26 ஏப்ரல் 2013

புலியின் முடியை பிடுங்கிய பெண்!

ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார் ''இனி உனக்கு மூலிகை தேவையில்லை."

நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய்.

அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்...!

நீதி: நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது.

  நன்றி- "அக்கம் பக்கம் கொஞ்சம்- முகநூல் பக்கம்"

22 ஏப்ரல் 2013

பூமிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்!

இன்று உலக புவி தினம். 
பெற்ற தாய் பிள்ளைகள் தரும் இன்னல்களை எவ்வாறு தாங்குவாளோ அதுபோல நம் பூமித்தாய் நாம் கொடுக்கும் எல்லா இன்னல்களையும் தாங்கிக்கொண்டு நம்மை உயிர் வாழ வைக்கிறாள். நமக்காக தியாகங்கள் பல செய்யும் நம் பூமித்தாய்க்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம். ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற சில சிறிய நற்காரியங்களை செய்தாலே நம் பூமித்தாயை பசுமைத் தாயாக மாற்ற முடியும். 
இதற்கு நாம் என்னென்ன செய்யலாம் ...
1) புதை படிவ எரிபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றாலை, சூரிய ஓளி திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால் கரியமில வாயுவினால் ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறைகிறது. வீட்டளவிலும் இதுபோன்ற திட்டங்களை தேவைக்கேற்ப நிறுவலாம்.மேலும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் சிஎப்எல் பல்புகளை பயன்படுத்தலாம்.

2) குப்பைகளை குறைப்பதால் மீதேன் உள்ளிட்ட ஆபத்தான வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 10 சதவீதம் வரை வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும். நம் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, கூடிய அளவுக்கு மறுசுழற்சி செய்யலாம். இதனால் தேவைகள் குறைவதோடு அவற்றை தயாரிப்பதற்கான எரிபொருளும், சக்தியும் பாதுகாக்கப்படுகின்றன.

3)ஒவ்வொரு முறை தண்ணீரை சுத்திகரிக்கும் போதும், விநியோகிக்கும் போதும் அதிகளவில் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதோடு, சேமிக்கும் வழிகளையும் யோசிக்கலாம்..மழை நீரை சேமிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும்.

4)வீடுகளை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள, சுவர்களுக்கு பாதுகாப்பு பூச்சு, ஜன்னல்களுக்கு பருவநிலை காக்கும் கண்ணாடி என பல நவீன அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம்.இதன் காரணமாக அதிக வெப்பத்தை வெளியேற்றும் குளிர்சாதன கருவிகளை எல்லா நேரங்களிலும் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

5) அருகாமையிலுள்ள இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்லலாம். தேவைப்படும் நேரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த எண்ணலாம். வாகனத்தை இயக்குவதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். வாகனங்களாலும் அதிகளவில் எரிபொருள் வீணடிக்கப்படலாம்.

6) தேவைப்படும் நேரங்களை தவிர பிற நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

7) பல வகை மாசினால் மூச்சு திணறி கொண்டிருக்கும் பூமிக்கு பிராணவாயுவை கூட்டவும், ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து நம்மை பெருமளவு காப்பாற்றவும் தேவைப்படுவது மரங்கள்.நிழல் தரும் மரங்கள் வளர்ந்தால், பூமி சற்றே இளைப்பாறும்.
 

26 ஜனவரி 2013

முட்டையிலிருந்து கோழி வரவில்லை -ஆராய்ச்சி முடிவு !

கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. 


இந்த நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கண்டு பிடித்துள்ளார் நமது மாநிலத்திற்கு அண்டை மாநிலமான  புதுவையிலுள்ள விஞ்ஞானி ஒருவர். 

இந்த ஆராச்சிக்காக அவர் ஒரு கோழியையும் பத்து முட்டைகளையும் பயன்படுத்தியுள்ளார் . 

பத்து முட்டைகளையும் அந்த ஒரு கோழியை வைத்து அடை காக்க வைத்துள்ளார் . சிறிது நாட்கள் கழித்து முட்டையை பரிசோதித்த விஞ்ஞானி ஆனந்தக் கூத்தாடினார் . காரணம் அவரது ஆராய்ச்சிக்கு முடிவு  கிடைத்துவிட்டது . முட்டையிலிருந்து கோழிகள் எதுவும் வரவில்லை மாறாக கோழி குஞ்சுகள்தான் வந்துள்ளன. 

