களுக்கு சொத்து சேர்த்து வைக்க சிரமப் படுகிறார்கள்.


ஆனால் எதிர்காலத்தில் நம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தானே நாம் கஷ்டப் பட்டதற்கான பலனை அவர்கள் அடைய முடியும். எதிர் காலத்தில் நம் சந்ததிகள் ஆரோக்கியமாக வாழவேண்டுமானால் இன்று நாம் நமது சுற்று சூழலைப் பாதுகாக்கவேண்டும் .

உலக சுற்று சூழல் தினமான இன்று சுற்று சூழலைப் பாதுகாக்க நம்மால் கடை பிடிக்க இயலக்கூடிய பத்து வழிகளைக் கூறுகின்றேன்.

1)இன்று சுற்று சூழலுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவது பிளாஸ்டிக் பைகள். எனவே பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை கூடுமான வரையில் தவிர்த்துவிடுங்கள்.கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிலிருந்தே துணிப் பைகளை எடுத்து செல்லுங்கள்.

2) அடுத்த அச்சுறுத்தல் வாகனப் புகை .நாகரீகமென்ற பெயரில் ஒருவருக் கொருவர் போட்டியிட்டு கார்களையும் பைக்குகளையும் வாங்கி சாலைகளை நிரப்பிவிட்டோம். பெட்ரோல் விலையை எவ்வளவு ஏற்றினாலும் தொடர்ந்து  வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறோம் .அவசியப் பட்டாலன்றி பைக்குகள் , கார்களை உபயோகிப்பதை தவிர்ப்போம்.

3 ) மரம் வளர்ப்போம் .மனித வாழ்க்கைக்கும் உலக சுற்று சூழலுக்கும் மரங்கள் பேருதவி செய்கின்றன.எனவே நம்மாலியன்ற வரையில் எவ்வளவு மரங்களை வளர்க்க முடியுமோ வளர்ப்போம்.

4) புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக விளங்கும் வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் குளிர்சாதனப் பெட்டிகள், மற்றும் AC  பயன்படுத்துவதை கூடுமான வரையில் தவிர்ப்போம்.

5) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம் .அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன .மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் மேற்கண்டவற்றின் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

6) பயன் தரும் மரங்களை வெட்டாமல் பாது காப்போம். மனிதனால் அசுத்தமாக்கப் படும் காற்று மண்டலத்தை தூயமையாக்குபவை மரங்கள் என்பதை மறக்கவேண்டாம்.

7 ) சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அழித்தொழிப்போம்.

8) நீர் நிலைகள் மற்றும் தெருவோர வாறுகால்களை சுத்தமாக வைத்திருப்போம்.இதன் மூலம் கொடிய நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம் .

9 ) நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் குறைத்து நிலத்தடி நீர் மிகுதியாக மழைநீர் சேகரிப்பு வசதிகளை வீடுகளில் ஏற்படுத்துவோம்.

10 ) மின்சாரத்தை அதிக அளவில் எடுத்துக்கொண்டு வெப்பத்தை அதிகரிக்கும் குண்டு பல்புகளுக்கு விடை கொடுத்துவிட்டு CFL பல்புகள் LED  பல்புகளை பயன்படுத்துவோம்.

நாம் நமது சந்ததிகளுக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரும் சொத்து சுற்றுசூழல் பாதுகாப்புதான்.