19 செப்டம்பர் 2013

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா?

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அரசிடம் பெற்ற  மோசமான அனுபவங்கள் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணத்திற்கு பெரும்பாலான மக்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சமூக தளங்களில் இக்கருத்து மேலோங்கி இருப்பதை காண முடிகிறது. 


ஆட்சி மாற்றம் வேண்டுமானால் அதற்கு நரேந்திர மோடியை பிரதமராக்குவதுதான் ஒரே வழி என்று ஒரு தரப்பினரும், ஆட்சி மாற்றம் வேண்டும்தான் ஆனால் அதற்காக நரேந்திர மோடியை பிரதமராக்கினால் நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர். 

நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் கூறும் காரணம், குஜராத்தில் மோடியின் அபார நிர்வாகத் திறமையால் அம்மாநிலம் அபார வளர்ச்சியடைந்துள்ளது அவரை பிரதமராக்கினால் இந்தியா முழுமையும் அதே நிலைமையை எட்டும் என்பது. 

மோடியை எதிர்ப்பவர்கள் கூறும் காரணம் குஜராத்தில் வளர்ச்சி என்று ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றன என்றும் குஜராத் கலவரம் மன்னிக்கமுடியாதது என்றும் கூறுகின்றனர். மூன்றாவது அணி மூலமாகத்தான் இந்தியாவிற்கு நல்லாட்சி கொடுக்க முடியும் என்பதும் இவர்களின் கருத்து. 

காங்கிரசுக்கு எதிரானவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு காங்கிரசுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

காரணம் பாஜக வை தவிர வேறு எந்த கட்சியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற தைரியம் காங்கிரசுக்கு உண்டு. 

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றதில் கொண்டுவரும் தீர்மானங்களை தொடக்கத்தில் தீவிரமாக எதிர்க்கும்  மாநிலக்கட்சிகள் ஓட்டெடுப்பு என்று வரும்போது காங்கிரசுக்கு ஆதரவாக சென்றுள்ளதைப் பார்த்திருக்கிறோம். 

இதன்மூலம் காங்கிரசைப் போன்றே பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மாநிலக் கட்சிகள் பலவற்றை காண முடியும். 

எனவே இந்த சுயநல மாநில கட்சிகளுக்கு ஓட்டளிப்பதும் காங்கிரசுக்கு ஓட்டளிப்பதும் ஒன்றுதான். 

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா? என்று என்னிடம் கேட்டால் அதற்கு நான் கூறும் பதில் "நாயகன் கமல்" கூறும் பதில்தான்.

18 ஜூலை 2013

குவாட்டரை விரும்பி சுவைக்கும் கொசுக்கள்!

நான் சிறு வயதாக இருந்தபோதெல்லாம் கொசு என்றொரு உயிரினத்தை எங்கள் ஊரில் உண்மையிலேயே பார்த்ததில்லை. 

ஆனாலும் நெல்லை போன்ற நகரங்களுக்கு செல்கையில் அங்கு அப்பொழுதே mosquito bat (விளக்குமாறு) சிலர் கொசுக்களை விரட்ட உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன். 


ஆனால் இப்போது பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் கொசுக்கள் தங்கள் கைவரிசையைக் காண்பித்து வருகின்றன. 

பொதுவாக கொசுக்கள் சில குறிப்பிட்ட வகையினரை மட்டும் அதிகமாக தாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன (எதிர்க்கட்சி சதியெல்லாம் இல்லை) இப்போது கொசுக்களின் தாக்குதலுக்கு அதிகம் ஆட்படும் ஐந்து பிரிவினரை பார்ப்போம்.

1)  மது அருந்துபவர்கள் :

வாய்யா வாய்யா என் டாஸ்மாக் தங்கம். 2011 ல் நடத்தப்பட்ட ஒரு பிரெஞ்சு ஆய்வின்படி மது அருந்துபவர்கள் இரத்தத்தை கொசுக்கள் மிகவும் விரும்பி குடிக்கிறதாம். மது அருந்தாதவர்களை விட மது அருந்துபவர்கள் 30% அதிகம்  கொசுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்களாம். 

