27 செப்டம்பர் 2011

மீண்டு (ம்) வருவேன் ....

11  நாள் உண்ணாவிரதத்தின் பின் விளைவுகளிலிருந்து மீண்டு (ம்) வருவேன் ....

நம்பிக்கையுடன் 
கூடல் பாலா

22 செப்டம்பர் 2011

காலவரையற்ற உண்ணாவிரதம் நிறைவு -போராட்டம் தொடர்கிறது

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நடைபெற்று வந்த 127  பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று காலை 11  மணியளவில் நிறைவு பெற்றது .எனினும் சாதகமான சூழ்நிலை வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது .

கடந்த 11  நாட்களாக இடிந்தகரையில் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தோம் .நேற்று முதல்வருடன் நடந்த பேச்சு வார்த்தையில் அணு உலைக்கெதிராக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழு அறிவித்தது .

அதன்படி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 127  பேரின் உண்ணாவிரதத்தை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் திரு இவான் அம்புரோஸ் அவர்கள் பழச்சாறு கொடுத்து நிறைவு செய்தார் .எனினும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தை தொடர்கின்றனர் .

இப்போதிலிருந்து நடைபெறுகின்ற போராட்டங்கள் முற்றிலும் மத்திய அரசுக்கெதிராக அணு உலையை மூடக்கோரும் போராட்டமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

எனது உடல்நிலை சாதாரணமாகவே உள்ளது .

அணு உலையை மூடும் வரையில் தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம் .

21 செப்டம்பர் 2011

வெற்றி : விரைவில் முடிவுக்கு வருகிறது உண்ணாவிரதம்

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 11 வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று போராட்டக்குழுவினர் நேற்று இரவு சென்னைக்கு பேச்சு வார்த்தைக்கு புறப்பட்டுச் சென்றனர் .

இன்று முதல்வருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது .அப்போது அணு உலையை தற்காலிகமாக மூட நாளை அமைச்சரவையைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் முடிவு செய்துள்ளார் .மேலும் நிரந்தரமாக மூட மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கப்போவதில்லை எனவும் முதல்வர் உறுதியளித்துள்ளார் .

எனவே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.

கூடிய விரைவில் உண்ணாவிரதம் முறைப்படி முடிவுக்கு வரும் . 

போராட்டம் வெற்றி பெற உழைத்த மக்களுக்கும் உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பதிவுலக சொந்தங்களுக்கும் மிக்க நன்றி !

20 செப்டம்பர் 2011

அணு உலை போராட்டக்குழு அலைக்கழிப்பு -பேச்சு வார்த்தைகள் ரத்து

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 127 பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று பத்தாவது நாளாக நடைபெறுகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக நெல்லை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தி வணிகர்கள் ஆதரவளித்தனர் .
இந்நிலையில் போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்த இடிந்தகரை வருவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார் .ஆனால் இன்று மாலை வரை வரவில்லை .

திடீரென மாலை 4 -25 மணிக்கு ராதாபுரம் தாலுகா அலுவலகத்திலுள்ள தலையாரி இடிந்தகரை வந்து 4 -30 மணிக்கு அமைச்சரை சந்திக்க வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் .இடிந்தகரையில் இருந்து ராதாபுரம் செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகும் அப்படியிருக்கையில் இந்த அழைப்பு போராட்டக் குழுவினரை அவமதிக்கும் செயல் எனக் கருதப் பட்டதால் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த 15 000 க்கும் அதிகமான மக்கள் அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .

இந்நிலையில் 16 பேர் கொண்ட குழு நாளை தமிழக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யபட்டிருந்தது .ஆனால் முதல்வர் அலுவலகத்தால் இப்பட்டியல் திருத்தியமைக்கப் பட்டது .பட்டியலிலிருந்து போராட்டத்திற்கு பேராதரவு அளித்து வரும் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் பெயர் நீக்கப்பட்டது .குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் 10 ஆக குறைக்க கேட்டுக்கொள்ள பட்டது .இதற்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதன் காரணமாக முதலமைச்சருடனான பேச்சு வார்த்தையும் ரத்து செய்யப்பட்டது .


இன்று உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள்

மேலும் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை விடப்பட்டுள்ளது .அதில் அணு உலை பிரச்சினையில் நேற்று முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அதே நேரத்தில் அமைச்சரவையைக்கூட்டி கூடங்குளம் அணு உலைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினால் போராட்டம் கைவிடப்படும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது .

போராட்டம் 11 நாளை நோக்கி .....
-------------------------------------------------------------------------------------------------------
சற்று முன் : மத்திய அமைச்சர் நாராயண சாமி தற்போது உண்ணாவிரதத்தை பார்வையிட்டு சென்றார் .பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை .

இது நாட்டை காக்கும் போராட்டம் :மேதா பட்கர்

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 10  வது நாளாக 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறோம் .

கூடங்குளம் பகுதியைச் சார்ந்த பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர் .வியாபாரிகள் தொடர்ந்து கடையடைப்பு நடத்தி வருகின்றனர் .தினமும் பத்தாயிரக் கணக்கான மக்கள் உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்து வருகிறார்கள் .

இந்த மாபெரும் போராட்டத்தை மீனவர்களின் போராட்டம் என சிலர் திசை திருப்ப முயன்றனர் .ஆனால் அது முறியடிக்கப் பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் இது தமிழகத்திற்கான போராட்டம் என்றுணர்ந்து தங்கள் ஆதரவை இப்போராட்டத்திற்கு வழங்கி வருகிறார்கள் .

நேற்று உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட மக்கள்  

இந்நிலையில் நேற்று இப்போராட்டத்தில் நேரில் கலந்துகொண்ட மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேதா பட்கர் இப்போராட்டம் மீனவர்களுக்கு மட்டுமோ அல்லது தமிழகத்திற்கு மட்டுமோ அல்ல ,இது நம் தேசத்தை காக்கும் போராட்டம் என உணர்ச்சி பொங்க கூறினார் .

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டாலும் அதன் கதிரியக்கத்தை யாராலும் தடுக்க முடியாது .இதிலிருந்து மக்களைக் காக்க அரசுகள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை .மக்கள் எழுச்சி மூலமாகத்தான் இதைத் தடுக்க முடியும் .அதுதான் இங்கே நடக்கிறது என்றும் அவர் கூறினார்.

காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் 127 பேரில் இது வரை 40  பேருக்கும் மேலானோர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது .இவர்களுக்கு மருத்துவ வசதியை போராட்டக் குழுவே செய்து வருகிறது .

இன்று மத்திய அமைச்சர் நாராயண சாமி எங்களை சந்திக்க வருவதாக தகவல் வந்துள்ளது .
எனக்கு கைகொடுத்த சமூக சேவகி மேதா பட்கர்
எனது உடல்நிலை சீராக இருந்து வருகிறது .எடை மட்டும் ஏழு கிலோ குறைந்துள்ளது .

தொடர்ந்து பதிவின் வாயிலாகவும் ,தொலைப்பேசி வாயிலாகவும் ஆதரவு தெரிவித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி !