16 அக்டோபர் 2011

அணுமின் நிலையங்கள் வேண்டாம் பிரபலங்கள் வழக்கு

நன்றி : BBC

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று போராட்டம் தொடரும் நிலையில், நாட்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அணுமின் நிலையங்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, முன்னாள் அதிகாரிகள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.

பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் பொதுநல வழக்குகளுக்கான மையம், முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ் உள்பட 14 பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

கோரிக்கைகள்

அரசு மற்றும் அணுசக்தி அமைப்பு சாராத சுயாதீன நிபுணர் குழுவை அமைத்து, தற்போதுள்ள மற்றும் உத்தேச அணுசக்தி நிலையங்கள், யுரேனிய சுரங்க வசதிகள் மற்றும் பிற அணுசக்தி எரிபொருள் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரம், பாதுகாப்பு குறித்தும், மாற்று எரிசக்தியுடன் ஒப்பிடுகையில் அணுசக்தி மின்சாரத்தின் சிக்கனத் தன்மை குறித்தும் ஆய்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆய்வுகள், சிக்கனத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் முடியும் வரை, உத்தேச அணுமின் நிலையங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரி்க்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, சுயாதீன அணுசக்தி நிபுணர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி்க்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய நலனுக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக உள்ள சிவில் அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டம் 2010-ஐ சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அணு விபத்து நடந்தால், அணுசக்தி நிலையங்களை நடத்துவோர் மற்றும் விநியோகஸ்தர்களை முழுமையாகப் பொறுப்பாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே நடந்துள்ள ஒப்பந்தங்களை வெளிப்படையாக அறிவிப்பதுடன், எதிர்காலத்தில் நடக்கும் அணுசக்தி உலைகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களையும், அது தொடர்பான தொழில்நுட்பங்களையும் வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்துக்குப் பிறகு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் அணுமின்சக்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், இந்திய அணுமின் நிலையங்கள் 101 சதம் பாதுகாப்பானதாக உள்ளதாக அணுசக்தித் துறை செயலர் அறிவித்திருப்பது மக்களை திசை திருப்பும் செயல் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடங்குளத்தை காலிசெய்யும் அணு உலை பணியாளர்கள் 

போராட்டம் எதிரொலி : ஊரை காலி செய்கின்றனர் அணுமின் நிலைய தொழிலாளர்கள்

கூடங்குளம்  அணு உலைக்கெதிரான  போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது .இடிந்தகரையில்  இரண்டாவது கட்டமாக 106 பேர்  எட்டாவது நாளாக  காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் அதே வேளையில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் அணு மின் நிலையம் அருகில்  பந்தலமைத்து இரவுபகலாக தங்கியிருந்து அணு உலைக்கு வேலைக்கு  செல்பவர்களை தடுத்து வருகின்றனர் .

தொடர் போராட்டங்கள்  காரணமாக பீகார் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை உதறிவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர் .

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வெளி மாநில தொழிலாளர் ஒருவர் கூறுகையில் தொடர்ந்து போராட்டம் நடை பெறுவதால் எங்களுக்கு போதிய வருமானமில்லை மேலும் கூடங்குளத்தில்  தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டு வருவதால் எங்களுக்கு சாப்பிட ,குடிக்க உணவுகள் கிடைக்கவில்லை எனவே இனிமேலும் இங்கிருக்க விரும்பவில்லை என்று கூறினார் .
ஊரை காலி செய்கின்றனர் அணுமின் நிலைய  தொழிலாளர்கள்

நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2000  வெளி மாநிலத்தவர்கள் ஊர் திரும்பியுள்ளனர் .மேலும் எஞ்சியுள்ளவர்களும் விரைவில் வெளியேறிவிடுவார்கள் என்றே தெரிகிறது .

சமீபத்தில் டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தையின் போது அணு மின் நிலையத்தில் பெரிய அளவிலான வேலைகள் எதுவும் நடக்கவில்லை சில பராமரிப்பு பணிகள் மட்டுமே நடப்பதாக போராட்டக்குழுவினரிடம் பிரதமர்  கூறியிருந்தார் .ஆனால் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்தப்பணியாளர்கள் வேலை செய்து வந்தது இப்போது தெரிய வருகிறது .