2) குண்டாக இருப்பவர்கள்:

கொசுக்களின் அடுத்த இலக்கு கொளுத்த சரீரம் உடையவர்கள் . கொசுக்களுக்கு எப்பொழுதுமே கார்பன் டை ஆக்சைடு மீது ஒரு ஈர்ப்பு உண்டு . கொளுத்த சரீரம் உடையவர்கள் மீதிருந்து வெளியாகும் அதிகப்படியான உஷ்ணம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களை அதிகம் ஏற்பதாக Annals of Internal Medicine என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

3) உடற்பயிற்சி செய்பவர்கள்:

"இது என்னடா கொடுமையா இருக்குது" என்று நாம் நினைக்கலாம். நல்ல உடற்பயிற்சி செய்பவர்கள் உடலிலுள்ள வெப்ப ஈர்ப்பு, அவர்கள் உடலில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் அவர்கள் உடலிலுள்ள  லாக்டிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை கொசுக்களுக்கு அடையாளம் காட்டுவதாக Susan Paskewitz என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார்.

4) இரத்த வகைகள்:

பிளட் குரூப்பை நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கிறோம். ஆனால் கொசுக்கள் எப்படித்தான் கண்டுபிடிக்கிறதோ தெரியவில்லை . 83% கொசுக்கள் "O " குரூப் இரத்தம் இருப்பவர்களைக் கண்டால் அங்கிருந்து நகராது  என்று கூறுகிறது ஆராய்ச்சி முடிவு. எப்படித்தான் கண்டு பிடிக்கிறதோ தெரியவில்லை.

5) கர்ப்பிணிப் பெண்கள் : 

அட கொசுக்களே உங்களுக்கு இரக்கமே இல்லையா . கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் அவர்கள் வயிற்றுப்பகுதியிலுள்ள அதிகப்படியான உஷ்ணம் கொசுக்களை அதிகம் ஈர்க்கின்றதாம். சாதாரண பெண்களை விட கர்பிணிப் பெண்கள் இருமடங்கு அதிகம் கொசுக்களின் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

நன்றி: The Week

12 ஜூலை 2013

திறமையான நீதிபதி யார் ?



நம் நாட்டில் பல்வேறு சிறிய மற்றும் பல  பெரிய வழக்குகள் நீதி மன்றத்தில் நடந்து வருகின்றன.... 

அயோத்தி பிரச்சினை காவிரி பிரச்சினை முல்லை பெரியாறு பிரச்சினை இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள்....

இப்பிரச்சினைகள் சம்மந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இந்த அனைத்து பிரச்சினைகளும் என்றாவது ஒரு நாள் தீர்த்து வைக்கப்பட்டுவிடும் . 

ஆனால் இதையெல்லாம் விட சிக்கலான பிரச்சினை ஒன்றுள்ளது. 

அதுதான் மாமியார் மருமகள்  இடையே உருவாகும் பிரச்சினை. 

எப்பேர்பட்ட நீதிபதியாக இருந்தாலும் இந்த பிரச்சினையில் மாட்டினால் சிக்கல்தான். 

ஆகவே கட்டிய மனைவிக்கும் பெற்ற தாய்க்கும் இடையே பிரச்சினை எழும்போது அதை தீர்க்க யாருக்கு திறமை உள்ளதோ அவர்தான் திறமையான நீதிபதி. 

இந்த போட்டிக்கு வர்றவுங்கல்லாம் கொஞ்சம் கைய தூக்குங்கண்ணே ....

22 ஜூன் 2013

Gmail - அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ?

சில வேளைகளில் நாம் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை தவறுதலான முகவரிக்கு அனுப்பிவிட்டதாகவோ அல்லது அதை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை எனவோ  அனுப்பியபின்னர் உணரக்கூடும். 

இது போன்ற சூழ்நிலைகளில் அனுப்பிய மெயிலை ரத்து (UNDO ) செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

முதலில் உங்கள் Gmail அக்கவுண்டை திறந்துகொள்ளுங்கள். பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு Settings பகுதிக்கு செல்லுங்கள் .



இப்போது வரும் பக்கத்தில் LABS எனும் Tab ஐ தேர்வு செய்யவும். 


இப்போது படத்தில் கண்டவாறு Undo Send என்பதை Enable செய்யுங்கள்.


இனி மாற்றங்களை சேமித்து வெளியேறுங்கள். 

இப்போது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை Undo செய்யும் வசதி கிடைத்திருப்பதை காணமுடியும்.

14 ஜூன் 2013

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி !

நன்றி: ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.


எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும். பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி செய்யும்போது உள்ளங்கைகளை எடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. 

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

05 ஜூன் 2013

நம் சந்ததிகளை காக்க நாம் உடனடியாக செய்யவேண்டிய 10!

கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதுமே ஒரு வேகமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன இவைகள் நம் அன்றாட பணிகளை எளிதாக்கி வருகின்றன. 

ஆனால் மிக முக்கியமான ஒன்றில் உலக மக்கள் கவனம் செலுத்த தவறி வருகின்றனர். 


அதுதான் சுற்றுசூழல் பாதுகாப்பு. 

சுற்று சூழலுக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் நம் எதிர்கால சந்ததிகள் உயிருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.எனவே உலக சுற்றுசூழல் தினமான இன்று சுற்றுசூழலை பாதுகாக்க நம்மாலியன்ற இந்த சிறு சிறு செயல்களை செய்ய உறுதியேற்போம்.

1) இன்று காற்று மாசுபடுவதற்கும் மழைவளம் குறைவதற்கும் மரங்கள் வெட்டப்படுவதுதான் முக்கிய காரணியாக உள்ளது. எனவே மரங்களை வெட்டுவதை குறைத்துவிட்டு மரங்களை நடுவதில் ஆர்வம் செலுத்த வேண்டும். பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியும் மரங்களை நட்டும் வருகின்றன. அவர்களுக்கு நம்மாலியன்ற ஒத்துழைப்பை அளிக்கவேண்டும்.

2) புவி வெப்பமயமாதலுக்கும், பல்வேறு நோய்களுக்கும் காரணமாக விளங்கும் மறு உபயோகம் செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்கவேண்டும்.

3) கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தவேண்டும்.

4) கழிவுநீரை முறையாக வடிகால் அமைத்து அகற்றவேண்டும். கண்ட கண்ட இடங்களில் கழிவு நீரை தேங்க விடக்கூடாது.

5) மிகவும் அவசியப்பட்டாலன்றி கார், மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

6) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.  மிகவும் அவசியப்பட்டாலன்றி AC மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

7)  நிலத்தடி நீரை பாதுகாக்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க மழை  நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்கவேண்டும்.

8) மின்னணு சாதனங்கள் பழுதானால் உடனடியாக அதை தூக்கி எரிவதை விட்டுவிட்டு அதை சரி செய்யவோ அல்லது மறு உபயோகம் செய்யவோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கவோ செய்யலாம்.

9) மின்சாரத்தை உறிஞ்சி வெப்பத்தை அதிகமாக வெளியிடும் குண்டு பல்புகளை தவிர்த்துவிட்டு CFL அல்லது LED  பல்புகளை பயன்படுத்தவேண்டும்.

10) சுற்றுசூழலுக்கு சற்றும் தீங்கு விளைவிக்காத சூரிய மின்சக்தி அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும்.

இவைகளையெல்லாம் நாம் செய்யத் தவறுவோமானால் அது நம்  எதிர்கால சந்திதிகளின் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பதை உணர்வோமாக.

26 ஏப்ரல் 2013

புலியின் முடியை பிடுங்கிய பெண்!

ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார் ''இனி உனக்கு மூலிகை தேவையில்லை."

நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய்.

அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்...!

நீதி: நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது.

  நன்றி- "அக்கம் பக்கம் கொஞ்சம்- முகநூல் பக்கம்"

22 ஏப்ரல் 2013

பூமிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்!

