03 ஆகஸ்ட் 2012

ஏன் மழை பெய்யவில்லை?

இந்த கதையில வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.

பரதாபுரி என்னும் ஒரு அழகான ஊர் இருந்தது.மழை வளமும்  செல்வச் செழிப்பும் நிறைந்திருந்த அந்த ஊரில் திடீரென கடும் பஞ்சம் ஏற்பட்டது.மக்களிடம் பணம் இருந்தது ...ஆனால் சாப்பிட உணவு கிடைக்கவில்லை,குடிக்க நீர் கிடைக்கவில்லை.


எனவே ஊர் தலைவர்  தலைமையில் ஊரின் எல்லையில் அமைந்திருந்த அவ்வூரின் காவல் தெய்வத்திடம் சென்று ஊர் மக்கள்  முறையிட்டனர்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது .மக்களே இந்த ஊரில் நல்லவர்களாக இருந்த அனைவரும் கெட்டுப் போய்விட்டீர்கள் .அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தவறான வழியில் சம்பாதித்து வருகிறீர்கள்.உங்களுக்கு ஒரே ஒரு நாள் அவகாசம் தருகிறேன்...இன்னும் 24  மணி நேரத்திற்குள் அனைவரும் தவறான வழியில் சேர்த்த பணத்தை இந்த கோவிலில் கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் . அவ்வாறு செய்யவில்லையெனில் மேலும் பஞ்சத்தை அதிகமாக்கி அனைவரையும் கொன்றுவிடுவேன் என எச்சரித்தது.

உடனடியாக மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளை நோக்கி ஓடினர்.தவறான வழியில் சேர்த்த பணத்தையெல்லாம் கோவிலில் கொண்டு வந்து சேர்த்தனர்.

24  மணி நேரம் கடந்தது...எனினும் மழை வருவதற்குரிய எந்த அறிகுறியும் தென்படவில்லை .எனவே மக்கள் மீண்டும் கடவுளிடம் முறையிட்டனர்.

அப்போது மீண்டும்  அசரீரி ஒலித்தது.என் மீது தவறு இல்லை ...இந்த ஊரிலுள்ள அனைவரும் தவறான வழியில் சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து சேர்க்கவில்லை என்றது அசரீரி.

உடனே மக்கள் கூட்டத்தில் சுற்றுமுற்றும் பார்த்தனர்...அங்கே ஒரு ஓரத்தில் நான்கைந்து பேர் வெறும் கையுடன் நின்றுகொண்டிருந்தனர்.உடனே ஊர் தலைவர் அவர்களிடம் சென்று நீங்களெல்லாம் தவறான வழியில் ஒரு காசுகூட சம்பாதிக்கவில்லையா வெறும் கையுடன் நிற்கிறீர்கள் என்று அதட்டினார் .

அதற்கு அவர்கள் மன்னிக்கவேண்டும் தலைவரே நாங்கள் தவறான வழியில் சம்பாதித்த பணத்தையெல்லாம் வெளி  நாட்டில் பதுக்கிவிட்டோம்.அவை எல்லாவற்றையும் கப்பலில் ஏற்றி கொண்டு வர சொல்லியிருக்கிறோம் ...விரைவில் வந்துவிடும் ...அது வரை சற்று பொறுக்கவேண்டும் என வேண்டினர்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த  மக்கள் அனைவரும் தலையில் கை வைத்துக்கொண்டு கப்பலின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

7 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இந்த கதையில வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே அல்ல !!!

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரி அப்படீன்னா .......இப்படியும் நடந்துகிட்டுதான் இருக்குதா???

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... முடிவில் அசத்திட்டீங்க....

ஆனால் உண்மை நிலவரப்படி ஒரு கப்பல் பத்தாது என்று பேசிக்கொள்வதாக தகவல்...

(த.ம. 2)

MARI The Great சொன்னது…

ஹி ஹி ஹி! கலக்கல் முடிவு!

அம்பாளடியாள் சொன்னது…

ஆஹா ....கதை அருமை அந்த ஐந்து பேரும் யார்?....!! பெரிய பெரிய அரசியல் வாதிகளா!...
சிறப்பான ஆக்கம் தொடர வாழ்த்துக்கள் .

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நாட்டின் இன்றைய நிலையை அழகான கதை மூலம் சித்தரித்து காட்டிய விதம் அழகு! நன்றி!

unknown சொன்னது…

வணக்கம்
அருமையாக எழுதுகின்றீர்கள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....