போலீஸ் வாகனத்தை சோதனையிட்ட பொதுமக்கள் 

அணு மின் நிலையத்திற்கு தொழிலாளர்கள் யாரும்  செல்லாததால் அணுமின் நிலையத்தினுள் வைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை பாதுகாக்கும் பொருட்டு ஒரு பெரிய போலீஸ் படை நேற்று முன்தினம் கூடங்குளம் வந்தது .ஆனால் அனைத்து சாலைகளும் அடைக்கப் பட்டிருந்ததால் அணு மின் நிலையத்திற்குள் செல்ல முடியவில்லை .அதைத் தொடர்ந்து அதிகாரிகள் போலீஸ் படை வந்ததற்கான காரணத்தைக் கூறி தங்களுக்கு வழி விடவேண்டும் என கோரினர் .அதற்கு பொது  மக்கள் போலீஸ் வாகனத்தில் தொழிலாளர்களை உள்ளே அழைத்து செல்ல வாய்பிருப்பதாகக் கூறி வழி விட மறுத்தனர் .

கூடங்குளம்  பைபாஸ் ரோட்டில்   பொதுமக்கள்  ஏற்படுத்தியுள்ள  தடுப்பு  

அதற்கு  அதிகாரிகள் எங்கள்  வாகனங்களில் தொழிலாளர்கள் யாருமில்லை வேண்டுமானால்  நீங்கள்  வந்து  சோதனை  செய்து பாருங்கள்  என்று கூறினார்கள்  .அதன்படி  பொதுமக்களில்  சிலர் வாகனங்களை சோதனையிட்டனர் .அதிகாரிகள் கூறிய படி தொழிலாளர்கள் யாருமில்லாததால் வாகனங்கள்  செல்ல அனுமதிக்கப்பட்டன .

போலீஸ் தாக்கியதால் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் மாற்றுத் திறனாளி மணிகண்டன் .

15 அக்டோபர் 2011

கூடங்குளம் பிரச்சனை :நடுநிலை தவறும் ஊடகங்கள்

தங்கள் வாழ்வாதாரமும் சந்ததிகளும்  பாதிக்கப்படும் என்பதற்காக கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக போராடி வருகிறார்கள் .அவர்கள்  போராட்டத்திற்கு  பல்வேறு  அரசியல்  கட்சிகள் ,சமூக  இயக்கங்கள் மட்டுமன்றி சமீபத்தில் தமிழக முதல்வரே ஆதரவு  தெரிவித்துள்ளார் .ஆனால் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது .
 
மத்திய அரசு எப்படிப்பட்ட அரசு என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.ஆனால் சில தமிழ் ஊடகங்களின் நடவடிக்கைதான் இவர்களுமா இப்படி என சிந்திக்க வைக்கிறது .
 
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இப்போராட்டத்தில் ஒருநாள் கூட தலை காட்டாத ஒரு நபர்  போராட்டக்குழுவின்  நடவடிக்கைகள்  சரியில்லை  யாருடைய  தூண்டுதலின்  பேரிலோதான் செயல்படுகிறது என பேட்டியளித்தார் .இந்த பேட்டியை பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டன .போராட்டக்குளுவில் பிளவு போராட்டக்குளுவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது என்றெல்லாம் செய்தி வெளியிட்டு போராட்டத்தை குழப்பி விடப் பார்த்தன .
 
ஆனால் இது உண்மையிலேயே மக்கள் போராட்டம் என்பதால் ஊடகங்களின் பொய்யுரை போராட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை .
 
அனைத்து ஊடக நிருபர்களும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு தினமும் வருகிறார்கள் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும் ,மர்ம நபர்கள் தூண்டுகிறார்கள் என்றால் யார் யாரெல்லாம் தூண்டுகிறார்கள் என்பதை ஊடகங்கள் கண்டுபிடித்து வெளியிடலாமே .ஏன் தேவையில்லாமால் வதந்தி பரப்புகின்றன .
 