இதன் மூலம் நீண்ட நாள் பிரச்சினைக்கு முடிவு கட்டிஇருப்பதாக கூறியுள்ளார் அவ்விஞ்ஞானி . இதற்காக தனக்கு இன்னும் 15 நாட்களில் நோபல் பரிசு கிடைக்கும் எனவும்  அடித்துக் கூறுகிறார் வில்லேஜ் விஞ்ஞானி நா.சா .

18 டிசம்பர் 2012

உங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா ?

சில சமயங்களில் நாம் உபயோகிக்கும் PENDRIVE  மற்றும் மெமரி கார்டுகளில் இது போன்ற பிரச்சினை ஏற்படுவதுண்டு. கோப்புகள் எதுவும் அழிக்கப் பட்டிருக்காது ஆனால் DRIVE  ஐ திறந்தால்  எதுவுமே தெரியாது. அல்லது குறிப்பிட்ட சில கோப்புகள் தெரியாது. HIDDEN FILE ஆகவும் அவை இருக்காது . ஆனால் DRIVE  ஐ மவுசால் வலதுபுறம் கிளிக் செய்து PROPERTIES  கிளிக் செய்தால் இத்தனை GB இதில் உள்ளது என காண்பிக்கும். 



இது போன்ற பிரச்சினைகளிலிருந்து  கோப்புகளை மீட்டெடுக்க பல்வேறு மென்பொருட்கள் உள்ளன . எனினும் அவற்றால்கூட சில சமயங்களில் மீட்டெடுக்க முடியாமல் போகலாம். இப்பிரச்சினையை சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது . 


முதலில் பிரசினைக்குள்ளான  DRIVE  ஐ மவுசால் RIGHT கிளிக் செய்து படத்தில் காண்பிக்கப் பட்டுள்ளவாறு Add to archive என்பதை தேர்ந்துடுக்கவும் .

இப்போது கீழ் கண்டவாறு ஒரு window  தோன்றும் . அதில் Browse என்பதை கிளிக் செய்தால் மீட்கப் படும் கோப்புகளை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யலாம். இனி OK  பட்டனை அழுத்தவேண்டியதுதான் . 


இப்போது காணாமல் போன கோப்புகள் அனைத்தும் ஒரு ZIP  FILE  ஆக கணினியில் சேமிக்கப்படும் . அதிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்கலாம்.

07 டிசம்பர் 2012

BSNL நீங்கள் விரும்பும் மொபைல் எண்ணை பெற ...

அனேக சமயங்களில் நாம் புதிதாக சிம்கார்டு வாங்கும்போது நாம் நினைப்பதுபோல் எண்கள் கிடைப்பதில்லை .மேலும் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவதுண்டு. புதிய சிம்கார்டின் எண்ணானது  ஏற்கெனவே இருக்கும் சிம்கார்டின் எண்ணை சற்று ஒத்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம் . 


இதற்கு வசதியாக நமது மொபைல் நம்பரை நாமே ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யும் வசதியை BSNL வழங்குகிறது. இந்த லிங்க்கில் சென்று உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் . உங்கள் மாநிலதிற்குரிய தளம் திறந்ததும் படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில டிராக் செய்து தளத்தை அன்லாக் செய்துகொள்ளுங்கள் . 


இப்போது உங்களுக்கு சில மொபைல் எண்கள்  காட்டப்படலாம் .அவற்றில் ஏதாவது பிடித்திருப்பின் அதை டிக் செய்து RESERVE NUMBER என்பதை கிளிக் செய்யுங்கள் .அடுத்து வரும் கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு ஒரு பின் நம்பர் கிடைக்கும் .

அந்த எண்ணை பத்திரமாக குறித்து வைத்துக்கொண்டு 48 மணி நேரத்திற்குள்ளாக உங்களுக்கு அருகாமையில் உள்ள BSNL  அலுவலகத்திற்கு சென்று சிம் கார்டை பெற்றுக்கொள்ளலாம். 

நீங்கள் விரும்பும் எண்ணை தேர்வு செய்ய தளத்தில் இருக்கும் SEARCH வழிமுறையை பின்பற்றலாம் . 

FANCY எண்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.