19 செப்டம்பர் 2011

கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தவேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதாகடிதம்

கூடங்குளம் பிரச்னை தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகள் தொடரக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.


இப்பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.


இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

"நாட்டின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு 1988 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

2001 ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் (Nuclear Power Corporation of India Limited) பணிகள் துவக்கப்பட்டு, முதல் மின் நிலையத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்தச் சூழ்நிலையில், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், அணு விஞ்ஞானிகள் ஆகியோருடன் எனது அரசு ஆலோசனை நடத்தியது.

இதனையடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், இந்த அணு மின் நிலையத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்ததையும் எடுத்துக் கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தை அப்பகுதி மக்கள் கைவிட வேண்டும் என்று நான் 16.9.2011 அன்றைய அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டேன்.

கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் அந்தப் பகுதி மக்களின் அச்சத்தை தீர்க்கவில்லை. எனவே, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

ஏற்கெனவே எனது அறிக்கையில் தெரிவித்தவாறு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய எந்த ஒரு திட்டச் செயல்பாட்டையும்  எனது அரசு ஊக்குவிக்காது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு மீது சாடல்...

இந்த அணு மின் திட்டம் மத்திய அரசு மற்றும் இந்திய அணு மின் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணு மின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற அந்தப் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், மத்திய அரசு இதற்கான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை. 

கூடங்குளம் பகுதியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அந்தப் பகுதி மக்களின் அச்சம் ஆகியவைக் குறித்து தனக்கு சம்பந்தமே இல்லாததைப் போன்று மத்திய அரசு நடந்து கொண்டு வருகிறது.

அந்தப் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான முழுப் பொறுப்பும் மத்திய அரசிடமே உள்ளது.  ஆனால், அந்தப் பொறுப்பை மத்திய அரசு இதுவரை எடுத்துக் கொள்ளாததோடு, இந்தப் பிரச்சனை ஏதோ மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை போல் கை கழுவி விடுவதாக அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. 

சமீபத்தில் சென்னை வந்த மத்திய அரசின் முக்கியத் துறையான சுற்றுச்சூழல் துறையின் அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஜெயந்தி நடராஜனிடம் இந்தப் பிரச்னைக் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, இந்தப் பிரச்னை தன்னுடைய துறை சம்பந்தப்பட்டது அல்ல என்று கூறி கை கழுவி விட்டார்.

மேலும், இதைப் பற்றி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்வார்கள் என்றும் மேம்போக்காக கூறி உள்ளதன் மூலம், இதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்ற தொனியில், பொறுப்பற்ற முறையில் பதில் அளித்து உள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த, முக்கியத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஒரு அமைச்சர், கூடங்குளம் பகுதி மக்களின் அச்ச உணர்வை நீக்கும் வகையில் எதையும் தெரிவிக்காதது வருந்தத்தக்கதாகும்.

மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் நிறுவனமான இந்திய அணு மின் கழகத்தால் கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு தன்னுடைய பொறுப்பை முழுவதும் தட்டிக் கழிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தப் பகுதி மக்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளித்திருக்க வேண்டும். இந்தப் பிரச்னைப் பற்றி சம்பந்தப்பட்ட மக்களுடன் பேசி இருக்க வேண்டும்.  அவ்வாறு எதுவும் செய்யாமல், தன்னுடைய கடமையில் இருந்து மத்திய அரசு தவறி உள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது.

பன்னீர்செல்வம் தலைமையில் குழு...

எனவே,  இந்தப் பிரச்னை குறித்து நான், பாரதப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளேன். அந்தக் கடிதத்தில், நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், அனைத்து கட்சிகள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்று, பிரதமரை சந்திக்கும் என்றும், அப்போது ஒரு கோரிக்கை மனுவையும் இந்தக் குழு அளிக்கும் என்றும் தெரிவித்து உள்ளேன்.

மேலும், இந்தப் பிரச்னையில் சுமூகத் தீர்வு எட்டப்படும் வரையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன்.

பிரதமருக்கு அளிக்க உள்ள கோரிக்கை மனுவில் நான் கையெழுத்து இடுவேன். அந்த மனுவில், ஒத்தக் கருத்துடைய கட்சித் தலைவர்களும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகளும் கையெழுத்து இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், கோரிக்கை மனுவுடன் பிரதமரை சந்திக்க இருக்கும் இந்தக் குழுவில், இந்தப் பிரச்னையில் ஒத்த கருத்துடைய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எனது அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி : விகடன் 

25 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எனது அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.//

என்ன முடிவு எடுத்தீங்க?

கூடல் பாலா சொன்னது…

முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சிதான் இருப்பினும் மத்திய அரசு இதை ஆமோதிக்கும் வரை போராட்டம் தொடரும் என இப்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது ...போராட்டம் தொடர்கிறது .........

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மக்களுக்கும் உணர்வு இருப்பது
அரசுக்குப் புரிகிறதா..!!!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தொடர்ந்து நடக்கும் போராட்டம்...

அச்சத்தின் ஆழத்தையும்
விளைவின் தீவிரத்தையுமே

வெளிப்படுத்துவதாக உள்ளது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இது முதல் கட்ட வெற்றி, வாழ்த்துக்கள்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பேஸ்புக், டுவிட்டர், பஸ்ல எல்லாம் உங்க பதிவை போட்டுவிட்டேன் மக்கா....

ராஜா MVS சொன்னது…

~*~முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சிதான் இருப்பினும் மத்திய அரசு இதை ஆமோதிக்கும் வரை போராட்டம் தொடரும் என இப்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது ...போராட்டம் தொடர்கிறது .........~*~

சரியான முடிவுதான் பாலா... இவர்கள் அவர்களை கை காட்டுவதும், அவர்கள் இவர்களை கை காட்டுவதும்.. இன்று நேற்று அல்ல காலம் காலமாக நடப்பதுதான். முழு வெற்றி கிட்டும் வரை போராட்டம் தொடரட்டும். அணு மின் நிலையம் மூடும் வரை போராட்டம் தொடரட்டும்...

இவ்வளவு நாள் ஊமை வேஷம் போட்ட மாநிலஅரசு இன்று பேசியுள்ளது என்றால் போராட்டம் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது...

கண்டிப்பாக மத்தியஅரசும் பேசும்...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வெற்றியை நோக்கி போராட்டம் செல்கிறது .
வாழ்த்துக்கள்.

Thennavan சொன்னது…

// koodal bala சொன்னது…

முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சிதான் இருப்பினும் மத்திய அரசு இதை ஆமோதிக்கும் வரை போராட்டம் தொடரும் என இப்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது ...போராட்டம் தொடர்கிறது .........//

போரட்டகரர்க்ளின் மன உறுதி மெய் சிலிர்க்க வைக்கின்றது . வாழ்த்துக்கள் நண்பர்களே

SURYAJEEVA சொன்னது…

பிடிவாதத்திற்கு பெயர் போனவர்களையே சிந்திக்க வைத்திருக்கிறது உங்கள் போராட்டம், கவலை படாதீர்கள் வானம் தொட்டு விடும் தூரம் தான்..

rajamelaiyur சொன்னது…

//
கூடங்குளம் பிரச்னை தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகள் தொடரக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.


//
நல்ல செய்தி

rajamelaiyur சொன்னது…

வெற்றி உங்கள் வசம்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்லதே நடக்கட்டும்....

Unknown சொன்னது…

இணைந்து குரல் கொடுப்போம்.வெற்றி பெறுவோம்

கடம்பவன குயில் சொன்னது…

போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோ.

மாநில அரசு அக்கறை காட்டுவது நல்ல சூழ்நிலை என்றாலும் மத்திய அரசை வற்புறுத்தி விரைவில் ஆவன செய்ய வேண்டும். மக்களின் நலனுக்காக அரசே தவிர மக்களின் நலனை கேள்விக்குறியாக்கும எந்த திட்டததையும் செயல்படுத்தக் கூடாது என்ற அடிப்படை அறிவு தெளிவு கூட மத்திய அரசிடம் இல்லாதது நம் துரதிர்ஷ்டமே.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

ஒரு சமயம் மின் உற்பத்திக்காக அணு மின் நிலையங்கள் தேவைப்பட்டன.சமீபத்தில் பூகம்பம்,சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தின்போது ஜப்பானில் அணு உலைகளில் ஏற்பட்ட பாதிப்பை பார்த்து மக்கள் எதிர்க்கும்படியாக உள்ளன.

shanmugavel சொன்னது…

முக்கியமான மாற்றம்.