இன்று உலக புவி தினம். 
பெற்ற தாய் பிள்ளைகள் தரும் இன்னல்களை எவ்வாறு தாங்குவாளோ அதுபோல நம் பூமித்தாய் நாம் கொடுக்கும் எல்லா இன்னல்களையும் தாங்கிக்கொண்டு நம்மை உயிர் வாழ வைக்கிறாள். நமக்காக தியாகங்கள் பல செய்யும் நம் பூமித்தாய்க்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம். ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற சில சிறிய நற்காரியங்களை செய்தாலே நம் பூமித்தாயை பசுமைத் தாயாக மாற்ற முடியும். 
இதற்கு நாம் என்னென்ன செய்யலாம் ...
1) புதை படிவ எரிபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றாலை, சூரிய ஓளி திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால் கரியமில வாயுவினால் ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறைகிறது. வீட்டளவிலும் இதுபோன்ற திட்டங்களை தேவைக்கேற்ப நிறுவலாம்.மேலும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் சிஎப்எல் பல்புகளை பயன்படுத்தலாம்.

2) குப்பைகளை குறைப்பதால் மீதேன் உள்ளிட்ட ஆபத்தான வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 10 சதவீதம் வரை வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும். நம் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, கூடிய அளவுக்கு மறுசுழற்சி செய்யலாம். இதனால் தேவைகள் குறைவதோடு அவற்றை தயாரிப்பதற்கான எரிபொருளும், சக்தியும் பாதுகாக்கப்படுகின்றன.

3)ஒவ்வொரு முறை தண்ணீரை சுத்திகரிக்கும் போதும், விநியோகிக்கும் போதும் அதிகளவில் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதோடு, சேமிக்கும் வழிகளையும் யோசிக்கலாம்..மழை நீரை சேமிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும்.

4)வீடுகளை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள, சுவர்களுக்கு பாதுகாப்பு பூச்சு, ஜன்னல்களுக்கு பருவநிலை காக்கும் கண்ணாடி என பல நவீன அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம்.இதன் காரணமாக அதிக வெப்பத்தை வெளியேற்றும் குளிர்சாதன கருவிகளை எல்லா நேரங்களிலும் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

5) அருகாமையிலுள்ள இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்லலாம். தேவைப்படும் நேரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த எண்ணலாம். வாகனத்தை இயக்குவதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். வாகனங்களாலும் அதிகளவில் எரிபொருள் வீணடிக்கப்படலாம்.

6) தேவைப்படும் நேரங்களை தவிர பிற நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

7) பல வகை மாசினால் மூச்சு திணறி கொண்டிருக்கும் பூமிக்கு பிராணவாயுவை கூட்டவும், ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து நம்மை பெருமளவு காப்பாற்றவும் தேவைப்படுவது மரங்கள்.நிழல் தரும் மரங்கள் வளர்ந்தால், பூமி சற்றே இளைப்பாறும்.
 

26 ஜனவரி 2013

முட்டையிலிருந்து கோழி வரவில்லை -ஆராய்ச்சி முடிவு !

கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. 


இந்த நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கண்டு பிடித்துள்ளார் நமது மாநிலத்திற்கு அண்டை மாநிலமான  புதுவையிலுள்ள விஞ்ஞானி ஒருவர். 

இந்த ஆராச்சிக்காக அவர் ஒரு கோழியையும் பத்து முட்டைகளையும் பயன்படுத்தியுள்ளார் . 

பத்து முட்டைகளையும் அந்த ஒரு கோழியை வைத்து அடை காக்க வைத்துள்ளார் . சிறிது நாட்கள் கழித்து முட்டையை பரிசோதித்த விஞ்ஞானி ஆனந்தக் கூத்தாடினார் . காரணம் அவரது ஆராய்ச்சிக்கு முடிவு  கிடைத்துவிட்டது . முட்டையிலிருந்து கோழிகள் எதுவும் வரவில்லை மாறாக கோழி குஞ்சுகள்தான் வந்துள்ளன. 

இதன் மூலம் நீண்ட நாள் பிரச்சினைக்கு முடிவு கட்டிஇருப்பதாக கூறியுள்ளார் அவ்விஞ்ஞானி . இதற்காக தனக்கு இன்னும் 15 நாட்களில் நோபல் பரிசு கிடைக்கும் எனவும்  அடித்துக் கூறுகிறார் வில்லேஜ் விஞ்ஞானி நா.சா .