இதற்கும் ஒரு படி மேலே சென்றது நேற்று ஒரு தொலைகாட்சி சானல் .
 
நேற்று ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் திரு கோபால் சாமி அவர்கள் உச்ச நீதி மன்றத்தில் அணு உலைகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது  .இந்த சானல் இந்த செய்தியை எப்படி கூறியது என்றால் விபரமானவர்களே இப்படி செய்யலாமா என்று .
 
எந்த ஒரு மனிதனும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது குற்றம் என்று எந்த சட்டத்திலாவது சொல்லப்பட்டுள்ளதா ? அப்படி இருக்கையில் ஊடகம் இப்படி செய்தி வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் ..இந்த ஊடகங்களை விட  அரசியல்வாதிகள் பரவாயில்லை என்று எண்ணுமளவிற்கு ஊடகங்களின் நடவடிக்கைகள் உள்ளன ..
 
நல்ல வேளை... இந்திய சுதந்திரப் போராட்டத்தின்  போது இதுபோன்ற ஊடகங்கள் இல்லை .இருந்திருந்தால் சுதந்திரம் கிடைக்கவிடாமல் ஆக்கியிருப்பார்கள் .
 
எனினும் கூடங்குளம் மக்கள் போராட்டம் வெல்லும் .

14 அக்டோபர் 2011

அணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கூடங்குளம் அணு உலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார  ஊர்களில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

தமிழக அரசும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது .எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அணு உலையை செயல்பட வைக்க முனைப்பு  காட்டி வந்தது .

இந்நிலையில் இன்று திடீரென மக்கள்  வெகுண்டெழுந்து அணு உலைப் பணிகளை இனி தாங்களே நிறுத்துவது என முடிவெடுத்தனர் .
 

13 அக்டோபர் 2011

அணு உலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கூடங்குளம் அணு உலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறி கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார  ஊர்களில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

தமிழக அரசும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது .எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் அணு உலையை செயல்பட வைக்க முனைப்பு  காட்டி வந்தது .

இந்நிலையில் இன்று திடீரென மக்கள்  வெகுண்டெழுந்து அணு உலைப் பணிகளை இனி தாங்களே நிறுத்துவது என முடிவெடுத்தனர் .

அதன் படி இன்று காலை சுமார் 9  மணியளவில் ஆயிரக்கணக்கானோர் அணு மின் நிலையம் முன்பு திரண்டனர் .அனைவரும் இணைந்து அணு உலைக்கு பணியாளர்கள் வரும் வாகனங்களை  திருப்பி அனுப்பினர் .

மேலும்  இரு சக்கர வாகனகளில் வருபவர்களையும் தடுத்து நிறுத்தி அணு உலையால் நம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் இனி நீங்கள் அணுமின் நிலைய வேலைகளை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு செல்லுங்கள் என்று அறிவுரை  கூறி அனுப்பி  வைத்தனர் .

இதன்காரணமாக அணு உலைப் பணிகள் முற்றிலும் தடை பட்டுள்ளது .

இதனிடையே இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொட முதல்வர் போராடும் மக்களில் தன்னையும் ஒருத்தியாக இணைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் .இது மக்களுக்கு  மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது .

அணு உலையை மூடிவிட்டுத்தான் வீடு திரும்புவோம்  என்று அணு மின் நிலையத்திற்கு அருகில் தங்கியுள்ள மக்கள் 

எனினும் மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வரும் வரையில்  அணு உலை அருகிலிருந்து அகலப் போவதில்லை என்று கூறி பெரிய பந்தல் அமைத்து சுமார் 3000 பெண்கள் உட்பட சுமார் 5000 அங்கேயே தங்கியுள்ளனர் .

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உணவு தயாராகிறது 

இதன் காரணமாக அணு உலைப் பணிகளை நிறுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது  .

மக்களின் இந்த  நியாயமான போராட்டம் வெற்றி பெற அனைவரும் உதவுங்கள் .