இருதயம் சொன்னது…

ஹி ஹி நல்ல அரசியல் .....

அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதி
1 . அனைத்து வீடுகளுக்கும் தேவையான மெழுகுவர்த்தி இலவசமாக வழங்கப்படும்.
2 . நான் கொடுத்த மிக்சி , grinder போன்றவற்றை துடைத்து வைக்க துணியும் , நல்ல SHOW CASE ம் வழங்கப்படும்.
3 . பெட்ரோல் டீஸல் எல்லாம் தீர்ந்துவிட்டதால் மக்கள் பயணிக்க மின்சார ரயிலும் இல்லாததால் அனைவருக்கும் மாட்டுவண்டி வழங்கப்படும் ...

நண்பர் ... என்னை தவறாக நினைக்க கூடாது. இப்படி நடந்தாலும் ஆச்சரியம் இல்லை. தங்கள் உடலை கவனித்து கொள்ளுங்கள் ... நன்றி

சென்னை பித்தன் சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் பாலா!

சம்பத்குமார் சொன்னது…

முதல் கட்ட வெற்றி நண்பரே.முழு வெற்றி வெகுதொலைவில் இல்லை.

போராட்டம் தொடரட்டும். கண்டிப்பாய் வெற்றி பெற்றே தீருவோம்.மாற்றம் ஏதுமில்லை

ஆதரவுடன்
சம்பத்குமார்

Mahan.Thamesh சொன்னது…

மிக விரைவில் வெற்றி வரும் .

Unknown சொன்னது…

வெற்றி பெறுவோம் இது உறுதி!


புலவர் சா இராமாநுசம்

shaik சொன்னது…

என்ன மேன் கரண்ட் இல்லை என்று ஆர்பாட்டம் செய்கின்றீர்கள் அப்படி கரண்ட் உற்பத்தி பண்ண மின் நிலையம் வைத்தால் அதற்கும் வேண்டாம் என்று போராட்டம் செய்கின்றீர்கள், வடிவேலு பணியில் வேணும் ஆனால் வேண்டாம் என்று போட்டு குழப்புகின்றீர்கள், இப்படித்தான் இந்தியாவிற்கு முதல் முதலில் கம்ப்யூட்டர் வந்த பொது எதோ அணுகுண்டு வந்தது போல நம்முடைய கம்யூனிஸ்ட் தோழர்கள் பயம் கட்டினார்கள் கம்ப்யூட்டர் வந்தால் வேலை போய்விடும் ஆடு குட்டி போடாது கோழிகள் முட்டை போடாது என்று ஒரே பீதியை கிளப்பினார்கள், எதில் தான் ஆபத்து இல்லை பஸ் ரயில் விமானம் எல்லாம் விபத்து நடத்து கொண்டுதான் இருக்கின்றது அதற்காக அதில் பயணம் செய்யாமல் இருகின்றீர்களா, செல்போன் பேசினால் கதிர் வீச்சு ஆபத்து இருக்கு என்று தலை தலையாக அடித்து கொள்ளுகின்றார்கள் அதுக்காக செல் போன் பேசாமல் இருகின்றீர்களா நில நடுக்கம் வரும் என்று மர வீட்டில் குடி இருகின்றீர்களா அடுக்கு மாடி வீட்டில் தானே குடி இருகின்றீர்கள், எல்லா வற்றிலும் நல்லது கெட்டது இருக்கின்றது

பெயரில்லா சொன்னது…

இது முதல் கட்ட வெற்றி... வாழ்த்துக்கள்...ரெவெரி

நிரூபன் சொன்னது…

மத்திய அரசின் முடிவும் நல்லதோர் முடிவாக இருக்கும் என நினைக்கின்றேன்.