22 ஏப்ரல் 2011

ஜப்பான் : தாய்ப்பால் விஷமானது !

        நமது எதிரிகளுக்குகூட இப்படி ஒரு     சோதனை வரக்கூடாது என்றுமிகவும்துன்பமான வேளைகளில் நாம் நினைப்பதுண்டு .அப்படி ஒருமோசமான துன்பநிலை ஜப்பான் நாட்டில் நிகழ்ந்துள்ளது .

ஜப்பானில் கடந்த 11 -03 -2011  அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அங்குள்ள புகுஷிமா அணு உலைகள் மிக மோசமாக சேதமடைந்தன .அதன் காரணமாக அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறத் தொடங்கியது .அதன் காரணமாக புகுஷிமா மட்டுமன்றி 200 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் டோக்யோ நகரத்திலுள்ள உணவு பொருட்களிலும் கதிரியக்கம் கண்டறியப்பட்டது .

அதை தொடர்ந்து ஜப்பானில் இருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறுநாடுகளும் தடை விதித்துள்ளன .சில நாட்களுக்கு முன் ஜப்பான் கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை பரிசோதித்த போது அவற்றில் கதிரியக்கம் இருப்பதுகண்டறியப்பட்டது .அதன் காரணமாக யாரும் கடலில் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிடவேண்டாம் என மக்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டது .

தற்போது சோதனை மேல் சோதனையாக  டோக்யோ நகரத்தின் அருகில் வசிக்கும் சில தாய் மார்களின் தாய்ப்பாலில் நேற்று கதிரியக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது .இது அங்குள்ள மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இதனிடையே புகுஷிமா அணு உலையிலிருந்து 20  கிலோ மீட்டருக்குள் எந்த ஒரு நபரும் நுழையஅந்நாட்டு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது .

1986 ல் செர்னோபிலில் நிகழ்ந்த அணு விபத்தின் போதும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன .அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகள் அணு உலைகளின் தீமையை உணர்ந்து தங்கள் நாட்டிலுள்ள அணு உலைகளை மூடின .

கடந்த 20  ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஒரு அணு விபத்தும் நிகழாததால் சில நாடுகள்புதிதாக அணு உலைகளை கட்ட திட்டமிட்டிருந்தன .தற்போது ஜப்பானில் நிகழ்துள்ள துயரங்களை அடுத்து அமெரிக்கா, சீனா,இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அணு உலை அமைக்கும் திட்டத்தை கை விட்டுள்ளன .

18 ஏப்ரல் 2011

இன்றைய சூழ்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு தேவையா?

    சென்னை மவுண்ட்ரோடு ,மதியம் 12  மணி ,உடம்பு பற்றி எறிவது போல் வெப்பம் ,நாக்கு வறண்டு உடல் தளர்ந்து மயக்கம் வரும் வேளையில் ஒரு இளநீரோ அல்லது தர்பூசனியோ சாபிட்டால் கொஞ்சம் இதமாக இருக்கும் .ஆனால் இந்த நிலையில் ஒருவன் சூடா ஒரு கப் காப்பி வேண்டும் என்று கேட்டால் அவனை ஒருவேளை பைத்தியமாக இருப்பானோ என்று எண்ண தோன்றும்.        பாரத பிரதமர் மன்மோகன் சிங்கை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது .உலக வெப்பமயமாதலை தடுக்க அணுமின் நிலையங்களால்தான் முடியும்  என்று சில நாடுகள் அணுமின் சக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தன .அவற்றுள் சமீபத்தில் அணு விபத்தால் நிலை குலைந்திருக்கும் ஜப்பான் நாடும் ஒன்று .
      ஜப்பான் அணு விபத்துக்கு பிறகு ஜப்பான் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளும் தங்கள் அணுசக்தி திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய தொடங்கியுள்ளன .சீனா தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் புதிதாக கட்ட திட்டமிட்டுள்ள அனைத்து அணுமின் நிலையங்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது ஜெர்மனி பழமையான 7  அணு உலைகளை தற்காலிகமாக மூடியுள்ளது இவற்றில் சிலவற்றை நிரந்தரமாக மூடவும் பரிசீலித்து வருகிறது .இங்கிலாந்து 30 பில்லியன் பவுண்ட் செலவில் விரிவாக்கத் திட்டமிட்டிருந்த அணு சக்தி திட்டங்களை மறு பரிசீலனை செய்ய தொடங்கியுள்ளது உலகில் அதிக அளவு அணு ஆற்றலை நம்பியிருக்கும் பிரான்ஸ் நாட்டின் பாராளு மன்றத்தின் இரு அவைகளிலும் அணுமின் திட்டங்களின் எதிகாலம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது .இந்த ஒரு சூழ்நிலையில் புதிய அணு மின் நிலையங்களை விரைவாக அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் ஒரே நாடு இந்தியாதான் .16-04-2011 அன்று பாரத பிரதமர் மன்மோகன் சிங் கஜகஸ்தான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளார் .மகாராஷ்டிர மாநிலம் ஜைதாபூரில் நிலநடுக்க ஆபத்து நிறைந்த பகுதியில் பத்து அணுமின் நிலையங்கள் அமைக்க வழங்கப்பட்டுள்ள சுற்று சூழல் அனுமதியை மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இரு நாட்களுக்கு முன் கூறியுள்ளார் .கூடங்குளத்தில் சுனாமி ஆபத்து நிறைந்த கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு அணு உலைகள் போக மேலும் இரு அணு உலைகளுக்கான பணிகள் மக்கள் எதிர்ப்பையும் மீறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது .உலக நாடுகள் அனைத்தும் அணு சக்தி திட்டங்களை மறு பரிசீலனை செய்து வரும் வேளையில் மரபு சார எரி சக்தி வளங்கள் நிறைந்த இந்தியாவில் மத்திய அரசு அணு சக்தி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருவது சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது .

08 ஏப்ரல் 2011

ஜப்பான் உணவுப்பொருட்களுக்கு தடை நீக்கம் !இந்தியா திடீர் முடிவு!

ஜப்பானில் அணு உலைக் கதிர்வீச்சினால் உணவுப்பொருள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்தியா ஜப்பானிலிருந்து உணவுப்பண்டங்களை இறக்குமதி செய்யத் தடை விதித்திருந்தது. தற்போது திடீரென அந்தத் தடையை திரும்பபெற்றது இந்திய அரசு.

சீனா, தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜப்பானின் பாதிக்கப்பட்ட அணு உலை இருக்கும் பகுதிகளிலிருந்து வரும் உணவுப்பொருட்களுக்குத் தடை விதித்தது.

இதனையடுத்து இந்தியாவும் 3 மாதகால தடை விதித்திருந்தது. இப்போது "கதிர்வீசு பாதிப்பு இல்லை" என்ற சான்றிதழ் கொடுத்து இந்தியாவுக்கு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என்று இந்திய வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

"ஒவ்வொரு வாரமும் அங்குள்ள நிலைமைகளை பரிசீலனை செய்து அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். தற்போது ஒட்டுமொத்த தடை தேவையில்லை" என்று வணிகத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் உள்ள புகுஷிமா டாய்ச்சி அணு உலையில் சுனாமி மற்றும் பூகம்பம் காரணமாக் மின்தடை ஏற்பட்டு அணு உலை குளிரூட்டும் வசதிகள் முற்றிலும் பழுதடைந்தன. இதனால் கதிர்வீச்சு கடல் நீரிலும், ஏன் நிலத்தடி நீரிலும் கூட பாய்ந்திருப்பதாக செய்திகள் வெளியானதால் பல நாடுகள் ஜப்பானிலிருந்து உணவுப்பொருள், பழங்கள் இறக்கு மதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

கதிர்வீச்சு உணவினால் புற்று நோய் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு நாடும் ஜப்பான் உணவுப்பொருட்களுக்கு தடையை நீக்காத நிலையில் இந்தியா மட்டும் நீக்கியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .


                              -நன்றி வெப் துனியா.

05 ஏப்ரல் 2011

ஜப்பான் பள்ளிக்கூடங்களில் கதிரியக்க ஆய்வு

      கடந்த 11-03-2011 ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியால் அங்குள்ள புகுஷிமா அணு உலைகள் வெடித்து சிதறியது.அணு உலைகள் சேதமடைந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் பின்னடைவுகளே ஏற்பட்டு வருகின்றன.அணு உலையிலிருந்த30கிலோமீட்டர்தொலைவிலுள்ளமக்கள்வெளியேற்றப்பட்டு
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர் .இருந்தாலும் 30 கி.மீ.க்கு அப்பால் வசிக்கும் மக்களிடமும் கதிரியக்கம் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது .அதிலும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் மழலை செல்வங்கள் குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளனர் .இதன் காரணமாக ஜப்பானில் உள்ள 1400 பள்ளிகளில் கடந்த இரண்டு நாட்களாக கதிரியக்க ஆய்வுகள்நடந்து வருகின்றன .
   
      கதிரியக்க பாதிப்புகளை குறைக்கும் முயற்சிகளில் பெரும் பின்னடைவாக 7 லட்சம் மடங்கு கதிரியக்கம் மிகுந்த அணு உலைக்குள் தேங்கியிருந்த 12000 டன் நீர் கடலில் திறந்து விடப்பட்டுள்ளது .வேறு வழி இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்க நேர்ந்ததாக ஜப்பான் அரசின் உயரதிகாரி யூகியோ எடானோ தெரிவித்துள்ளார்.இந்த ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .இதன் மூலமாக அடுத்த சில நாட்களில் மக்கள் வெளியேற்றம் மேலும் பல தூரத்திற்கு அதிகரிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது .

        இதனிடையே நிவாரண முகாம்களுக்கும் மருத்துவ மனைகளுக்கும் புதிதாக வருபவர்கள் தங்கள் உடலில் கதிரியக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் மக்கள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர்.திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை .நல்ல மனம் கொண்ட ஜப்பான் மக்கள் அனைவரும் துயரங்களிலிருந்து உடனே விடுபட இறைவனை பிரார்த்திப்போம்.