18 டிசம்பர் 2012

உங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா ?

சில சமயங்களில் நாம் உபயோகிக்கும் PENDRIVE  மற்றும் மெமரி கார்டுகளில் இது போன்ற பிரச்சினை ஏற்படுவதுண்டு. கோப்புகள் எதுவும் அழிக்கப் பட்டிருக்காது ஆனால் DRIVE  ஐ திறந்தால்  எதுவுமே தெரியாது. அல்லது குறிப்பிட்ட சில கோப்புகள் தெரியாது. HIDDEN FILE ஆகவும் அவை இருக்காது . ஆனால் DRIVE  ஐ மவுசால் வலதுபுறம் கிளிக் செய்து PROPERTIES  கிளிக் செய்தால் இத்தனை GB இதில் உள்ளது என காண்பிக்கும். 



இது போன்ற பிரச்சினைகளிலிருந்து  கோப்புகளை மீட்டெடுக்க பல்வேறு மென்பொருட்கள் உள்ளன . எனினும் அவற்றால்கூட சில சமயங்களில் மீட்டெடுக்க முடியாமல் போகலாம். இப்பிரச்சினையை சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது . 


முதலில் பிரசினைக்குள்ளான  DRIVE  ஐ மவுசால் RIGHT கிளிக் செய்து படத்தில் காண்பிக்கப் பட்டுள்ளவாறு Add to archive என்பதை தேர்ந்துடுக்கவும் .

இப்போது கீழ் கண்டவாறு ஒரு window  தோன்றும் . அதில் Browse என்பதை கிளிக் செய்தால் மீட்கப் படும் கோப்புகளை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யலாம். இனி OK  பட்டனை அழுத்தவேண்டியதுதான் . 


இப்போது காணாமல் போன கோப்புகள் அனைத்தும் ஒரு ZIP  FILE  ஆக கணினியில் சேமிக்கப்படும் . அதிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்கலாம்.

07 டிசம்பர் 2012

BSNL நீங்கள் விரும்பும் மொபைல் எண்ணை பெற ...

அனேக சமயங்களில் நாம் புதிதாக சிம்கார்டு வாங்கும்போது நாம் நினைப்பதுபோல் எண்கள் கிடைப்பதில்லை .மேலும் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவதுண்டு. புதிய சிம்கார்டின் எண்ணானது  ஏற்கெனவே இருக்கும் சிம்கார்டின் எண்ணை சற்று ஒத்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம் . 


இதற்கு வசதியாக நமது மொபைல் நம்பரை நாமே ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யும் வசதியை BSNL வழங்குகிறது. இந்த லிங்க்கில் சென்று உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் . உங்கள் மாநிலதிற்குரிய தளம் திறந்ததும் படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில டிராக் செய்து தளத்தை அன்லாக் செய்துகொள்ளுங்கள் . 


இப்போது உங்களுக்கு சில மொபைல் எண்கள்  காட்டப்படலாம் .அவற்றில் ஏதாவது பிடித்திருப்பின் அதை டிக் செய்து RESERVE NUMBER என்பதை கிளிக் செய்யுங்கள் .அடுத்து வரும் கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு ஒரு பின் நம்பர் கிடைக்கும் .

அந்த எண்ணை பத்திரமாக குறித்து வைத்துக்கொண்டு 48 மணி நேரத்திற்குள்ளாக உங்களுக்கு அருகாமையில் உள்ள BSNL  அலுவலகத்திற்கு சென்று சிம் கார்டை பெற்றுக்கொள்ளலாம். 

நீங்கள் விரும்பும் எண்ணை தேர்வு செய்ய தளத்தில் இருக்கும் SEARCH வழிமுறையை பின்பற்றலாம் . 

FANCY எண்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

27 செப்டம்பர் 2012

பிறந்த நாள் வாழ்த்துகள் கூகுள்!



கடவுளுக்கு அடுத்தபடியாக காசில்லாமல் உதவி செய்வது கூகுள் ஆண்டவர் என பெருமையுடன் அழைக்கப்படும்  கூகுள் . இன்று தனது 14 -வது பிறந்த நாள் கொண்டாடும் கூகுளுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

24 செப்டம்பர் 2012

வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.

 பல வருடங்களாகவே காடுகளை அழிப்பதால் மழை குறைந்துவிட்டது என்றும் , வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்றும் வாயாரப் பேசி வருகின்றோம். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காண பெரும்பாலானோர் முயற்சி செய்யாமலேயே இருக்கிறோம். நாம் ஒருவர் மட்டும் நினைத்தால் நாட்டை சோலைவனம் ஆக்கிவிட முடியுமா என்று எண்ணியே பலரும் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடுகிறோம். 


ஆனாலும்  ஆங்காங்கே சில பெரிய உள்ளங்கள் பசுமை உலகம் படைத்தது வருகின்றனர். அரசுப் பேருந்து நடத்துனராக இருக்கின்ற திரு யோகநாதன் அவர்கள் தனி மனிதராக 1  லட்சம் மரங்கள் நட்டு சாதனை படைத்திருக்கிறார். அவர் பற்றிய தகவல்களை ஏற்கெனவே ஒரு பதிவில் பகிர்ந்திருந்தேன். 

அழிந்து போன காடுகளை மீட்டிடும் நோக்கிலும் மறைந்து போன மழையை வரவழைக்கும் நோக்கத்திலும் பசுமை விடியல் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டு அமைப்பின் மூலம் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் நடப் பட்டு வருகின்றன. திருமண விழாக்கள் போன்ற விழாக்களிலும் மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்த்தலை ஊக்கப் படுத்தி வருகிறது இவ்வமைப்பு . 

இது போன்ற காரியங்களில் அக்கறையுள்ள ஒவ்வொருவரையும் பசுமை விடியல் அழைக்கிறது. நீங்கள் செய்யவேண்டியது மிகச் சிறிய விஷயம்தான் . சூழலுக்கு நன்மை விளைவிக்கும் ஏதேனும் ஒரு மரக் கன்றை வாங்கி அதை உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கு மரம் வளர்க்க ஏதுவான பகுதியிலோ நட்டு அதை மரம் நடுபவரோடு சேர்த்து புகைப் படம் எடுத்து பசுமை விடியலுக்கு அனுப்புங்கள். 

இது உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயப்பது மட்டுமன்றி பசுமைக்கு வித்திடும் பசுமை விடியல் அமைப்பாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும். 

உங்கள் புகைப் படங்களை விளக்கத்தோடு ( மரம் நடுபவரின் பெயர் மற்றும் முகவரி ) tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 

உங்கள் படம் பசுமை விடியல் தளத்தில் பிரசுரிக்கப் படும்.  

பசுமை விடியலின் தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள். 

பசுமை விடியலின் முகநூல் பக்கத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள். 

இப்பதிவிற்கு நீங்கள் ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை கமென்ட் போடாவிட்டாலும் பரவாயில்லை மரம் நட என்னால் இயலாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். 

வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.

17 செப்டம்பர் 2012

கூடங்குளத்தின் தற்போதைய நிலை - நேரடி தகவல்

ஒரு வருடத்திற்கும் மேலாக அமைதியான முறையில் நடைபெற்ற கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தமிழக அரசின் அடக்குமுறை காரணமாக கடந்த 10-9-2012 அன்று போர்க்களமாக மாறியது. கடற்கரையில் குழுமியிருந்து அணு உலைக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடியும் கண்ணீர் புகை குண்டும் வீசி பொதுமக்களை கலைந்தோட செய்தனர். 


தொடர்ந்து இடிந்தகரை ஊருக்குள்ளும் போலீஸ் படை  புகுந்தது. அதே வேளையில் கூடங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் கூடங்குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடி மறியலில் ஈடுபட்டனர் . உடனே இடிந்தகரைக்குள் சென்ற போலீசார் அனைவரும் கூடங்குளத்திற்கு திரும்பினர். 

போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே நடந்த சண்டையில் பொதுமக்கள் பலர் லத்தியாலும் , குண்டடிபட்டும் ரத்தக் காயமடைந்தனர். கண்ணீர் புகை குண்டுடன் ஆகாயத்தில்  சென்று வெடிக்கும் ஒரு வினோதமான குண்டும் போலீசாரால் உபயோகிக்கப் பட்டது. இந்த குண்டு பட்டதில் கூடங்குளம் கஸ்தூரி மருத்துவ மனை முகப்பு போர்டு சேதமடைந்தது. அடுத்ததாக 

11-9-2012 அன்றைய  தினத்தில்தான் கூடங்குளம் மக்கள் இது வரை காணாத ஒரு மோசமான தாக்குதலை எதிர்கொண்டனர். தனித்தனி குழுக்களாக வெவ்வேறு தெருக்களுக்கும் புகுந்த போலீஸ் படையினர் வழியில்  கண்டவர்கள் அனைவரையும் லத்தியால் தாக்கினர். சில குழந்தைகள், வயதுப்  பெண்களும் இத்தாக்குதலிலிருந்து தப்பவில்லை. 

நடுத்தர வயதுடைய ஆண்கள் பலர் கைது செய்யப் பட்டு திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட நீண்ட தூரத்திலுள்ள சிறைகளில் அடைக்கப் பட்டனர். இதன் காரணமாக நடுத்தர வயதுடைய ஆண்கள் பலரும் ஊரை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களை நாடி சென்றுவிட்டனர். 

தொடர்ந்து 10  - வது நாளாக கூடங்குளத்தில் கடைகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் இயக்கப் படவில்லை. தனியார் வாகன உரிமையாளர்களும் பயத்தின் காரணமாக வாகனங்களை இயக்கவில்லை. ஒருசில வயதான ஆண்களும், பெண்களும் மட்டுமே தெருக்களில் நடமாடுகின்றனர். 

144  தடை உத்தரவின் கீழ் பல மாதங்களாக சிக்கித் தவிக்கும் கூடங்குளம் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட இடம் போல் காட்சியளிக்கிறது.